செய்திகள்

பிரெஞ்சு ஓபன்: ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை வென்றார் வாவ்ரிங்கா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் வாவ்ரிங்கா.

உலகின் நம்பர்-1 வீரரான ஜோகோவிச், பிரெஞ்சு ஓபனில் முன்னணி வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். 9 முறை சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நடாலை காலிறுதியில் வீழ்த்திய ஜோகோவிச், நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரேவை தோற்கடித்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதனால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வெல்லுவதற்கு ஜோகோவிச்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இன்று நடந்த இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த வாவ்ரிங்கா 4-6 6-4 6-3 6-4 என்ற செட் கணக்கில் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச்சை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்று அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியுள்ளார். இந்த வெற்றி மூலம் தொடர்ந்து 28 ஆட்டங்களில் வெற்றி பெற்று வந்த ஜோகோவிச்சின் வெற்றி பயணம் முடிவுக்கு வந்துள்ளது. வாவ்ரிங்கா வெல்லும் இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும்.