செய்திகள்

புலம்பெயர் உறவுகள் தமது முடிவுகளை எம்மீது திணிக்கக்கூடாது: சீ.யோகேஸ்வரன்

“புலம்பெயர் உறவுகள் தாங்கள் முடிவுசெய்வதையே நாங்கள் கேட்கவேண்டும் அதன்படியே நாங்கள் நடக்க வேண்டும் என வலியுறுத்த முடியாது. எங்கள் மக்களின் நிலையையும் கோரிக்கையையும் அடிப்படையாகக்கொண்டே நாங்கள் செயற்பட முடியும்” என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தெரேசா வித்தியாலயத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற நீர்ப்பாவை சிறை திறப்பும் வருடாந்த மெய்வல்லுனர் போட்டியிலும் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இந்த நாட்டில் நாங்கள் இரண்டாம் தர பிரஜைகளாக நடாத்தப்பட்டுவருகின்றோம். முன்னைய அரசாங்கமும் இவ்வாறே நடந்தது. தற்போதைய அரசாங்கமும் இவ்வாறே நடாத்துகின்றது. எங்களுக்காக நீதிகோரி,எங்களுக்கான நீதியை நிலைநாட்டவேண்டும் என்ற வகையில் இங்கு கொண்டுவரப்படுகின்ற ஒவ்வொரு திட்டமும் மழுங்கடிக்கப்படும் செயற்பாட்டினை நாங்கள் தற்போதைய அரசாங்கத்திலும் காண்கின்றோம்.

எங்கள் மக்களுக்கு எவ்வளவோ துன்பங்கள் இழைக்கப்பட்டது,மனித உரிமைகள் மீறப்பட்டது,மனிதாபிமான அடிப்படையிலான சேவைகள் மறுக்கப்பட்டது. இவ்வாறாக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பாரிய துன்பியலை எதிர்நோக்கினர்.

முன்பிருந்த அரசாங்கம் சர்வதேச விசாரணை இங்கு நடைபெற இடமளிக்கமாட்டோம் என்று கூறியது. அந்த சமயத்தில் அந்த அரசாங்கத்தில் தற்போதைய மதிப்பிற்குரிய ஜனாதிபதியும் இருந்தார்.
இங்கு நடைபெறும் சர்வதேச விசாரணை மூலம் அரசாங்கத்தையோ அரசின் தலைவரையோ பாதிக்கச்செய்வதற்கு இடமளியோம் என்று நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கம் கூட கூறியிருந்தது.

சர்வதேச விசாரணை அறிக்கை மார்ச் மாதம் வெளிவரவிருந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் தனது வெளிவிவகார அமைச்சரை அனுப்பி சர்வதேச விசாரணை அறிக்கை வெளியிடுவதை பிற்போடுமாறும் தாங்கள் உள்ளக விசாரணை ஒன்றை நடத்தி முடிவு தருவதாகவும் கூறியிருக்கின்றார்கள். அந்த உள்ளக விசாரணை நீதியாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஏனெனில் அவர்கள் ஏற்கனவே சர்வதேச விசாரணையைப்பற்றி அதற்கு இடமளிக்கப்போவதில்லையென பல கருத்துக்களை கூறிவிட்டார்கள். தர்மத்தின்படி நீதியின்படியான சர்வதேச விசாரணை அறிக்கை மார்ச்சில் வெளியிடப்படவேண்டும் என்பதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாக உள்ளது.

வெளிவிவகார அமைச்சின் வேண்டுகோளிற்கிணங்க அவ்வறிக்கை ஆறு மாதங்களிற்கு பிற்போடப்பட்டுள்ளது. இதுவிடயமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஐ.நா சபை பிரதிநிதிகளிடம் பேசியபோது அவர்கள் சில காரணங்களை சொன்னார்கள். இன்றிருக்கின்ற நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ராஜதந்திர ரீதியில் செயற்படவேண்டிய தேவை இருப்பதனால் அதை ஏற்றுக்கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளானோம். ஆனால் நாங்கள் இன்றுவரை சர்வதேச விசாரணை அறிக்கை மார்ச்சில் வெளியிடப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

எங்களுக்காக எமது மக்களுக்காக எமது நீண்டகாலமாக குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்ற புலம்பெயர் உறவுகள் நாட்டின் நிலைமையை தமிழர்களின் நிலைமையை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைமையை உணராது எமது தலைவருக்கு கொடும்பாவி எரித்து எமது பாதையில் குந்தகம் விளைவிக்கின்ற செயலை செய்வதையிட்டு மிகுந்த வேதனையடைகின்றோம்.

புலம்பெயர் உறவுகள் தீர்மானிக்கின்ற ஒரு தீர்வினை அவர்களுடன் இணைந்து எமது மக்களுக்கு நியாயமான தீர்வாக இருந்தால் அதனைப்பெற்றுக்கொடுப்பதில்தான் நாங்கள் உறுதியாகவுள்ளோம். ஆனால் புலம்பெயர் உறவுகள் தாங்கள் முடிவுசெய்வதையே நாங்கள் கேட்கவேண்டும் அதன்படியே நாங்கள் நடக்க வேண்டும் என வலியுறுத்த முடியாது. எங்கள் மக்களின் நிலையையும் கோரிக்கையையும் அடிப்படையாகக்கொண்டே நாங்கள் செயற்பட முடியும். எங்களுக்கு எங்கள் மக்கள் முக்கியம் . அந்தவகையில்தான் சூழ்நிலைக்கேற்ப சில தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.

இந்த நிலைமையில்தான் இந்த விசாரணைக்குழுவின் அறிக்கையினை இந்த அரசாங்கம் தடுத்துக்கொண்டுள்ளது. இந்த அரசாங்கம் நீதியையும் நியாயத்தையும் உயிர்கொலைகளை நிலைநிறுத்த வேண்டுமானால் சர்வதேச விசாரணைக்கு இடமளிக்க வேண்டும். உள்ளக விசாரணை நியாயமான தீர்வை தராது. எதிர்வரும் காலத்தில் ஒரு தேர்தலை சந்திக்கவுள்ள இந்த அரசாங்கம் உள்ளக விசாரணை மூலம் குற்றவாளிகளை கண்டுபிடித்து தமது வாக்குகளை குறைத்துக் கொள்வதற்கு யோசிக்காது.

ஆட்சியிலுள்ளவர்களினதும் எதிர்க்கட்சிகளினதும் நோக்கம் எதிர்வரும் தேர்தலில் ஆசனங்களை கைப்பற்றி தமது இருக்கைகளை தக்கவைப்பதாகும். ஆகையால் இந்த ஆறுமாதத்திற்குள் உள்ளக விசாரணை நியாயமான தீர்வை பெற்றுத்தராது. ஆகவே இதில் சந்தேகம் கொள்கின்றோம். எமது மக்கள் இந்நிலைமையை புரிந்துகொள்ள வேண்டும். நீதியை பெறுவதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். புலம்பெயர் உறவுகளுக்கு இதுபற்றி தெளிவுபடுத்துங்கள். நாங்கள் மத்திய அரசாங்கத்தில் அமைச்சு பதவியைபெற்று மக்களுக்கு சேவையாற்றி இருக்கலாம் என பலர் கூறுகின்றனர். இன்று எங்கள் நிலைமை வாள்கொடுத்து நிலைமையாகவுள்ளது.

கையைகொடுக்கும் போது துரத்துகின்றனர்,போகும்போது மீண்டும் துரத்துவருகின்றனர்.பல செயற்பாடுகளை நாங்கள் காணலாம். உண்மையில் நூறு நாட்களில் அரசாங்கத்தை பெற்று எம்மால் வேலை செய்ய முடியாது. அது பொருத்தமாகவும் அமையாது. முன்பு நாங்கள் ஏமாற்றப்பட்ட சமூகமாக இருக்கின்றோம். இன்னுமொரு ஏமாற்றத்தினை பெற நாங்கள் தயாராகயில்லை.

DSC_6263 DSC_6271 DSC_6274 DSC_6291 DSC_6312 DSC_6331 DSC_6332 DSC_6339 DSC_6343 DSC_6360