செய்திகள்

பிரிவினைவாதத்தினை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை அரசு முன்னெடுப்பதாக வீரவன்ச குற்றச்சாட்டு!

பிரிவினைவாதத்தினை ஊக்கவிக்கும் செயற்பாடுகள் அரசாங்கத்தினூடாக முன்னெடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய தேசிய சுதந்திர முன்னணி கட்சித் தலைவர் விமல் வீரவன்ச, விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் 300க்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமர வீர விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளரான அருட்தந்தை இம்மானூவேலை சந்தித்துப் பேசியுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

நரேஹன்பிட்டி அபயராம விகாரையில் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட வீரவன்ச இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளரான அருட்தந்தை இம்மானுவேலை வெளிவிவகார அமைச்சர் லண்டனில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கையில் மீண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கும் பிரிவினைவாதத்தினை இலங்கையில் ஊக்குவிக்கும் செயற்பாடுகள் தொடர்பில் இந்தப் வேச்சுவார்த்தை அமைந்துள்ளது.

அது மட்டுமல்லாது இலங்கையிலிருந்து வெளியேறிய விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான 4 இலட்சம் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்கான செயற்பாடுகள் இவ்வரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என உறுதி செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 300 க்கும் அதிகமானவர்களை விடுதலை செய்வது தொடர்பில் இந்தப் பேச்சுவார்தையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.