செய்திகள்

பூந்தோட்டம் நலன்புரி நிலைய மக்களை சிதம்பரபுரத்தில்யே குடியேற்றுங்கள்: ப. சத்தியலிங்கம்

சிதம்பரபுரம் மற்றும் பூந்தோட்டம் நலன்புரி நிலையங்களில் கடந்த பல வருடங்களாக வாழும் மக்களுக்கு சிதம்பரபுரத்திலேயே காணிகளை பகிர்ந்து அளித்து குடியேற்றுவதே சாலச்சிறந்தது என வட மாகாண சுகாதார மற்றுமும் புனர்வாழ்வு அமைச்சர் ப. சத்தியலிங்கம் மத்திய மீள்குடியேற்ற அமைச்சருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்தியாவிலிருந்து 1996 ஆண்டுகளில் வருகை தந்த ஒருதொகுதியினர் வவுனியா சிதம்பரபுரம், பூந்தோட்டம் ஆகிய பகுதிகளில் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களில் பெருமளவிலானோர் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில் மீதமாகவுள்ள ஒருதொகுதியினர் தொடர்ந்தும் அதே பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு வடக்கு மாகாணத்தில் வேறெந்த பகுதியிலும் சொந்தக்காணி இல்லாத நிலையில் இவர்களை குடியிருக்கும் அதே இடத்தில் காணிகளை வழங்கி குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

சிதம்பரபுரத்திலுள்ள மேற்படி மக்கள் வாழ்ந்துவருகின்ற காணி 2013 ஆண்டில் அரச நிலஅளவையாளர்களால் நிலஅளவீடு செய்யப்பட்டு ஏயஃஏயுஏஃ2013ஃ331 இலக்க நில அளவை பட இலக்க மூலம் 41.7491 ஹெக்ரேயராக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதில் 29.4409 ஹெக்ரேயர் மக்கள் குடியிருப்பு அமைப்பதற்கும், (ஒவ்வொரு குடும்பத்திற்கும் 0.1518 ஹெக்ரேயர் ஒதுக்கப்பட்டுள்ளது) 5.8300 ஹெக்ரேயர் பொது தேவைக்கும்;, 6.4782 ஹெக்ரேயர் உள்ளக வீதி அமைப்பதற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது சிதம்பரபுரத்தில் 177 குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் பூந்தோட்டத்தில் 70 குடும்பங்கள் தொடர்ந்தும் வசித்து வருகின்றனர்.

புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் பூந்தோட்டத்திலுள்ள குடும்பங்களை வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் மக்கள் நடமாற்றமற்ற காட்டுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் மீள்குடியேற்றம் செய்வதற்கு மாவட்ட செயலகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா வடக்கில் தெரிவுசெய்யப்பட்ட பகுதியானது காட்டுப்பகுதி மட்டுமல்லாது மழைகாலத்தில் வெள்ளம் நிற்கக்கூடிய குடியிருப்பு அமைப்பதற்கு பொருத்தமற்ற காணியாகும்.

அன்றாட வருமானமாக பெரும்பாலும் கூலித்தொழிலை செய்துவரும் இக்குடும்பங்களின் தமது வாழ்வாதாரத்திற்காக வவுனியா நகரத்திலேயே தங்கியுள்ளனர். அத்துடன் இவர்களது பிள்ளைகளும் தமது கல்வியை நகரப்பாடசாலைகளிலேயே தொடர்கின்றனர்.

எனவே இவர்களை சிதம்பரபுரத்திலேயே காணிகளை பகிர்ந்தளித்து குடியேற்றுவதே சாலப்பபொருத்தமாகும்.

ஆகவே தயவுகூர்ந்து தங்கள் பிரதிநிதியொருவரை வவுனியா மாவட்டத்திற்கு அனுப்பி உண்மையான களநிலவரத்தை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவனசெய்யுமாறு தங்களை தயவுடன் கேட்டுக்கொள்வதோடு தங்களின் நடவடிக்கைகளுக்கு மாவட்ட மட்டத்தில் சகலவிதத்திலும் ஒத்துழைப்பு வழங்க தயாராவுள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.