செய்திகள்

பொதுவாக்கெடுப்புக்காக தொடர்ந்தும் போராடுவோம்: மலேஷிய மாநாட்டில் வைகோ

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு. அதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி தொடர்ந்து நாம் போராடுவோம் என்று மறுமலர்ச்சி திமுகவின் பொதுச் செயலாளர் வைகோ மலேஷியாவில் தெரிவித்திருக்கின்றார்.

மலேஷியாவில் பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டின் தொடக்க விழா இன்று சனிக்கிழமை மாலை 4.00 மணி அளவில் தண்ணீர்மலை பால தண்டாயுதபாணி ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் வெகு சிறப்பாகத் தொடங்கியது.

விழாவுக்கு வருகை தந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஆலய நிர்வாகக் குழுவின் சார்பில், நாதÞவர, மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தொடக்க விழாவில், 55 நிமிடங்கள் வைகோ சிறப்புரையாற்றினார். அவரது உரையை அனைவரும் வரவேற்றுப் பாராட்டினர்.

பினாங்கு துணை முதல்வர் இராமசாமி பேசும்போது, “நான் அறிந்த வரையில் அன்று முதல் இன்று வரையிலும் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாக எத்தனையோ சோதனைகளுக்கு மத்தியிலும் ஈழத் தமிழர்களை ஆதரித்து இடைவெளியின்றி தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருபவர் வைகோ ஒருவர்தான். எனவே, வைகோதான் இந்த மாநாட்டின் கதாநாயகன்,” என்று பாராட்டினார்.

இன்று காலை 9.30 மணி அளவில் மாநாட்டு நிகழ்வுகள் ஜார்ஜ்டவுன் பே வியூ அரங்கில் தொடங்கின. பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் அவர்கள் பங்கேற்றார். வைகோ சிறப்புரையாற்றினார். வைகோவை அறிமுகப்படுத்தி பேசும்போது, பேராசிரியர் இராமசாமி மீண்டும் தமது கருத்தை வலியுறுத்தினார்.

வைகோ தமது சிறப்புரையில், உலகத் தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்தினார். உலக நாடுகளில் தமிழர்கள் பரவிய சரித்திரத்தையும், கூலித் தொழிலாளிகளாக அவர்கள் அடைந்த துன்ப துயரங்களையும், ஈழ பிரச்சினையையும் எடுத்துரைத்தார். தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு; அதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி தொடர்ந்து நாம் போராடுவோம் என்று கூறினார்.