செய்திகள்

புலம்பெயர் சமுகத்தில் பேசப்படாத கூத்துக்கலை

கலை என்பதும், அதன் அழகியல் என்பதும் மனிதர்களால் எப்பொழுதும் விரும்பப்படும் ஒரு மகிழ்வூட்டல் வடிவம் என்பது மறுப்பிற்கு உட்படாத ஒரு உண்மை என அனைவரும் அறிவோம். இந்த கலைகளும் அதன் சார்புள்ள அனைத்து விடயங்களும் ஒவ்வொரு இனத்தின் பண்பாட்டுத் தளங்களுள்ளும் கலாசாரத் தட்டுகளிலும் செல்வாக்குச் செலுத்துவதும், அந்தந்த இனத்தின் அடையாள மூலக்கூறுகளாக இருந்துவிடுவதும் இயல்பான ஒரு புரிதலுக்குரிய விடயமே. குறித்த இனமொன்றின் இந்த அடையாளங்களோடு வெளிப்படும் இயல்பு நிலையில் கலை இருப்பதனால்தான் இனங்களின் விரிவாக்கத்திற்கேற்ப கலைகளும் பற்பல வடிவங்களோடு உலகில் முகிழ்க்கத் தொடங்கி இன்று ஏராளமான தனித்துவங்களோடு மனிதர்களின் புருவ நுனிகளை உயர்த்தி வியக்க வைத்துக்கொண்டிருக்கின்றன. உலகின் நீண்ட நிலங்களை தமதாக்கிக்கொண்ட வல்லரசுகளாயினும் சரி, பூகோள வரைபடத்தில் குறுகித் தெரியும் சிறிய தேசங்களாயினும் சரி தத்தமக்கென தனியான பாரம்பரியங்களையும், முதிசங்களையும், வரலாறுகளையும், கொண்டமைந்தே இருக்கின்றன. இந்த தனித்துவங்களில் இருந்து வெளிப்படுகின்ற கலைகளும் மற்ற யாவற்றையும் போல தமக்கென தனித்துவமான ஒரு கட்டமைப்பினையே பெரும்பாலும் கொண்டிருக்கின்றன.

ஈழத் தமிழர்கள் நாம் இலங்கைத் தீவென்னும் சிறிய தேசமொன்றின் பூர்வீகக் குடிகளாக பன்நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்ற போதும், எமக்கென ஒரு பாரம்பரிய வரலாற்று நீட்சியினைக் கொண்டிருக்கின்ற போதும், அத் தேசத்தின் பெரும்பான்மைக் குடிகளோடு சமரசம் செய்துகொண்டு எமக்கான சுயங்களையும் அடையாளங்களையும் ஸ்திரப்படுத்திக்கொள்ள பலவற்றோடு போராட வேண்டியிருந்ததை நாங்கள் அறிவோம். அரசியல் அழுத்தங்கள், பொருளாதார நெருக்கீடுகள், கல்விச் சமநிலையின்மைகள், தொழில்சார் சந்தர்ப்பமின்மைகள், கைத்தொழில் போதாமைகள், சுய மொழி அங்கீகாரமின்மைகள், இனச் சுதந்திரமின்மைகள், மதப் பாகுபாடுகள் போன்ற பலவற்றிலுமிருந்து எமக்கான உரிமைகளை மீட்டெடுக்க முனைப்புக் காட்டியபோது ஏற்படுத்தப்பட்ட அழிவுகளில் இருந்து எம்மைக் காப்பாற்றிக்கொள்ள முனைந்ததன் ஒரு விளையே புலப்பெயர்வாகும்.

யுத்தத்தின் கடும்போக்கால் ஏறத்தாழ மூன்று தசாப்தங்களுக்கு முன்பு இருந்து இன்று வரை புலப்பெயர்வில் உள்வாங்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் மக்கள் மட்டுமன்றி, யுத்தத்திற்கு அப்பாலான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பல காரணங்களால் கூட எமது மக்கள் தாயகத்திற்கு வெளியிலான இந்த மேற்குலகோடு தமது வாழ்வுக்கான வெளிகளை அமைத்திருக்கின்றார்கள். அவ்வாறு இவர்கள் அமைத்துக்கொண்ட வாழ்வுக்கான வெளிகள், வெறும் உயிர்வாழ்தலுக்கானதாக மட்டும் இருந்திருக்கவில்லை. மாறாக தமது பண்பாடுகள், கலாசாரங்கள், கலைகள், சடங்கு முறைமைகள், சமய ஆச்சாரங்கள், விழாக்கள், என பலவற்றோடும் மீள் அடையாளமிடப்படுவதாய் தொடரப்பட்டிருந்தது. எமது மக்களால் மீள் அடையாளமிடப்பட்ட பலவற்றுள் கலைகளுக்கு ஒரு தனியான இடம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. தூம் வாழும் புதிய தேசத்தில் கலைகளின் தொடர்ச்சியான அளிக்கைகளும், அடுத்த சந்ததியினரை அக்கலைகளில் ஈடுபடுத்தும் ஆர்வமும் ஒட்டுமொத்தமாக புலம்பெயர்ந்த பெரும்பான்மைத் தமிழ் மக்களின் மனநிலையாகவே இருந்து வந்திருக்கின்றது. பரவலான தமிழ் கல்விக்கூடங்களின் பெருக்கமும், அங்கே தமிழ் மொழியினைக் கற்றுக்கொடுத்தலோடு மட்டும் நின்றுவிடாமல் கலை சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்துதலும் இந்த மனநிலையின் வெளிப்பாடுகளாகவே பார்க்கலாம்.

புலம்பெயர் சமூகத்தில் கலை மீதான நாட்டம் என்பது வெறுமனே நுண்கலைகள் சார் பயிலுதல்களோடும், அவற்றிற்கான விலையுயர்ந்த அரங்கேற்றங்களோடும் மட்டுமே திருப்திப்பட்டுக் கொள்கின்ற ஒரு போதாமையாகவே இருந்துகொண்டிருக்கின்றது. இதற்கு அப்பால் சிந்திக்கவோ எமக்கான சுதேசிய,தேசியக் கலைகள் பற்றிப் புரிந்து கொள்ளவோ போதிய அவகாசமற்ற அல்லது அவசியமற்ற ஒரு மனநிலையுடனேயே எம்மில் பலரும் வாழ்ந்து முடித்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இன்று நாம் எமது ஈழத்து தமிழ்க் கலை வடிவங்கள் என பூஜித்து தலைமேல் தாங்கும் இந்த நுண்கலைகளிலும் சரி, அவைக்காற்றும் கலைகளிலும் சரி, எத்தனை வீதத்தினது எமது மூலங்களோடும் வேர்களோடும் தொடர்புடைய கலை வடிவங்கள் என்ற தேடல் எமக்கு அவசியமற்றதொன்று என நாம் கருதிக்கொள்கின்றோம். இவற்றுள் பாதிக்கு மேற்பட்டவை இன்று எமது ஈழத்து தமிழ் கலைவடிவம் என்ற அந்தஸ்தினைப் பெற்று எமதுகளுக்குள் உள்வாங்கப்பட்டிருந்தாலும், காலத்தால் முந்திய வரலாறுகளில் அவை புறத்தே இருந்து எமக்குள் தருவிக்கப்பட்ட அல்லது வலிந்து திணிக்கப்பட்ட பலவற்றின் எச்ச சொச்சங்கள் என்பது இங்கு பேசப்பட வேண்டியதொன்று. இந்த கருத்து இந்த துறை சார்ந்த பலருக்கு ஆத்திரத்தை வருவிக்கும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் எமக்குள் இருக்கும் பல விடயங்கள் இத்தகைய முற்சார்பு ஆத்திரங்களுக்கு அப்பால் தூக்கி நிறுத்தி வியாக்கியானம் செய்யப்பட்டாக வேண்டியிருக்கின்றது.

ஆடல்,அடவு போன்ற உடலியக்கம் மற்றும் முகபாவம் போன்றவற்றோடு தொடர்புடைய அவைக்காற்றுகை செய்யும் கலைகளுள் பரதக் கலை புலம்பெயர் சூழலில் மிகப் பிரபல்யமானதாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கின்றது. அது ஒருவகையில் மிக மகிழ்ச்சிக்குரியதே. ஆனால் புறத்தே இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த நடனக் கலை எமது ஈழத்து தமிழருக்கேயுரியதான சொந்த அவைக்காற்றுகைக் கலைவடிவம் ஒன்றை புறந்தள்ளும் அளவுக்கு, அல்லது மறக்கச் செய்யப்படும் அளவுக்கு, இல்லையேல் அப்படி ஒன்று இருப்பதாக அறியமுடியாத நிலைக்கு கொண்டு வந்திருப்பதே இங்கு நெருடலான விடயமாகும். இக் கட்டுரைத் தொடர் பரதக் கலைக்கு எதிரானதல்ல. ஆனால் எமது ஈழத் தமிழ்த் தேசியக் கலைவடிவம் ஒன்றுடன் எமக்கிருந்த உறவினை புலம் பெயர் சமூகத்துடன் மீளவும் ஒட்ட வைக்கும் ஒரு முனைப்பு மட்டுமே.

sam-1

கூத்துக் கலை அல்லது நாட்டுக்கூத்து கலை வடிவம் என்ற ஒன்று ஈழத்தமிழரால் தொன்றுதொட்டு பாரம்பரியமாக ஆடப்பட்டு வந்து பிற்காலத்தில் வழக்கொழிந்து போகும் நிலையில் இருந்ததென்பதும், இன்று கல்வியியல் ரீதியில் மீண்டும் புத்தாக்கம் கண்டு புதுமெருகுடன் ஈழத்தில் ஆடப்பட்டும், கற்கை நெறியாக பயிலப்பட்டும் வரும் கலைவடிவம் என்பதும் புலம் பெயர்ந்து வாழும் கணிசமான மக்களுக்கு அந்நியமானதொரு தகவலாகவே பெரும்பாலும் இருக்கின்றது. பொதுவாகவே புலம்பெயர்ந்தவர்களின் மனநிலைகளில் இருக்கும் ஒரு இயல்பு நிலை மிகவும் வேதனையுடன் நோக்கத்தக்கதொன்று. தாம் புலம்பெயர்ந்த காலங்களில் எப்படி எமது தேசமும் அத்தேசம் சார்ந்த கலை கலாசார அம்சங்களும் இருந்தனவோ, அப்படியே இன்றும் மாற்றங்காணாது இருக்கின்றது என்ற ஒரு மனப்பாங்கு எம்மில் அதிகமானோருக்கு இருப்பதை நாம் ஏற்றுக்கொண்டாகவேண்டும். அந்த ஒரு பின்னணியில் நின்றுதான் நாடகம், கூத்து போன்ற அவைக்காற்றுகைக் கலை வடிவங்களை இன்றும் படிக்காத, பாமரத்தனமான, வேறு தொழில்களுக்கு தகுதியில்லாத, சிந்திக்கத் தெரியாத மனிதர்களால் நிகழ்த்தப்படுவதாக எம்மில் பலரும் எண்ணிக்கொள்கின்றோம்.

வளர்ச்சியடைந்த நாடுகள் என நாம் தஞ்சம் கோரி வந்த இந்த தேசங்களில் இத்தகைய அவைக்காற்றுகைக் கலைகள் பெருமதிப்போடு தொழில்சார்ந்த ரீதியில், உயர் கல்வி சார் ரீதியில் நிகழ்த்தப்படுவதையும் கற்கப்படுவதையும் நாம் நன்குணர்ந்தபோதும்கூட எமக்கு எமது சுதேசியம் சார் கலைகளை மதிப்பிற்குரியதொன்றாக கொள்வதில் இன்னும் சிரமம் இருக்கவே செய்கின்றது. அந்த சிரமத்தின் ஒரு விளைவே இந்திய தேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு எமதாக்கப்பட்ட பரதத்தின் மீதும் இன்னும் கதகளி, குச்சுப்புடி, கதக் போன்ற பலவற்றின் மீதும் எமது காதலுக்கு ஆயுள் அதிகமாகக் காரணமாயிருக்கின்றது. அதன் மற்றுமொரு விளைவாக, வருமானத்திற்கான வாசலைத் திறந்துவிடாத கலைகளாக எமது கூத்துக்கலை இருப்பதும் குறிப்பிடப்படுகின்றது. விலையுயர்ந்த வகுப்புகள், செலவு மிகுந்த அரங்கேற்றங்கள், வரையறை தாண்டிய குருதட்சணைகள் என்ற வாயில்களினூடு வரும் வருவாய்கள் கூத்துக் கலைக்கு அடைக்கப்பட்டிருப்பதும் இதற்கான காரணங்களாக கொள்ளப்படலாம். மறு புறத்தே கற்கை நெறியாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு நிறுதிட்டமான ஒரு பாடத்திட்ட அலகோ அல்லது வரைவு செய்யப்பட்ட ஒரு ஆடல் பாடலுக்கான ஒழுங்கோ கூத்துக் கலையில் இன்னமும் சரியாக அமைக்கப்படாமையைக் குறிக்கலாம்.

தமிழ்த் தேசியம் பற்றி பெரு வாஞ்சையுடன் வீரியம் கொள்ளும் நாம், குறிப்பாக புலம் பெயர் சமூகம், எமக்கான தேசியக் கலை வடிவம் பற்றி அறிந்து கொள்வதும் அதனை தொழில் சார்ந்த, அந்தஸ்துமிக்க, உயர் கல்வி சார்ந்த ஒரு நிலைக்கு கொண்டு வருவதும் மிக் முக்கியமான ஒரு விடயமாகின்றது. அந்நிலைக்கு இந்த கூத்துக் கலையினை கொண்டு வருவதற்கு அதன் தோற்றம், வளர்ச்சி, பரிணாமம், களம், காவுகை, பரம்பல், முறைமை, பலங்கள், பலவீனங்கள், தடைகள், சவால்கள், சுதேசியப் பண்புகள், தேசிய முக்கியத்துவம் போன்றவற்றை அறிந்து கொள்தலும் ஆய்வுக்குட்படுத்துதலும் மிக அவசியமாகின்றது. அந்த அறிதலும் ஆய்தலும் எமக்கு, குறிப்பாக புலம் பெய்ர்ந்த தேசங்களில் வாழும் எமது இளம் சந்ததிக்கு இன்று அவசியமாகின்றது. தமக்கான வேர்களைத் தேடி பயணிக்கும் இவர்களது கண்முன்னே விரியும் தமிழ்க் கலைகளாக ஏதொவெல்லாம் தெரிகின்றதே தவிர எமது தனித்துவங்களோடு மறைந்து கிடக்கும் கூத்தும், கும்மியும், அடவும், ஆட்டமும் பார்வைக்கு தரப்படுவதே இல்லை. எனவே எமது பாரம்பரிய கூத்துக் கலையினை புலம் பெயர் தளங்களில் பேச வைப்பதும், பரீட்சயத்திற்கு கொண்டு வருவதும், தூசு தட்டி எம் இளவல்களால் பேணப்பட அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதும் இக் கட்டுரை வாயிலான எனது நோக்காக இருக்கின்றது.

