செய்திகள்

புலம்பெயர் தமிழர்களுக்கு போர் ஒரு பொழுதுபோக்கு, அவர்கள் தொடர்ந்தும் ஈழத்தமிழர்களாக இருக்கமாட்டார்கள் என்கிறார் கம்பவாரிதி ஜெயராஜ்

புலம்பெயர் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் போர் ஒரு பொழுதுபோக்கு என்றும் அவர்கள் தாய் நாட்டில் போரை நடத்தவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றும் தெரிவித்திருக்கும் அகில இலங்கை கம்பன் கழக அமைப்பாளர் கம்பவாரிதி இ. ஜெயராஜ், பாதுகாப்பாக நிறைந்த செல்வத்துடன் வாழ்ந்துவரும் புலம்பெயர் தமிழ் மக்கள் தாங்கள் சொல்வதே தாய்நாட்டில் உள்ளவர்கள் செய்ய வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கம்பன் விழாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழைத்து அவருக்கு கம்பன் கழகம் பெரும் கெளரவம் அளித்தமையை விமர்சனம் செய்து வெளிநாட்டில் வாழும் ஜேகே என்பவர் திறந்த மடல் ஒன்றை எழுதியிருந்தார். இந்த திறந்த மடலுக்கு ஜெயராஜ் எழுதியிருந்த பதிலில், புலம்பெயர் தமிழ் மக்களை மிகக் கடுமையாக தாக்கி, புலம்பெயர் தமிழர்கள் ஈழத்தைப் பொறுத்தவரையில் பார்வையாளர்களாகவே இருக்கவேண்டும் என்றும் பங்காளிகளாக இருக்க முடியாது என்றும் அவர்களது வழிகாட்டல்களை தாய் நட்டு மக்கள் ஏற்கப்போவதில்லை என்றும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தார்.

இது தொடர்பில், கனடாவிலுள்ள SBS தமிழ் ஒலிபரப்பு சேவைக்கு நேற்று புதன் கிழமை அளித்த பேட்டி ஒன்றிலேயே ஜெயராஜ் இவ்வாறு தெரிவித்தார்.

ஜெயராஜ் தனது பேட்டியில் மேலும் தெரிவித்ததாவது:

போர் காரணமாக வெளிநாடுகள் சென்றவர்களுக்கு தாய் நாட்டில் பற்று இருப்பது உண்மை. ஆனால், அவர்கள் என்ன தவறு செய்கிறார்கள் என்றால், அங்கு போய்ச் சேர்ந்த பின்னர் , வசதியான இடத்தில் இருந்துகொண்டு போதிய பாதுகாப்பு மற்றும் நிறைந்த செல்வத்துடன் வாழ்ந்து கொண்டு இவை எதுவும் இல்லாமல் தாய் நாட்டில் வாழ்பவர்களை தமது சொற்படி நடக்குமாறு வற்புறுத்துகிறார்கள். தாங்கள் சொல்வதையே தாய் நாட்டில் வாழ்பவர்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனக்கு இதில் சற்றும் உடன்பாடில்லை.

தாய் நாட்டில் என்ன செய்யவேண்டும் என்பதை இங்கு வாழும் மக்களே முடிவுசெய்ய வேண்டும். நாங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு அவர்கள் ஆதரவு தெரிவிக்கவேண்டுமே தவிர இன்னது செய் என்று சொல்லும் உரிமை அவர்களுக்கு கிடையாது.

இன்னும் ஒரு தலைமுறை போனால், அங்குள்ள தமிழர்கள் ஈழத்தமிழர்களாக இருக்கமாட்டார்கள். இலங்கையில் இருந்து வெளிநாடு சென்றவர்களின் குழந்தைகளில் 90 வீதமானோருக்கு தமிழே தெரியாது. அடுத்த தலைமுறை வந்துவிட்டால், தாய் நாட்டில் உள்ள தொடர்பே அவர்களுக்கு இல்லாமல் போய்விடும். இதுதான் யதார்த்த நிலை. பெயரளவில் தமிழர்களாக இருப்பார்களே தவிர தேசத்தின் பற்றுடன் அடுத்த தலைமுறை வாழும் என்று சொல்ல முடியாது. தேசப்பற்றும் தமிழ் உணர்வும் மண்ணில் வாழ்பவர்களுக்கு தான் தொடர்ந்து இருக்க முடியும்.

