செய்திகள்

பிரபாகரனின் பேட்டியுடனான புரொன்லைன் விற்பனைக்கு அனுமதிக்கப்படுமா?

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பேட்டியை மறுபிரசுரம் செய்திருந்த, இந்தியாவின் புரொன்ட்லைன் சஞ்சிகை கொழும்பு விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை விற்பனைக்கு அனுமதிப்பதா என்பதை அதிகாரிகள் ஆராய்ந்துவருவதாக தெரிகின்றது.

சென்னையில் இருந்து தி ஹிந்து நாளிதழ் குழுமத்தினால் வெளியிடப்படும், புரொன்ட்லைன் சஞ்சிகையில், 1987ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பேட்டி ஒன்று வெளியாகியிருந்தது. அதனை தற்போது புரொன்ட்லைன் மறுபிரசுரம் செய்துள்ளது. புரொன்டலைன் சஞ்சிகையின் 30 ஆவது ஆண்டை முன்னிட்டே இந்தப் பேட்டி மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பேட்டியுடன் வெளியாகியுள்ள புரொன்ட்லைன் சஞ்சிகையை, இலங்கையில் விற்பனைக்காக விடுவிக்க சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

frontlineஇதன் பிரதிகளை அவர்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி அனுமதி கோரியிருந்தனர். ஆனால், பாதுகாப்பு அமைச்சு எந்தக் கருத்தையும் கூறாமல், ஊடக அமைச்சையே தீர்மானிக்கும் படி அனுப்பி விட்டதாக, ஊடக அமைச்சின் செயலர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.

தற்போது தாம் இந்த இதழில் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விடயங்கள் உள்ளடங்கியுள்ளதா என்று ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புரொன்ட்லைன் இதழைத் தடைசெய்வது குறித்த எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.