எல்லாக் கலைகளையும் போல சமயக் கரணங்களின் அடியாகத் தோன்றி, காலத்திற்கு காலம் ஆடுகளங்களின் மாற்றங்களை உள்வாங்கி, செவி வழியும், கட்புலன் வழியும் கடத்தப்பட்டு இன்று கற்கை நெறியின் வாசல்களில் நுழைந்து வரும் எமது இந்த கூத்துக் கலைக்கு மிகப் பெரிய வரலாறு இருக்கின்றது. அந்த வரலாற்றுக் காலக் குறிப்புகள் என்ன? கூத்துக் கலையின் தோற்றுவாய் என்ன? எதிர்கொண்ட சவால்கள் என்ன? வளர்ச்சியும் வீழ்ச்சியும் என்ன? அதன் மூலக்கூறுகள் என்ன? வகைகளும் பிரிப்புகளும் என்ன? உள்ளடக்கங்கள் என்ன? ஆடுகளங்களின் வெளிகள் எத்தகையன? பாடல்களும் ராகங்களும் எந்த வகைப்பட்டன? ஆடல்களும் அடவுகளும் எப்படியானவை? ஓப்பனைகளும் வேட உடைகளும் எந்த வகைப்பட்டன? போன்ற ஒரு விசாலமான பார்வையினை இக் கட்டுரைத் தொடர் வாயிலாக நாம் பார்ப்போம்.

sam-2

சமயக் கரணங்களின் வேரில் தோன்றிய கூத்துக்கலை
உலகின் எந்த இனத்தினது கலைவடிவங்களும் அடிப்படையில் அந்த இனக்குழுமம் சார் மத நம்பிக்கைகளிலும், சமயக் கரணங்களிலும் இருந்தே தோற்றம் பெற்றிருக்கின்றன என்பது பல ஆய்வுகளாலும் ஏலவே நிரூபணம் செய்யப்பட்ட ஒரு விடயமே. மனிதனிடம் இயல்பாகவே ஒன்றைப் பிரதி செய்யும் பண்பு இருக்கின்றது என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அவை வார்த்தைகளாலும், குரல்களாலும், முக பாவங்களாலும், அங்க அசைவுகளாலும் என வேறுபடுகின்றது. இந்த இயல்பு நிலையில் இருந்த எமது மனித மூதாதையரும் சில விடயங்களை செய்து காட்ட முனைந்திருக்கின்றனர் எனலாம். புராதான காலங்களில் வேட்டையாடிப் பிழைத்த மனிதன் தனது வேட்டைத் தொழிலை செய்து காட்ட முனைந்ததன் வெளிப்பாடே பின்னர் அது சமயச் சடங்காகவும் காலப்போக்கில் நடனம், நாடகம் எனவும் வெளிப்பட்டது என்பர். சிலர் தம்மை வேட்டையாடுவோராகவும் வேறு சிலர் தம்மை வேட்டையாடப்படும் விலங்குகளாகவும் பாவனை செய்து மீள மீள அதை நிகழ்த்தியிருக்கின்றனர்.. இவ்வாறு வேட்டைக்கு செல்வதற்கு முன்னர் தமது வேட்டைத் தொழில் பற்றி நிகழ்த்திப் பார்த்து மிருகங்களைப் போல வேடமணிந்தவர்களை கொல்வது போல அபிநயிப்பதனூடாக தமது வேட்டையில் அதிக மிருகங்கள் கிடைக்கும் என இவர்கள் நம்பினர். அத்தோடு தமது வேட்டைக்கான பாதுகாப்பாகவும், வேட்டையாடலில் வெற்றிபெறவும் இது வழிகோலும் எனவும் இவர்கள் நம்பத் தொடங்கினர். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மீள மீள நிகழ்த்தும் இந்த போலச் செய்தலே சடங்குகளாக அந்த புராதன மனிதர்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கின்றது என்பதை நாடக ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர். போலச் செய்தல், பாவனை செய்தல், நம்பிக்கை வைத்தல், மீள நிகழ்த்துதல் போன்ற இந்த தொடர் செயற்பாடுகள் படிப்படியாக வேட உடை புனைதல், ஆடுதல், பாடுதல், ஊர்வலம் செல்லுதல் என புதிய அம்சங்களை உள்வாங்கத் தொடங்கியிருந்தது. இந்த செய்து காட்டலுக்கு இவர்கள் தமது அங்க அசைவுகளையும் சத்தங்களையும் பயன்படுத்தியிருந்தனர். இந்த அசைவுகளே ஒருவிதமான நடனப் பாரம்பரியத்தை இவர்களிடம் கொண்டுவந்திருக்க வேண்டும் எனக் கருதலாம். வேட்டையாடும் தொழிலைப் போலவே பயிர் வளர்தலுக்காகவும் இந்த முறையினை இவர்கள் பின்னர் கையாளத் தொடங்கினர். பயிர் வளர்தலை நடனமாடி நிகழ்த்துதல் ஊடாக அதனை விளைச்சல் அடையச் செய்யலாம் என நம்பிய இவர்கள் ஒரு மந்திரத்தைப் பிரயோகிப்பதைப் போல இந்த செய்து காட்டலை நிகழ்த்தியிருந்தனர். இந்த பண்டைய சமூகத்தில் இவர்களது உழைப்பு, மதம், சடங்கு, நாடகம் என்பன தனித்தனியானதாக இருந்திருக்கவில்லை. ஒன்றோடொன்று பிரித்தெடுக்க முடியாதபடி பிணைந்திருந்தன என்றே சொல்லலாம்.