இங்கிருந்து போனவர்களுக்கு பற்று இல்லை என்று சொல்லமுடியாது. ஆனால் , அதை அவர்கள் எல்லைப்படுத்திக் கொள்வது நல்லது. வெளியில் இருந்து 30 ஆண்டுகால போரை பார்த்து பழகியதால், போர் அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு பொழுதுபோக்காக ஆகிவிட்டது. நாங்கள் அந்த போருக்குள் வாழ்வதற்கு கஷ்டப்பட்டவர்கள். அவர்கள் இன்னமும் போரை நடத்தவேண்டும் என்று விரும்புகிறார்கள். நாம் போரில் பல இழப்புக்களை சந்தித்ததால், போர் இல்லாமல் சமாதான சூழ்நிலைக்கு போகவேண்டும் என்று விரும்புகிறோம்.

இங்குதான் அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுகிறது. பாதுகாப்பு சூழலில் இருந்துகொண்டு போர் சூழலை அவர்கள் இங்கு வளர்க்க நினைப்பதும் பாதுகாப்பற்ற சூழலில் இருந்துகொண்டு போரை நிறுத்த நாம் நினைப்பதுமே யதார்த்தம்.

அவர்களுடைய செயற்பாடுகளுக்கு சில எல்லைகள் உண்டு. அதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சமாதானமா போரா என்பதை நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எமது முடிவுக்கு அவர்கள் வேண்டுமானால் ஆதரவு தரலாம்.

இலங்கையில் முன்னர் இருந்த ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு முற்றிலும் வேறு முகம் காட்டினார். போரின் தோல்வியை வைத்து தமிழ் மக்களை மீண்டும் அடக்கலாம் என்று நினைந்தார். ஆனால், இப்போதைய ஜனாதிபதி தமிழர்களின் உரிமையை அங்கீகரிக்கிறார். பெரிய அளவில் காரியங்கள் நடைபெறாவிட்டாலும் தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லை அவர்கள் பாதிக்கப்பட்டுளார்கள் என்பதை அங்கீகரித்து வந்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் எல்லா தலைவர்களும் அவருக்கு வாக்களித்து அவரை வெற்றிபெற செய்யவேண்டும் என்று கூறினார்கள். இன்றுவரை அவருடன் உடன்பாடாகவே இருக்கிறார்கள். தனிநாடு இல்லை. ஒரு தேசத்துக்குள் சுதந்திரமாக வாழ்வதுதான் கொள்கை என்றும் அறிவித்துள்ளார்கள்.

இந்த சூழ்நிலையில், சமாதானத்துக்கான முயற்சி செய்வது தான் சரியாக இருக்க முடியும். பழையவற்றையே பேசிப்பேசி பகையை வளர்த்தால் அதனை எதிர் கொள்ளும் சக்தி எமக்கு இருக்கிறதா. நாங்கள் ஒரு அரசுக்குள் வாழும் ஒரு பகுதி மக்கள் தான். இந்தநிலையில், ஒரு பகையை வளர்த்து மீண்டும் ஒரு யுத்த நிலைக்கு நாம் போவோமானால், அந்த யுத்தத்தை நாம் எப்படி சமாளிக்கப் போகிறோம்?. அவர்கள் பேரினம். நாம் சிற்றினம். அதனால் நாம் பலவீனமானவர்கள். நட்பு நாடுகளும் எமக்கு இல்லை. இந்தநிலையில், பகையை வளர்த்து என்ன நடைபெறப்போகிறது? அதனால் நட்பை வளர்க்க வேண்டும் என்பதே எனது கருத்து. தற்போதைய ஜனாதிபதி நட்புக் கரம் நீட்டுகிறார். அதனை வேண்டும் என்றே நாம் ஏன் உதறவேண்டும்?