செய்திகள்

புதுவை இரத்துனதுரை குறித்து கையளிக்கப்பட்ட கடிதத்துக்கு ஜனாதிபதியிடம் இருந்து பதில் இல்லை: ஐங்கரநேசன்

கவிஞர்  புதுவை இரத்துனதுரை தொடர்பான விபரங்களைத் தெரியப்படுத்துமாறு கோரி அவரது குடும்பத்தினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கையளிக்கக் கோரி  என்னிடம் கடிதம் தந்திருந்தனர். மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்திருந்தபோது அக்கடிதத்தை அவரிடம் கையளித்திருந்தேன்.

பொதுமக்கள் சிலர் தந்த முறைப்பாட்டுக் கடிதங்களையும் அவரிடம்  கொடுத்திருந்தேன். பொதுமக்களின் முறைப்பாட்டுக் கடிதத்துக்கு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து பதில் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், கவிஞர் புதுவை இரத்துனதுரை பற்றிய கடிதத்துக்கு இதுவரை ஜனாதிபதியிடம் இருந்து எதுவித பதிலும் வரவில்லை என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

அன்பே சிவம் அமைப்பின் அனுசரணையுடன் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் தமிழர் நலன்புரிச் சங்கம் வடக்கு, கிழக்கு மாணவர்கள் 200 பேருக்குத் துவிச்சக்கரவண்டிகளை வழங்கியுள்ளது. இதற்கான நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை வல்வை முத்துமாரி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்ந்pகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அவர் அங்கு உரையாற்றுகையில்,

“ஜே.ஆர் ஜெயவர்த்தனா ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் படையினரின் கெடுபிடிகளுக்கு அஞ்சி தமிழ் இளைஞர்கள் பெருவாரியாக நாட்டை விட்டு வெளியேறினார்கள். இளைஞர்கள் இங்கே இருந்தால் போராட்ட அமைப்புக்களில் இணைந்து விடுவார்கள் என்று கருதிய, ஜே.ஆர் ஜெயவர்த்தனா அரசு இளைஞர்கள் வெளியேறுவதற்கு வசதியாகப் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் கதவுகளைத் திறந்து விட்டிருந்தது.

அவரின் முட்டாள்தனத்தால் வெளியேறிய இளைஞர்கள்தான் தங்களுடைய உழைப்பால் போராட்டத்தைத் தாங்கினார்கள். அவர்கள்தான் போர் முடிந்த பிறகும் பாதிக்கப்பட்ட எமது மக்களையும் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

புகலிட நாடுகளில் ஆலயங்களை அமைத்து அந்த ஆலயங்களின் மூலம் ஆன்மீகப் பணியோடு சமூகப் பணிகளையும் ஆற்றி வருகிறார்கள். சூரிச் சிவன்கோவிலைச் சேர்ந்தவர்கள் கவிஞர் புதுவை இரத்தினதுரையினுடைய பக்திப் பாடல்கள் அடங்கிய இறுவட்டு ஒன்றை வெளியிட்டிருந்தார்கள்.  போராட்டப் பாடல்களைப் பாடிய புதுவை இரத்தினதுரை, தங்கள் துன்ப துயரங்களைச் சொல்லி இறைவனிடம் மன்றாடுகின்ற பாடல்களாகவே இவற்றை இயற்றியிருந்தார். இந்தப் பாடல்கள்தான் சூரிச் சிவன்கோவில் அடியார்கள், அன்பே சிவம் என்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்ற அமைப்பை உருவாக்குவதற்கு உந்து சக்தியாக அமைந்தது.

கவிஞர் புதுவை இரத்தினதுரை இந்த அரங்கில் இன்று இருந்திருந்தால் அன்பே சிவத்தின் சமூகத் தொண்டுகளைப் பார்த்து எங்கள் எல்லோரையும்விடக் கூடுதலாக மகிழ்ச்சி கொண்டிருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், சீ.யோகேஸ்வரன் ஆகியோருடன் வடக்கு, கிழக்கு மாகாணசபைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

suresh

sara

yogeswaran

03

04

05

06

07

08