செய்திகள்

பூகோள அரசியல் சூழலும் 13 ஆவது திருத்தச் சட்டமும்

–ஆப்காணிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் விலகிய நிலையில். வடக்குக் கிழக்குக் கடல் பகுதியை உள்ளடக்கிய இந்தோ- பசுபிக் அதன் ஊடான தென்சீனக் கடல் விவகாரங்கள் சூடுபிக்கவுள்ளன. இதற்குள் தமிழர்கள் தம்மைத் தேசமாகக் காண்பிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. 

-அ.நிக்ஸன்- 

ஈழத்தமிழர்களின் இறைமை அங்கீகரிக்கப்பட்டு வடக்குக் கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமைதான் அரசியல் விடுதலைக்கான சிறந்த தீர்வென தமிழரசுக் கட்சி மற்றும் புளொட் தவிர்ந்த ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதனை அடைவதற்கான வழிவகைகள் இதுவரை சரியாக ஒழுங்குபடுத்தப்படவில்லை. வெறுமனே வாய்மூலப் பேச்சாக மாத்திரமே உள்ளன.

இதன் காரணமாகவே இன அழிப்புத் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனற கோரிக்கைகள் சிவில் சமூக அமைப்புகள். முற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள சில அமைப்புகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு இன அழிப்பு என்பது நிறுவப்பட்டால், தமிழர்களின்  சுயநிர்ணய உரிமை அங்கீரிக்கப்பட வேண்டிய சூழல் உருவாகும். அது வடக்குக் கிழக்கு இணைக்கப்பட்ட சுயாட்சிக்கு ஏற்புடையதாகவே இருக்கும். இதனாலேயே இந்த சுயாட்சிக் கட்டமைப்பு வந்துவிடக்கூடாதென்ற நோக்கில் இலங்கை அரசாங்கமும் இலங்கை ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொண்ட சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்படுகின்றனர். இதன் பின்னணியில் பல அரசியல் செயற்பாட்டாளர்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் 2009 ஆம் ஆண்டின் பின்னரான சூழலில் இன்றுவரை இயங்குகின்றனர்.

அரசியல் தீர்வுக்கான ஆரம்பமாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென 2012 ஆம் ஆண்டில் இருந்து 2021 ஆம் ஆண்டு வரையான ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு ரணில்- மைத்திரி அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னரான சூழலில் 13 ஆவது திருத்தச் சட்டமே தீர்வு என்ற தொனியில் ஜெனீவா தீர்மானங்கள் கடுமையாக வலியுறுத்தப்பட்டன.

ரணில் அரசாங்கத்தில் உருவாக்கப்படவிருந்த புதிய அரசியல் யாப்புக்கான நகல் வரைபுகூட இலங்கையின் ஒற்றையாட்சிக்கு அமைவானதாகவும் 13 ஆவது திருத்த்தில் இருந்த காணி. பொலிஸ் அதிகாரங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய ஏற்பாடுகளோடுமே அமைந்திருந்தன

தற்போது ராஜபக்ச அரசாங்கத்தில் புதிய அரசியல் யாப்புப் பற்றிய பேச்சே இல்லை. அத்துடன் 13ம் இல்லை. 13 பற்றிய இந்தியாவின் அழுத்தத்தை ஜனாதிபதி கோட்டாபய செவிசாய்ப்பதாகவும் இல்லை.

இந்தவொரு நிலையிலேயே தனி நாட்டுக் கோரிக்கைக்கு அமைவான 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம் இரண்டு” எனப் பெயரிட்டு நடத்திய மாநாட்டிலும் சந்தேகம் வலுத்தது. இலங்கையை அச்சுறுத்த புதுடில்லி கையாண்ட மற்றுமொரு அணுகுமுறையாக அது அவதானிக்கப்பட்டது.

வட்டுக்கோட்டையைச் சொல்லிக் கொண்டு பதின்மூன்றையே தீர்வாக்கிவிடலாம் என்று டில்லி கருதியதை மாநாட்டில் கலந்துகொண்ட பலரும் புரிந்துது கொண்டதாகவும் இல்லை.

இவ்வாறான நிலையில், மைத்திரி- ரணில் அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்திருந்த காலத்தில், இந்தியா இல்லாமலேயே தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமென பாராளுமன்றத்தில் கூறியிருந்த சுமந்திரன், மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சென்ற வியாழக்கிழமை அரசாங்கத்திடம் கோரியுள்ளார்

இந்திய ஆதரவுடன் ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 13 ஆவது திருத்தம் உள்ளடக்கப்பட்டமைக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆதரவு வழங்கியிருந்தன.