புராதன மனிதன் தனியே தனது மனித நடவடிக்கைகளோடு மட்டும் தனது பிரதி செய்தலை நிறுத்திக்கொள்ளவில்லை. மாறாக அவன் தனது நம்பிக்கைக்குரிய தெய்வ நடவடிக்கைகளையும் பிரதி செய்து காட்டத் தொடங்கியிருந்தான். இயற்கையையும், அந்த இயற்கை வாயிலாக தான் நன்மை அடைதலையும், அவற்றின் அச்சுறுத்தலில் இருந்து தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதலையும் மிக முக்கிய தேவைகளாகக் கொண்டிருந்தான். மண்ணில் இருந்து உணவு பெறுதல், மழை பெய்தல், சூரிய ஒளி கிடைத்தல், காற்று வீசுதல், மரங்கள் அசைதல் போன்ற இயற்கையின் செயற்பாடுகள் தமக்கு மீறிய சக்திகளாலேயே சாத்தியம் செய்யப்படுகின்றன என நம்பினான். அந்த சக்திகளை தெய்வங்களாக உருவகிக்கத் தொடங்கவுமானான். இந்த உருவகத்தின் நீட்சியே பலமான ஆவிகள் பற்றியதான இவனது நம்பிக்கைகளை கிளறி விட்டிருந்தது. மலை முகடுகளில், ஆறுகளின் நீட்சியில், ஆகாயங்களின் மேற்தட்டுகளில், காற்றின் வீச்சுத் திறனில் எல்லாம் இந்த ஆவிகளின் இருப்புகள் உள்ளதென்றும், அந்த ஆவிகளை தம்வசப்படுத்துவதனூடாக தம்மால் இயற்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும் எனவும் பலமாக நம்பினர். இந்த நம்பிக்கைகளின் அடியாகவே தாம் தம்மை ஆவிகளாக அபிநயித்துக்கொண்டு நடனமாடி ஆவிகளைத் தமவசப்படுத்துவதாக எண்ணிக்கொண்டனர். இத்தகைய தொடர் செயற்பாடுகளே சடங்குகளாக பர்ணமித்தது என்பது ஆய்வாளர்களின் சான்றாகக் கிடக்கின்றது.

