செய்திகள்

பிரதம நீதியரசர் பதவி விலக இணங்கினாரா? ‘பேச்சாளர்’ வெளியிட்ட தகவலால் சர்ச்சை

இலங்கையின் சர்ச்சைக்குரிய பிரதம நீதியரசர்  மொஹான் பீரிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் பொய்யென்று அவரது ஊடக பேச்சாளர் எனச் சொல்லிக்கொண்ட வழக்கறிஞர் விஜயரத்ன கொடிப்பிலி தெரவித்திருக்கிறார்.

இன்று வியாழக்கிழமை உச்சநீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் இதைத் தெரிவித்த அவர், தலைமை நீதிபதி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும் கூறினார்.

பிரதம நீதியரசர் தமது பதவியை இராஜினாமா செய்யவில்லை என்றும் அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார் என்றும் கொடிப்பிலி தெரிவித்தார். எனவே சம்பந்தப்பட்ட செய்தி தொடர்பாக உரிய திருத்தங்களை செய்வதற்கு நடவடிக்கைகளை எடுக்கும்படி அவரது ஊடக பேச்சாளர் கூறினார்.

மோஹான் பீரிஸின் பேச்சாளர் கொடிப்பிலி

மோஹான் பீரிஸின் பேச்சாளர் கொடிப்பிலி

மொஹான் பீரிஸ் தமது பதவியை இராஜினாமா செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நேற்று புதன்கிழமை ஊடகங்களிடம் தெரிவித்திருந்த கருத்துக்கள் குறித்து கேட்டபோது அது சம்பந்தமாக தம்மால் எதுவும் கூறமுடியாதென்று தெரிவித்தார்.

அதேவேளை, இது சம்பந்தமாக இன்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் பொது கருத்துக்களை தெரிவித்திருக்கும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பிரதம நீதியரசர் தமது பதவியை இராஜினாமா செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக மீண்டும் வலியுறுத்தினார்.