செய்திகள்

புலிகள் மீதான தடையை நீக்குவது பற்றி லண்டனில் பேசப்பட்டதா? நிமல் கேள்வி

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் லண்டனில் உலகத் தமிழர் பேரவையுடன்  நடத்திய பேச்சுக்களின் போது விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது பற்றியோ அல்லது விடுதலைப்புலிகள் அமைப்புக்கு உதவி மற்றும் அனுசரணைகளை வழங்கிய அமைப்புக்களை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தலை அகற்றுவது பற்றியோ அல்லது  போர்க்குற்றங்கள் பற்றியோ பேசப்பட்டதா என்று நேற்று வியாழக்கிழமை சபையில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா  மேற்படி பேச்சுக்கள் தொடர்பில்  பாராளுமன்றத்திற்கு முழுமையான அறிக்கையொன்று வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் 23 (2) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றும் போதே  நிமல் சிறிபால டி சில்வா இந்த விடயங்களை குறிப்பிட்டார். அவர் இங்கு மேலும் பேசுகையில்;

விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்பை பேணி கடந்த பல வருடங்களாக இலங்கையின் உள்விவகாரம் தொடர்பில் பல்வேறு  கருத்துக்களை வெளியிட்டு இலங்கைக்கு எதிராக செயற்பட்ட சர்வதேச தமிழ் புலம்பெயர்தோருடன்  பல்வேறு தொடர்புகளை பேணி இலங்கைக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை  வெளியிட்டு சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கும் அதன் நற்பெயருக்கும் படையினருக்கும்  இலங்கை அரசுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக பலதரப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்புடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விசேட  பேச்சுக்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அது மட்டுமல்லாது தென்னாபிரிக்க அரச சார்பற்ற அமைப்பும் நோர்வே அமைப்பும் இந்த பேச்சுக்களுக்கான ஏற்பாட்டாளர்களாக செயற்பட்டுள்ளதாகவும் இலங்கை பாராளுமன்றத்தை  பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியொன்றின் பிரதிநிதிகளும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இதில் கலந்து கொண்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம்திகதி  விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய  தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடையை  நீக்கிக் கொள்வதே இந்த பேச்சுக்களின் நோக்கம் என்றும் இலங்கையில் இடம்பெற்றதாக தமிழ் புலம்பெயர்ந்தோரினால் பிரசாரம் செய்யப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும்  பேச்சுக்களாக இது அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வே அரசின் சமாதான செயற்பாடுகளின் நிமித்தம்  இதற்கு முன்னர் செயற்பட்டிருந்த எரிக் சொல்ஹெய்மும் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது  இடம்பெற்றதாக  சில தரப்பினரால் எழுப்பப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில்  விசாரணைகளை நடத்துவதற்காக  சுயாதீன பொறிமுறையொன்றை எற்படுத்தும் பணிகள் தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படும் என்று வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதுடன் வெளிவிவகார அமைச்சர் உலக தமிழ் பேரவையுடன் நடத்திய பேச்சுக்களின் போது இந்த விடயம்  பற்றியும் பேசப்பட்டதா என்பது  தொடர்பில் பாரிய எதிர்பார்ப்பொன்று இந்த நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் செயன்முறை ஒன்று தொடர்பில் இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை  பேணிய அமைப்புடன் பேசும் நோக்கம் தொடர்பில் இந்த நாட்டு மக்கள் பாரிய அச்சத்தையும் சந்தேகத்தையும் கொண்டுள்ளதுடன் இந்நாட்டு மக்களுக்கு  அறிவிக்காமல்  இந்நாட்டுப் பாராளுமன்றத்தையும் மக்கள் பிரதிநிதிகளையும் புறந்தள்ளி இவ்வாறான பல பேச்சுக்களை நடத்துவதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பணிகளும் தாமதாமாகும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டியாக வேண்டும்.

ஆகையால்  வெளிவிவகார அமைச்சர் லண்டனில் உலக தமிழர் பேரவை அமைப்புடன் நடத்திய பேச்சுக்களின் நோக்கம் மற்றும் அந்த பேச்சுக்களின் மூலம் எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும்  இந்தப் பேச்சுக்களுக்கு அடிப்படையாக அமைந்த விடயம் என்ன என்பது  பற்றியும் பேச்சுக்களில் கலந்து கொண்ட நபர்கள் மற்றும் அமைப்புகள் பற்றியும் இவ்வாறானதொரு பேச்சுக்களை நடத்த அமைச்சரவையினதும் அதேபோல்  ஜனாதிபதியினதோ  அல்லது பிரதமரிடமோ அமைச்சர் அனுமதியை பெற்றிருந்தாரா என்பது தொடர்பிலும் வெளிவிவகார அமைச்சரிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கின்றோம்.

அதேபோல் இந்த பேச்சுக்களின் போது விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான  தடையை  நீக்குவது பற்றியோ அல்லது தடை விதிக்கப்பட்ட உதவி,  உபகரணங்களை வழங்கிய அல்லது  விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமது அனுசரணையை வழங்கிய அமைப்புக்களை தடை செய்த வர்த்தமானி அறிவித்தலை அகற்றிக் கொள்வது பற்றியோ  கலந்துரையாடப்பட்டதா என்பது பற்றியும் இந்தப் பேச்சுக்களில் போர்க்குற்றங்கள் தொடர்பில் பேசப்பட்டதா என்பது பற்றியும் போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக உள்நாட்டு  பொறிமுறையொன்றை ஏற்படுத்தும்  செயன்முறை தொடர்பில் உலகத் தமிழர்  பேரவை  அமைப்புகளுடனும்  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளுடனும் கருத்துக்கள் பறிமாறிக் கொள்ளப்பட்டனவா என்பது பற்றியும் வெளிவிவகார அமைச்சர் சபைக்கு அறிவிப்பாரா?

அத்துடன் மேற்படி பேச்சுக்கள் தொடர்பில் முழுமையான அறிவித்தலொன்றையும் வெளிவிவகார அமைச்சர் இந்த சபைக்கு வழங்குவாரா? என்று கேள்வி எழுப்பினார். இதேநேரம் எதிர்க்கட்சித் தலைவரின் இந்த கேள்விகளுக்கு  இன்று வெள்ளிக்கிழமை பதில் வழங்கப்படும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.