sam-3

குறித்த அந்த மனிதக் குழுவில் இத்தகை செயற்பாடுகளை தலைமை தாங்கி முன்னின்று நடத்துபவன் அவர்களின் குருவாகவும், மத ரீதியாகப் பார்க்கும் போது அவன் அக்குழுவின் மதகுருவாகவும் சடங்கினை நிகழ்த்துபவனாகவும் கருதப்பட்டான். பலமிக்க சக்திகளாக இவர்களால் உணரப்பட்ட இந்த ஆவிகளைப் பற்றிய கற்பனைகள் இவர்களின் அறிவு, அனுபவ வெளிகளுக்கு ஏற்ப புதிய புதிய வடிவங்களைப் பெற்றது. இந்த புதிய வடிவங்கள் இந்த சடங்குகளின் ஊடாக புதிய கதைகளை உருவாக்கத் தொடங்கியது. உருவாகிய இந்த கதைகளே பின்னர் கற்பனைக் கதைகளாகவும், கட்டுக்கதைகளாகவும், காலப் போக்கில் ஐதீகங்களாகவும் புழக்கத்தில் வந்தன எனலாம். இந்த சடங்குகளில் எல்லாம் பெரும்பான்மையாக நாடகத் தன்மையே துருத்தி நின்றிருக்கின்றன. அதனாலேயே பிற்காலத்தில் நாடகத் தன்மை வாய்ந்த இந்த சடங்குகளில் இருந்து நாடகம் தனியாக தன்னை பிரித்தெடுக்கக்கூடியதாக இருந்திருக்கின்றது. எல்லாச் சடங்குகளுமே நாடகமாக பரிணமித்தது எனக் கூற முடியாது ஆனால் எல்லாவற்றிலுமே நாடகத் தன்மைகள் அதிகமாக இருந்திருக்கின்றன என்றே கூறலாம்.

வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, உலகின் மிகத் தொன்மையான நாடகங்களின் அல்லது சடங்குககளின் சான்றுகள் பெரும்பாலும் கிரேக்க நாகரிகத்திலேயே கண்டெடுக்கக்கூடியதாக இருந்திருக்கின்றது. இந்த கிரேக்கத்தின் தொன்மையான நாடகங்கள் ‘டித்ராம்’ என்ற சடங்குத் தன்மையான பாடலின் அடியாகத் தோன்றியிருக்கின்றது எனக் கூறுகின்றது அரங்கியல் ஆய்வு. அது மட்டுமல்லாது ‘தெஸ்பிஸ்’ என்ற முதல் நடிகனே இந்த போலச்செய்தல் அல்லது செய்து காட்டலின் அடியாகத் தோன்றியவன் எனவும் இந்த ஆய்வு கூறுகின்றது. ‘தியோனிசஸ்’ விழா எனப்படும் மிகப்பெரிய புராதன விழாவாக கிரேக்கத்தில் நிகழ்த்தப்பட்ட விழா இவர்களின் சடங்குத்தன்மையான விழாவாகும். இறந்த மனிதன் ஒருவனின் உடலை உயிருடன் இருப்பவர்கள் பகிர்ந்து உண்பதன் ஊடாக இறந்தவன் மீண்டும் தமக்கூடாக உயிர்வாழ்கிறான் என்ற ஐதீகத்தின் அடியிலேயே இச் சடங்கு அங்கு உருவாகியிருந்தது. இந்த ஐதீகத்தின் தொடர்ச்சியாகவே கத்தோலிக்க மதத்தில் இயேசுநாதர் தனது மரணத்துக்கு முந்திய இறுதிஇரவில் ஒரு அப்பத்தை எடுத்து ‘இது என் உடல். இதை வாங்கி அனைவரும் உண்ணுங்கள்’ என்று கூறுவதும், தொடர்ந்து திராட்சை இரசத்தை எடுத்து ‘இது எனது இரத்தம். இதை அனைவரும் வாங்கி அருந்துங்கள்’ எனக் கூறுவதும் ஆகும். இந்த புராதன ஐதீகத்தின் அடியிலேயே இன்றும் கிறீஸ்தவர்கள் தமது சமயச் சடங்குத் திருப்பலியில் இதை நினைவுகூருவதை நாம் பார்க்கலாம்.. எனவே எந்த ஒரு இனத்தினது அளிக்கை கலை வடிவங்களும் முதலில் சமயச் சடங்குகளில் இருந்தே தோற்றம் பெற்றிருக்கின்றது என்ற முடிவுக்கு ஆய்வுகள் எம்மைக் கொண்டு வந்திருக்கின்றன.

