செய்திகள்

புதிய இந்து சமுத்திர பாதுகாப்பு மூலோபாயத்துடன் ஒத்திசையும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை

-லோ.விஜயநாதன்

பலராலும் அதிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் சில தினங்களுக்கு முன்னர் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதுவே இந்தியப் பிரதமர் ஒருவர் 1987ம் ஆண்டு ராஜீவ் – ஜயவர்தனா ஒப்பந்தத்தின் பின்னர் சுமார் 28 வருடங்கள் கழித்து இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயமுமாகும்.

2015-03-13T125854Z_520105379_GM1EB3D1M3R01_RTRMADP_3_SRI-LANKA-INDIAராஜீவின் 1987 ஆம் ஆண்டு விஜயத்தைத் தொடர்ந்து சிறிலங்காவில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதுடன் சிறிலங்காவின் பல பகுதிகளிலும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆனால் இம்முறை திரு மோடி அவர்கள் சிறிலங்கா பாராளுமன்றத்தில் சுமார் 40 நிமிடங்கள் சரளமாக ஆங்கிலத்தில் உரையாற்றியிருந்ததுடன் அனுராதபுரத்திற்கும் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய வடக்கின் பிரதேசங்களுக்கும் விஜயம் செய்திருந்தார். அவர் தனது பாராளுமன்ற உரையில் குறிப்பாக இரண்டு நாடுகளுக்குமிடையிலான தொன்று தொட்ட உறவுகள், கலாசாரம், மொழி, மதரீதியிலான ஒற்றுமைகள் இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கான உத்தரவாதம், பயங்கரவாதத்தை முறியடிப்பதில் இரு நாடுகளும் பெற்ற வெற்றிகள், இலங்கையில் அனைத்தின மக்களும் சமத்துவமாக நடத்தப்படல், 13வது திருத்தத்தை அமுல்படுத்துதல் மற்றும் அதற்கும் மேல் சென்று அதிகாரத்தைப் பகிர்தல் போன்றவற்றை குறிப்பிட்டிருந்தார்.

Modi-TNAஇதன் பின்னர் சலிக்காமல் நாட்டின் பல தலைவர்களையும் அரசியல் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் அரசியல்வாதிகளையும் சந்தித்திருந்தார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் சந்தித்து சுமார் ஒரு மணித்தியாலம் அவர் உரையாடியிருந்தார். அந்த உரையாடலின் போது அவர் கூட்டமைப்பினரிடம் நீங்கள் இந்தியாவை நம்புகிறீர்களா? எனக் கேட்டிருந்தார். அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பொறுமை அவசியம் என்பதையும் வலியுறுத்தியிருந்தார்.

Tip of the Icebergமேல்லோட்டமாக பார்க்குமிடத்து இந்திய பிரதமர் மோடியின் இரு நாள் இலங்கை விஜயமானது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள புதிய நெருக்கமாகவும், புதிய ஆட்சிக்குக்கிடைதுள்ள அங்கீகாரமாகவும், இந்திய முதலீட்டு சந்தை வாய்புகளை அதிகரிப்பதற்கான பயணமாகவும் காணப்படுகின்ற போதிலும் , உண்மையில் இந்துசமுத்திர பிராந்தியப் பாதுகாப்பை மையபடுத்திய நகர்வின் தொடர்ச்சியாகவே இந்த பயணம் அமைந்திருந்தது. அதாவது மோடி இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் சிசெய்ல்ஸ் (Seychelles) மற்றும் மொரீசியஸ்  (Mauritius) போன்ற இந்துசமுத்திர நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக மாலைதீவுக்கும் செல்லவிருந்த நிலையில் அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை காரணமாக ( முன்னால் ஜனாதிபதி மொகமட் நஷீத்க்கு 13 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கபட்டது ) அவ் விஜயம் கைவிடப்பட்டிருந்தது. சிசெய்ல்ஸ்க்கு 1981 க்கு பின்னரும் மொரீசியசுக்கு  1987க்கு பின்னரும் இந்திய பிரதமர் ஒருவர் மேற்கொண்ட பயணமாக இவ் விஜயம் காணப்படுகிறது.

