செய்திகள்

புதிததாக பரவிவருகின்ற டெல்டா வைரஸ் தொற்றானது இலங்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – பேராசிரியர் மலிக் பீரிஸ்

புதிததாக பரவிவருகின்ற டெல்டா வைரஸ் தொற்றானது இலங்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் வைரஸ் தொடர்பான நிபுணரும் பேராசிரியருமான மலிக் பீரிஸ் எச்சரித்துள்ளார். இதன்காரணமாக இலங்கையில் மிகவும் மோசமான கொரோனா தொற்றுப் பரவல் எதிர்வரும் மாதங்களில் ஏற்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.கொரோனா தொற்று பரவலானது அடுத்த இரண்டு மாதங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் இரண்டு கட்ட தடுப்பூசி மருந்துகளையும் பெற்றுக்கொள்வது அவசியமானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய மற்றும் தென்கிழக்காசிய பிராந்தியத்தில் ஆரம்பத்தில் கொரோனா தொற்று பரவலில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்த போதிலும் தற்போது தெற்காசியா உள்ளடங்கலாக உலகளாவிய ரீதியில் தொற்றுப் பரவல் அதிகரித்துவருகின்றது.இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் காரணமாக, இந்த அதிகரிப்பு ஏற்பட்டுவரும் நிலையில், எதிர்வரும் நாட்களில் அது பாரிய தாக்கத்தை இலங்கையில் ஏற்படுத்தும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

எனினும் இலங்கையில் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பிலும் பேராசிரியர் மலீக் பீரிஸ், அரசாங்கத்திற்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.“கொரோனாவின் தாக்கம், கட்டுப்பாடு, வாய்ப்புகள் மற்றும் நெருக்கடியில் இருந்து விரைவாக மீளும் திறனை கட்டியெழுப்பல்” என்ற தலைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.(15)