sam-4

எமது தமிழ்க் கலைகளையும் அதன் தோற்றுவாய்களையும் ஆய்வு ரீதியாக பார்க்கும்போது கூட இத்தகைய ஜதீகங்களோடும் சமயக் கரணங்களோடும் பெருமளவு தொடர்புபட்டிருப்பதை நாம் காணலாம். தமிழ் இலக்கிய வரலாற்று ஆவணங்களைப் பார்க்கும் போதும் இந்த விடயங்கள் அங்கு நிரூபணமாகியிருக்கின்றது. தமிழ் இலக்கியத்தில் சங்ககாலம்பற்றி கிடைத்திருக்கின்ற தரவுகளில் வெறியாட்டு, தை நீராடல், துணங்கைக் கூத்து போன்ற சடங்குத் தன்மை வாய்ந்த நடனங்கள் அக்காலத்தில் இடம்பெற்றிருக்கின்றன என்பதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. அதற்கு பின்னதான சிலப்பதிகார காலத்தில் வேட்டுவவரி, கானல்வரி, குன்றக் குரவை போன்ற ஆதாரங்களும் இத்தகைய சடங்கின் அடி தோன்றிய அளிக்கைகளை உறுதி செய்வதாக அமைகின்றது. இன்றும் தமிழக கிராமங்களில் குழந்தைப் பேறு வேண்டி நிகழ்த்தப்படும் ‘கருவளச் சடங்கு’ ஒரு அளிக்கைப் பண்புக்கேறப நடைபெற்றுவருவதை நாம் காணலாம்.

இந்த ஒட்டுமொத்தமான உலகப் பொதுமைக்கு எமது ஈழத்து கூத்துமரபும் விதிவிலக்கானதொன்றல்ல. எம்மிடையே உள்ள கூத்தின் சுவடுகள் சில இன்னமும் சமயம்சார் சடங்கில் இருந்து பூரணமாக விடுபடாமல் இருப்பதை நாம் இன்றும் காணலாம். விசேடமாக மலையக மக்கள் மத்தியில் இன்றும் ஆடப்படும் காமன்கூத்து, அருச்சுணன் தபசு, போன்ற கூத்துகளையும் யாழ்ப்பாணத்தில் ஆடப்படும் காத்தவராயன் கூத்துக்களையும் இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம். மழை வேண்டி வசந்தன் கூத்து ஆடப்படுவதும் அப்படி ஆடப்படுவதால் மழை பொழிந்து வரட்சி போகும் என்ற ஐதீகமும் இன்றுவரை ஒரு தொடர்சியைக் கொண்டிருப்பதை நாம் காணலாம். எனவே இயற்கையையும் கடவுளரையும் மையப் பொருளாகக் கொண்டு ஐதிகங்களுடனும் சமயக் கரணங்களுடனும் எமது கூத்துக்கள் ஆடப்பட்டு வந்திருக்கின்றன என்பதனை நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்த கூத்துக்கள் எப்படி ஆடப்பட்டன? இதன் அளிக்கை வெளி எப்படி இருந்தன? பாடுபொருள்கள் எவற்றைப் பற்றி அமைந்திருந்தன? வேடஉடைகள் ஒப்பனைகள் எந்த வகையின? ஆடியவர்கள் யார்? மீட்டப்பட்ட இசைகளும் வாசிக்கப்பட்ட வாத்தியங்களும் எப்படிப்பட்டன? எந்தெந்த காலங்களில் இவை ஆடப்பட்டன? இவற்றின் சமூகப் பெறுமானங்கள் எவை? அணியப்பட்ட அணிகலங்கள் எவை? பாவிக்கப்பட்ட அரங்கப் பொருட்கள் எப்படி இருந்தன? என்ற பல பல கேள்விகளுக்கான விடைகளையும், எமது இந்த கூத்து மரபின் ஏனைய மூலக்கூறுகள் பற்றியும் அடுத்த தொடரில் பார்ப்போம்.

– ம.சாம் பிரதீபன் –

Related News