செய்திகள்

பென்டகன் அறிக்கை: அமெரிக்க தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்!

தீவிரவாதிகள் மூலம் இந்தியாவில் பாகிஸ்தான் மறைமுக தாக்குல் நடத்துகிறது என அறிக்கை வெளியிட்ட பென்டகனுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க தூதருக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியுள்ளது.

“பாகிஸ்தானில் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு தீவிரவாத பயிற்சியை முடித்தவர்கள், தீவிரவாத செயல்களை நிறைவேற்றுவதற்காக இந்தியாவிற்குள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதேபோல், ஆப்கானிஸ்தானுக்குள் தீவிரவாதிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதற்கு பாகிஸ்தான் ராணுவம் உறுதுணையாக இருக்கிறது.

வலுவான இந்திய ராணுவத்தை எதிர்கொள்ள முடியாததால், பாகிஸ்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும், ஆப்கானிஸ்தானிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியாத காரணத்தால், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் மீது தீவிரவாதிகளை பயன்படுத்தி மறைமுக தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வருகிறது” என அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு, அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில், பென்டகனின் அறிக்கை ஆதரமாற்றது என்றும், தேவையற்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ”தீவிரவாதத்தை அழிக்க அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இந்நிலையில், வலுவான இந்திய ராணுவத்தை எதிர்கொள்ள தீவிரவாதிகளை மறைமுகமாக பாகிஸ்தான் பயன்படுத்துகிறது எனவும், ஆப்கானிஸ்தானிலும் தீவிரவாதிகளை பாகிஸ்தான் மறைமுகமாக பயன்படுத்துகிறது எனவும் ஆதரமற்ற அறிக்கையை அமெரிக்காவின் பென்டகன் வெளியிட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.