செய்திகள்

பூனைக் குட்டியென கூறி புலிக் குட்டியை வளர்க்க அரசாங்கம் முயற்சி : 20 தொடர்பாக ஜே.வி.பி

அரசியல் கட்சிகளுடன் இணங்கிய விடயம் வேறு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட விடயம் வேறு இதனால் 20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென ஜே.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வாவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
2வது தொடர்பாக கட்சிகளுடன் இணங்கிய விடயம் ஒன்று, அமைச்சரவையில் சமர்ப்பித்த விடயம் ஒன்று  வர்த்தமானியில் வெளியிடப்பட்ட விடயம் வேறு எல்லாமே ஒன்றுக் கொன்று முரணானது.  செல்லப் பிராணியாக பூனைக் குட்டியொன்றை வளர்க்கவே தீர்மானிக்கப்பட்டது. ஆனால் புலிக் குட்டியை வளர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது போன்றே தெரிகின்றது. அந்த புலிக் குட்டி கடைசியில் எஜமானை விட்டுவிட்டு சகலரையும் தின்று விடும். இது போன்றே அரசாங்கத்தின் செயற்பாடுகள் காணப்படுகின்றது.
இதன்படி தற்போது வெளியிடப்பட்டுள்ள 20வது திருத்த வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்று மீண்டும் சகல கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தி முறையாக தேர்தல் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். இல்லையேல் போராட்டங்களை நடத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.