செய்திகள்

பூட்டப்பட்ட வீட்டில் தனிமையிலிருந்த இரு சிறுமிகள்: ஊடகவியலாளரால் மீட்பு

பற்றைகளால் சூழப்பட்ட பூட்டப்பட்ட வீடு ஒன்றின் முற்றத்தில் தனிமையில் படுத்திருந்த இரண்டு சிறுமிகள் வவுனியா ஊடகவியலாளர்களால் மீட்கப்பட்டு வவுனியா வடக்கு சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதிக்கு வவுனியா ஊடகவியலாளர்கள் மூவர் இன்று மதியம் சென்ற போது பூட்டப்பட்ட வீடு ஒன்றின் வெளி முற்றப் பகுதியில் தனிமையில் படுத்திருந்த 4 வயது, 3 வயது சிறுமிகள் இருவர் மீட்கப்பட்டதுடன், பாடசாலையில் இருந்து அங்கு வந்த மேலும் இரு 6 வயது, 7 வயது சிறுமிகளும் ஆக நால்வரும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு பிரிவு மற்றும் வவுனியா வடக்கு சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், கனகராயன்குளம் பொலிசார் ஆகியோருக்கு ஊடகவியலாளரால் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த உத்தியோகத்தர்களிடம் அச் சிறுமிகள் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த சிறுமிகளின் தாயார் வெளிநாடு ஒன்றுக்கு தொழில் வாய்ப்புக்காக சென்றுள்ள நிலையில் அச் சிறுமிகள் தமது தாயின் இரண்டாம் தர கணவருடனேயே வசித்து வந்துள்ளனர். அவரும் கூலி வேலைக்காக வெளியில் செல்லும் போது வீட்டை பூட்டிவிட்டு செல்வதால் சிறுமிகள் நால்வரும் பற்றைகளால் சூழப்பட்ட அந்த வீட்டின் முற்றப் பகுதியிலேயே தமது பகல் பொழுதை கழித்து வந்துள்ளனர்.

பகல் நேரங்களில் பாடசாலைகளில் கொடுக்கப்படும் சாப்பாட்டையே உணவாக உட்கொண்டும் இரவு நேரங்களில் மது போதையில் வரும் தந்தையால் கொடுக்கப்படும் உணவுகளை உண்டும் அச் சிறுமிகள் வாழ்ந்து வருகின்றனர்.  தொடர்ச்சியாக இவ்வாறு நடைபெற்று வருகின்ற போதும் உரிய அதிகாரிகள் அச் சிறுமிகளின் பாதுகாப்பு தொடர்பில் போதியளவில் கவனம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

000