செய்திகள்

பொது அரசியல் முடிவுக்கு தமிழர்கள் வர ஆயர் உதவ வேண்டும்: முதலமைச்சர் விக்னேஸ்வரன்

“தமிழ்ப் பேசும் மக்கள் அனைவரையும் ஒரு பொதுவான அரசியல் முடிவுக்கு வர மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய கலாநிதி இராயப்பு ஜோசெப் உதவ வேண்டும். ஆயரின் தலைமைத்துவத்தின் கீழ் புலம்பெயர் தமிழ்ப் பேசும் மக்கள், உள்நாட்டுத் தமிழ்ப் பேசும் மக்கள் அனைவரும் இனிவருங்காலத்தில் எப்பேர்ப்பட்ட ஒரு அரசியற் தீர்வை எதிர் பார்க்கின்றார்கள் என்பதை அறிந்து வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கின்றது” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய கலாநிதி இராயப்பு ஜோசெப் அவர்களின் பிறந்தநாள் விழா மன்னார் ஆயரின் வாசஸ்தலத்தில் நேற்றிரவு நடைபெற்ற போது நிகழ்த்திய சிறப்புரையிலேயே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவது:

“இன்றைய தினம் எமக்கெல்லாம் ஒரு மைல்கல்த் தினமாகும். எம்மக்களின் நன்மையிலுந் தீமையிலும், வாழ்க்கையிலும் மரணத்தறுவாயிலும் பக்கத்தில் நின்று பல சேவைகள் புரிந்து வந்துள்ள ஆயர் அவர்களுக்கு 75 அகவை பூர்த்தியாகின்றது. இதுவரை காலமும் அவர் இறுக்கமான ஒரு காலத்தின் போது எம்மக்களுக்கு அரிய பல சேவைகள் புரிந்து வந்துள்ளார் என்றால் அவர் இனிவருங்காலத்தில் இறுக்கம் தளர்ந்த நிலையில் ஆனால் குழப்பம் மிகுந்த சூழலில் இனியடுத்த கட்டமாக தமிழ்ப் பேசும் மக்கள் அனைவரையும் ஒரு பொதுவான அரசியல் முடிவுக்கு வர உதவ வேண்டிய நிலையில் உள்ளார். அதாவது ஆயரின் தலைமைத்துவத்தின் கீழ் புலம்பெயர் தமிழ்ப் பேசும் மக்கள், உள்நாட்டுத் தமிழ்ப் பேசும் மக்கள் அனைவரும் இனிவருங்காலத்தில் எப்பேர்ப்பட்ட ஒரு அரசியற் தீர்வை எதிர் பார்க்கின்றார்கள் என்பதை அறிந்து வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கின்றது.

ஆயருக்கு இந்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழ்ப் பேசும் மக்களிடையே ஒரு பெருமதிப்பு இருக்கின்றது. அதனால் அவரின் தலைமைத்துவத்தின் கீழ் இப்பேர்ப்பட்ட ஒரு தீர்வை நோக்கி நாம் ஆராய்ந்து செல்வதில் தவறில்லை என்று கணிக்கின்றேன். அதனால்த்தான் பழைமைக்கும் புதுமைக்கும் இடையில் ஆயர் நிற்பதால் அவரின் இந்நாள் எமக்கு ஒரு மைல்கல் தினமாகிறது.

ஆயரின் பிறந்த இலக்கங்களைப் பார்த்தேன். எண் கணிதத்தின் படி அவர் பிறந்த எண்ணும் 7 கூட்டல் தொகையும் 7. அவரைப் போலவே இரு வழியும் 7 என்னும் இலக்கத்தைக் கொண்டு பிறந்தவர் காலஞ்சென்ற செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். இரு வழியிலும் 7ஐ இலக்கமாகக் கொண்டவர்கள் இயற்கையாகவே இறைவழி தேடும் இயல்பினை உடையவர்கள். தாம் எடுத்த காரியங்களில் மிகவும் திடமாக நின்று காரியமாற்றக்கூடியவர்கள். எந்தத் தடைகள் வந்தாலும் அவற்றை எதிர் கொண்டு சமாளிக்கக் கூடியவர்கள்.

அதேவாறான குணாதிசயங்களை நான் இரு வேறு சமயச் சார்பான இந்த இரு பெரியார்களிடமும் கண்ணுற்றேன். ஆயர் அவர்களிடம் நான் அவதானித்த மேலும் ஒரு குணமுண்டு. எந்த விதமான சூழலாக இருந்தாலுந் தன்னை வருத்திக் கொண்டிருக்கும் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார். அவர் தமது தூக்கத்தை மறந்து, சுகங்களை மறந்து, சுற்றங்களை மறந்து, சுய பாதுகாப்பைக் கூட மறந்து அவரை வருத்தும் பிரச்சனைக்குத் தீர்வு எவ்வாறு காண்பது என்ற எண்ணத்திலேயே திளைத்திருப்பார்.

அவர் எமக்கு இறைவன் அளித்த ஒரு பெருஞ் சொத்து. அவர் எம் தமிழ் மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகள் பல உண்டு. இறைவன் ஆசியுடன் அவன் அருளுடன் பல்லாண்டு பல்லாண்டு நோய் நொடியின்றி வாழ்ந்து எமது ஆயர் அவர்கள் எமது தமிழ்ப் பேசும் மக்களிற்கான ஒரு நியாயமான, நிரந்தரமான, நீதியான தீர்வைப் பெற உதவி செய்வார் என்ற மனத் தைரியத்துடன் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களை வழங்கி எமது அன்பு கலந்த நினைவுப் பரிசிலை இத்தால் வழங்குகின்றேன்.”