indian_ocean_sea_lanesஇந்திய ஆய்வாளர் திரு.N.சத்தியமூர்த்தி அவர்கள் பிராந்தியப் பாதுகாப்புப் பொறிமுறையானது இந்திய மூலோபாய மற்றும் வரலாற்று ரீதியிலான பாதுகாப்புக் கரிசனைகளுடன் இந்தியாவைச் சுற்றியுள்ள மிகச் சிறிய நாடுகளின் கவலைகளையும் சேர்த்து கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்று கூறியிருந்தார். இதையே இந்தியாவின் மோடி அரசாங்கம் கவனத்தில் எடுத்து செயற்படுத்தி வருகின்றது. இதன் ஒரு தந்திரோபாயமாகத்தான், இந்திய ஆட்சிக்கட்டமைப்பின் மிக உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் மோடி, இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் 13 ஆம் திருத்தச் சட்டத்துக்கும் அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிருங்கள் என்று இலங்கை அரசை கேட்டிருப்பதாக கருதமுடியும்.

இது இந்திய புதிய பாதுகாப்பு மூலோபாயக் கோட்பாட்டின்படி, இலங்கையின் ஸ்திரத்தன்மையே இந்தியாவின் பாதுகாப்புக்கு வழிவகுக்கும் என்ற புரிதலில் ஏற்பட்ட கொள்கை மாற்றம் காரணமான ஒரு வேண்டுகோளே அன்றி தமிழ் மக்களின் பால் உள்ள கரிசனை காரணமாக ஏற்பட்டதொன்றல்ல.

Narendra-Modi-Sri-Lanka-triமோடியின் உரைக்கு பாராளுமன்றத்தில் நன்றி உரையாற்றிய சிறிலங்காவின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல இனவாதத்தை செழுமைப்படுத்தும் வகையில் தனது அண்மைக்கால உரைகள் மற்றும் செவ்விகளை ஒத்ததான ஒரு உரையினை நிகழ்த்தியிருந்தார். அதில் குறிப்பாக தென்னிந்தியாவில் முதலாவது தமிழ் அரசை உருவாக்கிக் கொடுத்தவர்கள் சிங்களவர்கள் என்று வரலாற்றை அப்படியே திரித்துக் கூறி நன்றி உரைக்கு எந்தவித சம்பந்தமுமில்லாத விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.

ரணிலின் அண்மைக்கால நடவடிக்கைகளையும் உரைகளையும் உற்று நோக்கினால், ஆட்சிக்கு வரும்முன் சமாதானம் என்றும் வந்தபின் இனவாதம் என்றும் பண்டாரநாயக்க, டட்லி சேனநாயக்க, சந்திரிக்கா, ராஜபக்ச என்று மாறி மாறி ஆட்சிக்கு வந்தவர்கள் சிறிலங்காவில் கடைப்பிடித்து வந்த இனவாத கொள்கையையே அவர் திரும்பவும் பின்பற்றத் தொடங்கியுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. சிங்களவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக கைக்கொள்ளப்படும் இந்த உபாயமே இனப்பிரச்சனைகளின் தோன்றுவாயாகவும் இவ்வினச்சிக்கல் தீர்க்கப்படாமல் நீண்டு செல்வதற்கான காரணியாகவும் அமைந்துள்ளது.

z_p03-President-uஅதேசமயம், புதிய அரசாங்கம் மிகவும் வினைத்திறனுடனும் சாதுர்யமாகவும் தனது வெளியுறவுக் கொள்கையைக் கையாண்டு வருகிறது. அதன் ஒரு தொடர்ச்சியாகவே பொது நலவாய நாடுகளின் தலைவராக இருக்கும் தற்போதைய புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இங்கிலாந்துப் பயணமானது வெற்றிகரமாக அமைந்திருந்தது. இப்பயணத்தின்போது அவர் இங்கிலாந்து மகாராணியையும் பிரதமரையும் சந்தித்து உரையாடியிருந்தார். இவ் விஜயத்தைப் பற்றி ஜனாதிபதி மைத்திரி பின்வருமாறு ஊடகங்களுக்கு கூறியிருந்தார். அதாவது, பிரிட்டனின் மனதை வெல்வதானது முழு ஐரோப்பாவையும் வெல்வதற்கு சமன் என்று கூறியிருந்தார்.