இதன் பின்புலத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவான மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு சுமந்திரன் கோரியிருக்கலாம். ஏனெனில் அவர் மேற்குலகின் செல்வாக்கைப் பெற்ற ஒருவர்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை தும்புத்தடியாலும்கூடத் தொட்டுப்பார்க்க முடியாதென 2006 ஆம் ஆண்டு சம்பந்தன் பாராளுமன்றத்தில் கூறியிருந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு நடந்த மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றியிருந்தது. 13 அரசியல் தீர்வுக்கு உகந்ததல்ல என்பது தமிழரசுக் கட்சிக்குத் தெரிந்த நிலையிலும் அன்று தேர்தலில் போட்டியிட்டிருக்கிறது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இந்தோ- பசுபிக் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்தைச் சீனாவிடம் இருந்து பிரிக்க வேண்டுமென்ற அமெரிக்க, இந்திய வல்லாதிக்க நாடுகளின் சிந்தனையால், ஈழத்தமிழர் பிரச்சினைக்கு உடனடித்தீர்வாக 13 சித்தரிக்கப்படுகின்றது.

இதற்குத் சம்ந்தன் உன்பட்டிருந்தார் என்பதையே 2013 ஆம் இடம்பெற்ற வடமாகாண சபைத் தேர்தல் வெளிப்படுத்தியது.

ஆனால் 2015 ஆம் ஆண்டின் பின்னரான சூழலில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ 13 தீர்வு அல்ல என்றும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டுமெனவும் கூறுகின்றது. புளொட் மதில்மேல் பூனைபோன்று இருக்கின்றது.

அனந்தி சசிதரன் உள்ளிட்ட ஏனைய தனிநபர் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் 13 இல் உடன்பாடில்லை. முதலமைச்சராகப் பதவி வகித்ததால், விக்னேஸ்வரனும் 13 இன் பலவீனங்களை வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் வெளிப்படையாகவே நிராகரித்துள்ளது.

ஆனாலும் மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றால் அதில் போட்டியிட அனைவருமே தயாராகவுள்ளனர். இதனையே இலங்கை அரசாங்கமும், அமெரிக்கா. இந்தியா போன்ற வல்லரசுகளும் சாதகமாகப் பயன்படுத்துகின்றன என்பது கண்கூடு. இதன் பின்புலத்திலேதான் கொவிட் நோய்த் தாக்கம் கட்டுப்பாட்டில் வந்ததும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென சுமந்திரன் கோரியிருக்கிறார் போலும்.

சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை இந்தியாவைக் கடந்து அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் 13 அல்லது ஒற்றைாயட்சி அரசியல் யாப்புக்குள்ளே தமிழர்களை அமைதியடைச் செய்துவிட வேண்டுமென்ற நோக்கில் இயங்குகின்றனர். இந்த மாத ஆரம்பத்தில் சுமந்திரன் அமைச்சர் பீரிஸ் சந்திப்பு அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் நடந்தமைகூட இதன் பின்னணிதான்.

பசில் ராஜபக்ச அமைச்சராவதற்கு முன்னர் அமெரிக்கா சென்றிருந்தபோது கடந்த யூன் மாதம் இணையவழி மூலம் சுமந்திரனோடும் பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்பு ஒன்றின் பிரதிநிதியோடும் பேசியிருந்தார். 2015 ஆம் ஆண்டு ஜெனீவா தீர்மானத்துக்கு அமைவான முறையில் சில திருத்தங்களைச் செய்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதே இந்த இரகசியச் சந்திப்புக்களின் நோக்கம் என்பது வெளிப்படை.

இந்த இடத்திலேதான் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ இயங்கத்துக்குப் பாரிய பொறுப்புள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் பிரதான அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியில் சுமந்திரனைத் தவிர்த்து மாவை சேனாதிராஜா மற்றும் ஏனைய கட்சிகளின் தலைவர்களோடு இணையவழியில் உரையாடியது போன்று, 13 தீர்வல்ல எனவும் தமிழர்களின் சுயநிர்யண உரிமை அங்கீகரிக்கப்பட்டு வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சி முறையை உருவாக்க வேண்டுமெனப் பிடிவாதமாக நிற்க வேண்டும்.

அத்துடன் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் புளொட்டின் ஆதரவுடனும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஏனெனில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ரெலோவில் உள்ளனர். அத்துடன் உள்ளூராட்சி சபையிலும் அதிகளவான உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆகவே அந்தத் தற்துணிவு செவ்வம் அடைக்கலநாதனுக்கு வரவேண்டும். அப்படியானதொரு சூழலில் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி. சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகளையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்வாங்கலாம்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் அழைப்பு விடுக்கலாம். 2001 ஆம் ஆண்டு  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு  உருவாக்கப்பட்டபோது செல்வம் அடைக்கலநாதன். சுரேஸ் போன்றவர்கள் முக்கிய பங்காற்றியிருந்தனர.

இன்று சம்பந்தனுக்கு அடுத்ததாக செல்வம் அடைக்கலநாதன் கூட்டமைப்பில் மூத்த உறுப்பினராகவும் இருக்கின்றார்.

