செய்திகள்

புன்னாலைக்கட்டுவனில் மினிபஸ் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதில் குடும்பஸ்தர் படுகாயம்

யாழ்.புன்னாலைக்கட்டுவன் வடக்கிலிருந்து யாழ்ப்பாணம் நகர்ப் பகுதி நோக்கிச் சென்ற மினிபஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்ச் சைக்கிளில் சென்றவரை மோதித் தள்ளியதில் அவரது கால் முறிவடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இந்த விபத்துச் சம்பவம் இன்று திங்கட்கிழமை (06.04.2015) நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புன்னாலைக்கட்டுவன் தெற்குக் கண்ணன் கடையடிப் பகுதியில் முன்னால் சென்ற அரச பேருந்தை முந்திச் செல்லும் நோக்கில் அதிகரித்த வேகத்துடன் வந்த மினிபஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்ச் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தரை பின்னால் பலமாக மோதித் தள்ளியது.

இதனால் அண்மையிலுள்ள மஞ்சள் கோட்டுப் பாதசாரிக் கடவை வரை மோட்டார்ச் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் தூக்கி வீசப்பட்டார்.இதனால்,அவரது ஒரு கால் முறிந்ததுடன்,அவர் பயணித்த மோட்டார்ச் சைக்கிளும் பலத்த சேதங்களுக்குள்ளானது.விபத்து இடம்பெற்ற இடத்தில் இரத்தக் கறைகளும் படிந்து காணப்பட்டன. ஏழாலை தெற்கு அமெரிக்க மிஷன் பாடசாலையில் கல்வி கற்கும் தனது மகளை அழைக்கச் சென்ற போதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற பின் விபத்து ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருந்த மின்பஸ்சின் சாரதியே படுகாயமடைந்த குடும்பஸ்தரை வைத்தியசாலையில் சேர்ப்பித்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.குறித்த பகுதியில் மஞ்சட் கோட்டுப் பாதசாரிக் கடவை அமைக்கப்பட்டுள்ள நிலையில் மினிபஸ் சாரதி அதனையும் பொருட்படுத்தாது அதிகரித்த வேகத்துடன் வந்தமையே விபத்துக்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்தில் இதே இடத்தைச் சேர்ந்த பொன்னுத்துரை உதயகுமார் என்பவரே படுகாயமடைந்தவராவார்.

விபத்து இடம்பெற்றதைத் தொடர்ந்து உடனடியாகச் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் பல மணித்தியாலங்கள் ஆகியும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை.இதனால் கடும் சேதத்துக்குள்ளான மோட்டார்ச் சைக்கிள் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அண்மையில் இன்று மாலை வரை அநாதரவாக நின்றமையைக் காண முடிந்தது.

IMG_1953 IMG_1959 IMG_1960

யாழ்.நகர் நிருபர்-