Mangala-e1426707016905அதேநேரம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமவீரவின் அண்மைய பராராளுமன்ற உரையானது, சிறிலங்காவின் வரலாற்றில் இடம்பெற்ற மிகச் சிறந்த உரைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. அதில் மாறி வரும் உலக ஒழுங்கில், சர்வதேச உறவுகளின் கொள்கைகளுக்கேற்ப ஒரு அனுசரிப்பு கொள்கை ஏன் இலங்கைக்கு அவசியம் என்று விளக்கமளித்திருந்தார். ஒரு நாட்டின் குடிமக்களின் மனித உரிமைகள் , சமத்துவம் ஆகியவற்றைக் காட்டிலும் ஒரு நாட்டின் இறையாண்மை மேலானது என்ற வெஸ்பாலியன் கொள்கையில் இருந்து விடுபட்டு, எப்பொழுது ஒரு நாடு தனது குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு தவறுகிறதோ அப்பொழுதே அந்த நாட்டின் இறையாண்மை தாழ்ந்து போய் பாதுகாப்பிழந்து போகிறது என்ற இன்று உலகில் முனைப்பு பெற்று வரும் சர்வதேச உறவுகளின் ஆங்கிலச் சிந்தனையை ஏன் இலங்கை தற்போது கடைப்பிடிக்க வேண்டும் என்று இரத்தினச் சுருக்கமாக அவர் விளக்கியிருந்தார்.

Mahinda-Rajapaksa-laughsவெஸ்பாலியன் கோட்பாட்டில் சிறப்பிடம் வழங்கப்பட்டிருந்த இறையாண்மையை தமிழ் மக்களுக்கெதிரான மனித உரிமை மீறல்களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு ராஜபக்ஸ அரசாங்கம் கடைப்பிடித்து வந்த அரசியல் யுக்திக்கு நேர் எதிரான ஒரு யுக்தி இதுவாகும். ராஜபக்ஸவின் இறையாண்மை கோட்பாடு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் ஆபத்தை நாட்டுக்கு கொண்டுவந்திருந்த நிலையில், இறையாண்மையை தன்னை பாதுகாக்கும் கவசமாக பயன்படுத்தல் என்ற நிலையில் இருந்து இறையாண்மைக்கு பொறுப்புணர்வுக்குரிய அந்தஸ்து வழங்கி அதன் மூலம் தன்னை பாதுகாக்கும் ஒரு நிலைக்கு ரணில் அரசாங்கம் தனது வெளிநாட்டு கொள்கையில் ஒரு தந்திரோபாய மாற்றத்தை செய்துள்ளது. இது, ஒருபுறம் ஐ. நா மனித உரிமைகள் சபையை எதிர்கொள்வதற்கும் மறுபுறம் பொருளாதார அனுகூலங்களை பெறுவதற்கும் உதவும் என்று அரசாங்கம் நம்புகிறது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் மீதான முன்னைய அரசின் தடையை மீள் பரிசீலிக்கவிருப்பதான அரசின் அறிவிப்பும் இந்த கொள்கை மாற்றத்தின் ஒரு எதிரொலியே.

un_commissioner_hr_reuters__468ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையின் இலங்கை தொடர்பான யுத்தக் குற்ற விசாரணை அறிக்கை செப்ரெம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டமையானது, புதிய அரசுக்கு அதன் கொள்கை மாற்ற அடிப்படையில் உள்ளக விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கவேண்டும் என்ற அடிப்படையிலேயே நடைபெற்றது.

