செய்திகள்

புறக்கணிக்கப்பட்ட தமிழர்களுக்கு நியமனம்: நீதிமன்றில் உறுதி

தகுதியிருந்தும் புறக்கணிக்கப்பட்ட தமிழ் தேர்வுநாடிகளுக்கு ஜுலை 1ம் திகதிக்கு முன் நியமனங்கள் வழங்கப்படும் என மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் அப்பொழுது இருந்த அரசின் கிழக்கு மாகாண சபை ஆளுநர் மேஜர் மோகன் விஜே விக்கரமசிங்கவினால் முகாமைத்துவ உத்தியோகத்தரும் ஏப்ரல் மாதம் அபிவிருத்தி உத்தியோகத்தரும் பணியமர்த்தபட்டனர்.

கொள்கை ரீதியாக தேர்வுகளிலே உயர்மதிப்பெண்களை பெற்ற பொழுதும் தமிழர் இப்பதவிகளுக்கு நியமிக்கப்படவில்லை மாறாக சிங்கள முஸ்லிம் தேர்வுனாடிகளே பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

இது குறித்து தமிழ் தேர்வுனாடிகள் விசாரித்த பொழுது அடுத்து வரும் 3 வருடங்களுக்கு தமிழர் குறித்த நியமனங்களை பெறப்போவதில்லை என்ற பதிலையே பெற்றனர். இந்த நியமனங்களுக்கு எதிராக தமிழ் தேர்வுநாடிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலே எழுத்தாணைகள் கோரி இரு வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்

நிலைமை இவ்வாறிருக்க கடந்த 2015 ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் விளைவாக புதிய ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ நியமிக்கபட்டார். இவர் பதவியமர்த்துவதில் கடந்த காலத்தில் இடம்பெற்ற புறக்கணிப்புகள் தவறு என்பதை ஏற்றுகொண்டதோடு இதற்கான தகுந்த நடவடிக்கையினை தகுதியுள்ள தமிழ் தேர்வுனாடிகளை பணியமர்த்துவதன் மூலம் எடுக்கவும் நீதிமன்றிட்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

இன்றைய தினம் இவ்விரு வழக்குகளும் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளபட்டபோது மனுதாரர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ம. ஆ. சுமந்திரன் மனுதாரருக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்ற உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டு வழக்குகள் இரண்டையும் மீளப் பெற்றுக்கொண்டார்.

இதனடிப்படையில் முறையே 10-2-2014 ம் திகதியிலிருந்தும் 04-04-02015ம் திகதியிலிருந்தும் இந்நியமனம் கொடுப்பதாக கடிதங்கள் ஜூலை 1ம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படுவதாக நீதிமன்றிட்கு உறுதிமொழி அளிக்கப்பட்டது.

மோகன் பாலேந்திராவின் பணிப்பின் பேரில் சட்டத்தரணிகள் ம. ஆ. சுமந்திரன் மற்றும் ஜுவனிற்றா அருளானந்தம் ஆகியோர் மேட்குறித்த வழக்கில் மனுதாரர் சார்பிலும் ஆளுநர் சார்பில் அர்ஜுன ஒபேசேகரவும் தோன்றினர். இவ்வழக்கானது மேன் முறையீட்டு நீதிமன்ற தலைவர் விஜித் மலல்கொட முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது .