செய்திகள்

புதிய அரசில் டக்ளஸ், கருணாவுக்கு இடமில்லை: ஜனாதிபதி மைத்திரி உறுதி

மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சராக இருந்த விநாயகமூர்த்தி முரளதரன் (கருணா) ஆகியோருக்கு புதிய அரசாங்கத்தில் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான இன்றைய சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

முன்னைய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட இந்தக் கட்சிகள், மக்களால் நிராகரிக்கப்பட்டவை. அவர்களுக்காக மக்கள் வாக்களிக்கவில்லை. அத்துடன் மக்கள் விரோதச் செயற்பாடுகளையும் அவர்கள் முன்னெடுத்தவர்கள். அதனால் அமைச்சர் பதவிகளுக்கு அவர்களை நியமிக்கக்கூடாது என கூட்டமைப்பினர் வலியுறுத்தியதாகத் தெரிகின்றது.

இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாகத் தெரிகின்றது.

இதனைவிட வடக்கு கிழக்குப் பகுதிகளில் இடம்பெறும் காணி அபகரிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்களையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்த கூட்டமைப்பினர், அவற்றுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்கள். இதனை ஏற்றுக்கொண்ட மைத்திரி, அது குறித்து உரிய நடவடிக்கை விரைவாக எடுக்கப்படும் என உறுதியளித்தார்.