தற்போது விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னரே விசாரணைக்குழு அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஏப்பிரலில் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்ட தேர்தலில் இந்த அரசாங்கம் பாதிக்கப்படக் கூடாது என்பதும் அறிக்கை பின்போடப்பட்டமைக்கும் பின்போட கோரப்பட்டமைக்கும் காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனால் , ஏப்ரலில் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசுக்கு ஆரம்பத்தில் இருந்தே இல்லை. தற்போது தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இது மேலும் பின்னோக்கி செல்வது உறுதிப்படுத்தப்படுகிறது.

அப்படியெனில் ஏன் அந்த அறிக்கை மார்ச் மாதம் வெளிவருவதை தள்ளிபோடக் கேட்டார்கள் என்ற ஒரு கேள்வி எழுகிறது. இங்கேதான் தமிழ் மக்கள் மிக முக்கியமாக ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். அதாவது, இந்த அறிக்கை பின்போடப்பட்டமையும் , செப்ரெம்பரில் இந்த அறிக்கை வெளிவந்த பின்னர் அரசாங்கத்தின் விசாரணைக் குழு அமைக்கப்படுவதுமானது, ஐ. நா அறிக்கையின் பின்னர் அதன் அடுத்த கட்ட செயன்முறைகளான பாதுகாப்புச் சபைக்கு பாரப்படுத்துதல், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலை நாடுட்டுதல் போன்ற முழுச் செயன்முறைகளையம் இந்த உள்ளக விசாரணை முடங்கவைக்கும் என்பதாகும். அத்துடன் , இந்த விசாரணையானது மீண்டும் குற்றவாளிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட போகின்ற அபாயமும் உள்ளது. நடந்த, நடைபெற்று வருகின்ற, நடைபெறப்போகின்ற சிறிலங்காவின் விசாரணைகள் பொதுவாக முடிவடைவதில்லை. அப்படியே முடிந்தாலும் அவை வெளிவருவதில்லை என்பது சிறிலங்காவின் வரலாற்றை புரட்டிப்பார்க்கும் எல்லோருக்கும் தெரிந்த விடயமே. இது மைத்திரி- ரணில் அமைக்கும் விசாரனைக் குழுக்களுக்கு ஒன்றும் விதிவிலக்காக இருக்கப்போவதில்லை.

field-marshal-sarath-fonseka1இந்த நேரத்தில் தான், புதிய ஆட்சியின் 100 நாள் திட்டத்தில் குறிப்பிடப்படாத ஒரு விடயம் நடைபெற்றிருக்கிறது. அதாவது, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகவுக்கு பீல்ட் மார்ஷல் என்ற அதி உயர் இராணுவ நட்சத்திரப் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதாவது யுத்த குற்ற விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டிய ஒருவருக்கு அவசர அவசரமாக இந்த அதிஉச்ச கௌரவம் வழங்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. சர்வதேச அரங்கில் உண்மையான உள்ளக யுத்தக் குற்ற விசாரணையை மேற்கொள்ளப்போவது போல பாசாங்கு செய்யும் அதேவளை, குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் ஏக காலத்தில் அரசு முடுக்கிவிட்டுள்ளது.

உண்மை இப்படி இருக்கும்பொழுது, எம்மில் சிலர் எவ்வாறு சிறிலங்காவின் உள்ளக விசாரணையை வரவேற்கிறார்கள் என்பது தமிழ் மக்களிடையே புரியாத புதிராகவே உள்ளது. அதேவேளை, இன்னும் சிலர் தற்போது 13ஐப் பெறுவோம் பின்னர் இறுதித் தீர்வை பற்றிக் கதைப்போம் என கூற முற்பட்டுள்ளனர். ஆனால் தாங்கள் கூறும் ‘பின்னர்’ என்பது எப்போது என்று அவர்களால் கூறமுடியவில்லை.

சர்வதேசம் தலையிட்டிருக்கும் எமது பிரச்சினையில் தலையிட்டிருக்கும் இந்த தருணத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் இறுதித் தீர்வு பற்றி பேசாது வேறு எப்போது பேசப்போகிறார்கள். உண்மையில் எம்மிடையே இறுதித் தீர்வு பற்றிய சரியான தெளிவின்மையே இப்படியான கருத்துக்கள் எழுவதற்கு காரணமாக அமைகின்றன.