தற்துணிவோடு எடுக்கப்பட வேண்டிய இந்த முடிவை செவ்வம் அடைக்கலநாதன் ஏற்பாரேயானால், தமிழர்கள் ஒரு தேசமாக இருக்கின்றனர் என்பதை நிறுவ முடியும். ஓவ்வொரு கட்சிகளாகப் பிரிந்திருப்பதை பலவீனமாகக் கருதியே சிங்கள ஆட்சியாளர்களும் அமெரிக்கா, இந்தியா போன்ற வல்லாதிக்கச் சக்திகளும் வடக்குக் கிழக்கிலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்குள் ஊடுருவி தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றிய பேச்சுக்களைத் திசை திருப்புகின்றனர்.

அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர். அதுதான் இந்த 13 பற்றிய பேச்சு.

13 இன் மூலமாக உருவாக்கப்பட்ட மாகாண சபை தமிழரசுக் கட்சியால் பெறப்பட்டதல்ல. அது ஆயுதப் போராட்டத்தின் குழந்தை. ஆனாலும் அது உரிய தீர்வல்ல என்பதை அன்றே எல்லோரும் ஒருமித்த குரலில் கூறியுமிருக்கின்றனர். அது இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு உட்பட்டது.

இதனால் சிலர் அனுபவப்பட்ட பின்னர் 13 வேண்டாமென்கிறனர். அதாவது கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக இருந்த பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன்கூட அதிகாரமில்லாத சபை என்று கூறியிருக்கிறார். முதலமைச்சராக இருந்த காலத்தில் ஆக 750 மலசலகூடங்களை கட்டிப்பதற்கு மாத்திரமே அதிகாரம் கிடைத்திருந்ததெனவும் உண்மைய வெளிப்படுத்தியிருந்தார்.

மாகாண சபைக்கு அதிகாரமே இல்லையென 1993 ஆம் ஆண்டு மேல் மாகாணத்தில் முதலமைச்சராகப் பதவி வகித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கூறியிருந்தார். விக்னேஸ்வரன் 2001 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதியரசராகப் பதவியேற்றபோது மாகாண சபையின் அதிகாரங்களை சிறுவர்களின் மாபிள் விளையாட்டோடு ஒப்பிட்டுப் பகிரங்கமாகவே சிங்கள உயர் அதிகாரிகள் முன்னிலையிலேயே கூறியிருந்தார்.

ஆகவே எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டம் நியாயமானது என்பதோடு, 2009 இல் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஏன் இல்லாதொழிக்கப்பட்டது என்பதை அமெரிக்கா, இந்தியா போன்ற வல்லரசுகளின் மனட்சாட்சிக்கும் தெரியும். அது பற்றிக் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் சம்பந்தன் விளக்கமளித்திருந்தார்.

நிரந்தர அரசியல்தீர்வு வழங்கப்படுமென உறுதியளித்துவிட்டுப் பின்னர் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கவலை வெளியிட்டிருந்தார். பத்து ஆண்டுகளின் பின்னர் சம்பந்தன் தனது மனட்சாட்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

ஆகவே நிரந்த அரசியல்தீர்வு எதுவாக இருக்க வேண்டுமென்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள், போரால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள்தான் என்ற யதார்த்தத்துக்கு அமைவாக இறைமை அங்கீகரிக்கப்பட்ட சுயாட்சிதான் தீர்வு என்பதை துணிவோடு சொல்வதற்கேற்ற முறையில் தமிழர்கள் ஒரு தேசமாகச் சிந்திக்க வேண்டுமானால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவது யார் என்ற கேள்விக்கு இடமில்லாமல் செயற்பட வேண்டும்.

அதற்கேற்றவாறு தமிழரசுக் கட்சிக்குள் செயற்படுகின்ற வில்லங்கமான கருத்துடையோரை நீக்க வேண்டும். பூனைக்கு மணி கட்டுவது யார்?

தேர்தல் அரசியலில் ஈடுபடும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் மீது நம்பிக்கையே அற்றவொரு நிலையிலும் இறுதிச் சந்தர்ப்பமாக இந்தக் கட்டுரையாளர் இதனைப் பதிவிடுகிறார்.

ஆனால் இது ஓற்றுமைப்படுத்தல் அல்ல. மாறாகத் தமிழர்களின் இறைமை. சுயாட்சி. சுயநிர்ணய உரிமை என்பதை ஒருமித்த குரலாகவும் தமிழர்கள் ஒரு தேசமாகவும் வெளிப்படுத்தப்பட வேண்டிய பூகோள அரசியல் சூழல் தற்போது அவசியமாகியுள்ளது என்பதே இதன் வெளிப்பாடு.

ஆப்காணிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் விலகிய நிலையில். வடக்குக் கிழக்குக் கடல் பகுதியை உள்ளடக்கிய இந்தோ- பசுபிக் அதன் ஊடான தென்சீனக் கடல் விவகாரங்கள் சூடுபிக்கவுள்ளன.

இதற்குள் தமிழர்கள் தம்மைத் தேசமாகக் காண்பிக்க வேண்டிய அவசியம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.