செய்திகள்

புலிகளின் இலக்கு இன்னும் மஹிந்த மீது உண்டு அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் என்கிறார் நிமல் வீரதுங்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்ந்தும் காணப்படுவதாக மக்கள் ஊடக மத்திய நிலையத்தின் ஏற்பாட்டாளரான நிமல் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக கடந்த 9ம் திகதி நாம் பொலிஸ் திணைக்களத்தில் முறையிட்டிருந்தோம். இதன்படி ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்திய பொலிஸார் என்னிடமும் தகவல்களை பெற்றுக்கொண்டனர். எவ்வாறாயினும் அவரை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவது போன்றே நாம் உணர்கின்றோம்.
அவர் உலகில் பயங்கரமான எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் தலைவரை அழிக்கும் போராட்டத்திற்கு தலைமைவகித்தவர். அந்த இயக்கம் இப்போ இல்லாவிட்டாலும் அவருக்கு எதிரான உயிர் அச்சுறுத்தல் தொடர்ந்து காணப்படுகின்றது. நாட்டுக்குள்ளும் வெளியேயும் அந்த இயக்கத்துடன் தொடர்பினை பேணிய பலர் இருக்கின்றனர். அவர்கள் ஆயுதத்தை எடுக்கமாட்டார்கள் என்பது நம்பக்கூடியதல்ல.
மஹிந்த ராஜபக்‌ஷ பதவியில் இல்லை அதனால் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லையென யாரும் கூற முடியாது. இராணுவத்தில் இருந்த ஜானக பேரேரா அதிலிருந்து விலகிய பின்னரே கொல்லப்பட்டார். இதேபோன்று மஹிந்தவுக்கும் நடக்கலாம்.
எவ்வாறாயினும் அவருக்கு காணப்படும் உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக நாம் எச்சரிக்கையாகவே இருக்கின்றோம். எப்படி அவருக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுகின்றது. என்பது தொடர்பான அறிக்கையை விரைவில் ஜனாதிபதி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சமர்ப்பிப்போம். என்றார்.