இந்தியப் பிரதமர் மோடியே 13க்கு அப்பால் அதிகாரங்களை பரவலாக்குங்கள் என்று கோரிக்கை வைக்கும் போது எம்மில் சிலர் வாய் திறக்க பயப்படுவது சிங்களத்தை மேலும் இறுக்கமான நிலைப்பாட்டிற்கு கொண்டு செல்லவே வழியமைத்துக்கொடுக்கும்.

Palali-land-230413-seithy-001அத்துடன், சிங்கள தேசம் ஆக்கிரமித்துள்ள வலிவடக்கின் அதியுயர் பாதுகாப்பு பிரதேசமான 6000 ஏக்கரில் 1000 ஏக்கரை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதையும், 13 அமுல்படுத்த உள்ளதையும் கூறி, சிங்கள தேசத்தை அனுசரித்து போவதே நல்லதென்று சிலரால் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இவர்கள் ஆயுதப் போராட்டம் தொடங்க முன்னர் இருந்த காலத்தை மறந்தவர்களாகவே இவ் அறிவுரைகளை வழங்குகின்றனர். ஆயுதப் போராட்டம் தொடங்க முன்னர் இன்று இருக்கும் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் இருந்திருக்கவில்லை. இலங்கை – இந்திய உடன்படிக்கை ஏற்பட்ட போதும் கூட எந்தவொரு பாரிய அதியுயர் பாதுகாப்பு வலயங்களும் வடகிழக்கில் இருந்திருக்கவில்லை. ஆனால், அப்பொழுதே 13 ஆவது திருத்தத்தை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நிராகரித்திருந்தனர்.

தற்போதைய யதார்த்தம் என்னவெனில், 13வது திருத்தச்சட்டமானது ஏற்கனவே சிறிலங்காவின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள விடயமாகும். எப்படி கச்சதீவானது, இந்திய – இலங்கை ஒப்பந்தம் மூலம் இலங்கைக்கு வழங்கப்பட்டதோ, எப்படி அதைத் திரும்பப் பெறமுடியாதோ அல்லது எப்படி சிறிமா -சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையை விட்டு வெளியேற்றிய இந்திய வம்சாவளி மலையக தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரமுடியதோ அதைப்போன்றதே இலங்கை – இந்திய ஒப்பந்தம் மூலம் ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்த சட்டத்தையும் இலங்கையால் நடைமுறைப்படுத்தாமல் இருக்கமுடியாது.

Rajive and Prabhaசொத்தலான இந்த 13ஐ அமுல்படுத்துவதற்காக இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான ஆயுதப் போராட்டங்களும் அதன் பின்னரான ஜனநாயகப் போராட்டங்களும் நடைபெற்றிருக்கவில்லை. அவை முழுக்க முழுக்க சமஷ்டி ரீதியிலான வடகிழக்கு பிராந்தியங்களுக்கு சுயாட்சி வழங்கக் கூடிய தீர்வை நோக்கிய போராட்டங்களாகவே இருந்தன, இருந்தும் வருகின்றன என்பதை கனவத்தில் கொள்ளல் வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையே என்பதை தமிழ் மக்கள் ஏகோபித்த குரலில் உறுதியாக சொல்வதற்கான மிகச்சிறந்த சந்தர்ப்பம் இதுவே ஆகும். இந்த சந்தர்ப்பம் தவற விடப்பட்டால், அது கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்ய முயற்சிக்கும் செயலாகவே அமையும். இதனை உணர்ந்த கூட்டமைப்பின் ஒரேயொரு தலைவராக வடக்கு முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் இருப்பது போல தெரிகிறது. தற்போதைய சந்தர்ப்பத்தில், விக்னேஸ்வரன் நிறைவேற்றிய இன அழிப்பு தீர்மானமும் 13 ஆவது திருத்த சட்டம் பற்றிய அவரது அனுபவரீதியானதும் சட்டப் புலமை ரீதியானதுமான கருத்துக்களும் காத்திரமான ஒரு அரசியல் கருத்து வினைப்பாட்டை (Political Discourse) உருவாக்கியிருக்கின்றது என்று குறிப்பிடலாம்.

SJV042613Cஎமது அரசியல் தலைமைத்துவங்கள் இதனை நினைவில் நிறுத்தி, தமிழ் மக்களின் விடியலுக்கான பாதையை தொடர்ந்ததும் இட்டுச் செல்ல முயலவேண்டும். அதை விடுத்து ஒருவர் மீது ஒருவர் சேறு பூசும் அரசியல் செயற்பாடுகளில் கவனம் செலுத்துவது ஆரோக்கியமான அரசியல் செயன்முறை அன்று. கருத்துவேற்றுமை எழுவது ஜனநாயக சூழலில் சகஜமான ஒன்று. அதை கருத்தியல் ரீதியிலேயே உணர அல்லது தெளிவுபடுத்த முற்படவேண்டும். மாறாக மூன்றாம் நபர்கள் முன்பாக அநாகரிகமான செயற்பாடுகளில் ஈடுபடுவது எம்மை நாமே தரம் தாழ்த்திக் கொள்வதாகவே அமையும்.

இன்றும்கூட, புலம்பெயர் தமிழ் மக்களின் போராட்டங்களே சர்வதேச தளத்தில் எமது பிரச்சினையை தக்கவைத்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையின் இலங்கை மீதான யுத்தக்குற்ற விசாரணையாக இருந்தாலென்ன, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் யாழ் விஜயமாக இருந்தாலென்ன அல்லது கமரூனின் விஜயம் காரணமான தாக்கம் காரணமான மோடியின் யாழ் விஜயமாக இருந்தாலென்ன இவை எல்லாவற்றிலும் புலம்பெயர் தமிழ் மக்களின் போராட்டங்கள் கணிசமான ஆதிகத்தை செலுத்தியுள்ளன.

39புதிய ஆட்சிக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் பாரியளவிலான எதிர்பை காட்டமாட்டார்கள் என்ற எதிர்பார்பில் பிரித்தானியாவைச் சென்றடைந்த புதிய ஜனாதிபதி மைத்திரிக்கு, பாரிய எதிர்ப்பு பிரித்தானிய வாழ் தமிழ் மக்களினால் காட்டப்பட்டது. இது அவருக்கு தர்மசங்கடத்தை அங்கு ஏற்படுத்தியிருந்தது.

ஆனாலும் கூட வருத்தமளிக்கும் ஒரு விடயமாக, சுமார் 15பேர் வரையான புலம்பெயர் தமிழர்கள் தமது தனிப்பட்ட நலன்களுக்காக ஜனாதிபதி மைத்திரியை லண்டனில் சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் உரையாடி இருக்கிறார்கள். இச்சந்திப்பை மேற்கொண்ட யாழ்ப்பாணத்தின் புகழ் பூத்த பிரபல கல்லூரி ஒன்றின் பழைய மாணவர்கள், இதனை ஒரு பெருமை என்றும் சாதனை என்றும் காட்டும் வகையில் ஊடகங்களுக்கு புகைப்படங்களையும் செய்திகளையும் வழங்கியிருந்தனர். இவர்களின் இத் தனிப்பட்ட சந்திப்பை சிறிலங்காவானது பிரித்தானிய வாழ் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பாக காட்டமுனைகின்றது.

இப்படியாக சிலர் அமைப்புரீதியாக மைத்திரியை சந்த்தித்மை குறித்து சம்பந்தப்பட்ட அமைப்புக்களும், புலம்பெயர் அமைப்புக்களும் மௌனம் காப்பதானது பின்னாளில் மேலும் பலர் தமது தனிப்பட்ட நலன்களுக்காக ஒட்டுமொத்த தமிழ் மக்களின் போராட்ங்களையும் அடகு வைப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு ஊக்கமளிப்பதாக அமைந்துவிடும்.