செய்திகள்

பெண்களை சிறைப்பிடித்து “ஒரு பக்கட் சிகரட் விற்பது போல” பாலியல் சந்தைகளில் விற்கும் ஐ.எஸ். ஐ. எஸ் அமைப்பு

சிரியா மற்றும் ஈராக்கில் தாம் கைப்பற்றும் கிராமங்களில் ஐ.எஸ். ஐ. எஸ் பயங்கரவாதிகள் இளம் யுவதிகள் மற்றும் சிறுமிகளை கடத்தி அடிமைச் சந்தைகளில் ஒரு பக்கட் சிகரட் விற்பது போல அவர்களை விற்பனை செய்து வருவதாக முரண்பாடுகளின் போது பாலியல் வன்கொடுமை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி சைனப் பங்குரா தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு சென்று அங்கு ஐ. எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி ஓடிய பல யுவதிகள் மற்றும் சிறுமிகளை சந்தித்துள்ள சைனப் பங்குரா , எ. எவ் . பி செய்திச் சேவைக்கு கடந்த திங்கட்கிழமை கருத்து தெரிவித்தபோது ” ஐ. எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் புதிய இடங்களை கைப்பற்றும்போது பெண்களை கடத்துகிறார்கள், அதனால் அவர்களுக்கு புதிய பெண்கள் ( இதனை நான் அவர்களுக்கான ஒரு புதிய விநியோகம் என்று கூற விரும்பவில்லை) கிடைக்கிறார்கள்” கூறினார். ” இந்த யுத்தமானது பெண்களின் உடலின் மீது நடத்தப்படுகிறது ” என்றும் அவர் கூறினார்.

” பெண்கள் பிடிக்கப்பட்டு ஒரு வீட்டுக்குள் நூறுக்கும் அதிகமானவர்கள் அடைக்கப்படுகின்றனர். பின்னர் இவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஆண்களின் முன்பாக நிறுத்தப்படுகின்றனர். இந்த ஆண்கள் அவர்களின் பெறுமதி என்ன என்பதை தீர்மானிக்கின்றனர்.” என்று பங்குரா தெரிவித்தார்.

Yazidis

ஐ.எஸ். ஐ. எஸ் பயங்கரவாதிகள் பிடியில் உள்ள பாலியல் அடிமைகள்

பிடிக்கப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் அடிமைகளாக பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் அதிகளவு வெளிநாட்டு இளைஞர்களை தமது அமைப்பில் இணையச் செய்வதற்கு அவர்களால் முடிகிறது என்றும் தெரிவித்த அவர், ” எம்மிடம் பெண்கள் இருக்கிறார்கள், அவர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள், கன்னிப்பெண்களை நீங்கள் திருமணம் செய்யலாம் ” என்பது அவர்களின் வெளிநாட்டு இளைஞர்களுக்கான செய்தியாக இருக்கிறது கூறினார்.

குறிப்பாக ஐ.எஸ். ஐ. எஸ் பயங்கரவாதிகள் வட ஈராக்கில் வாழுகின்ற புராதன மேசொபத்தேமிய மதங்களுடன் தொடர்புடைய யாசிடிஸிம் என்ற மதத்தை சேர்ந்த யாசிடிஸ் இன இளம் பெண்களை ஆயிரக்கணக்கில் கடத்தி அவர்களை சித்திரவதை செய்து, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி பாலியல் சந்தைகளில் விற்றுள்ளதாக சில சர்வதேச மன்னிப்புச் சபையும் சில மாதங்களுக்கு முன்னர் குற்றம் சாட்டிஇருந்தது.

வேறு எந்த பயங்கரவாத அமைப்பை காட்டிலும் புதினமான வகையில் .எஸ். ஐ. எஸ் பயங்கரவாதிகள் தாங்கள் புரியும் காட்டுமிராண்டித் தனமான செயல்களை ஒளிவுமறைவு செய்யாமல் அவற்றை பகிரங்கப்படுத்துவதில் சிரத்தை காட்டுவதாகவும் மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

Mideast Islamic State Women

ஐ.எஸ். ஐ. எஸ் பயங்கரவாதிகனால் சிரியாவில் பிடிக்கப்பட்ட இந்த 15 வயது யாசிடிஸ் இன சிறுமி பலவந்தமாக ஐ.எஸ். ஐ. எஸ் பயங்கரவாதி ஒருவரினால் திருமணம் செய்யப்பட்டு பின்னர் அவர்கள் பிடியில் இருந்து தப்பி தற்போது தனது குடும்பத்துடன் வாழ்கிறார்.