செய்திகள்

பொறுப்புக்கூறும் விடயம் உள்நாட்டில் முடக்கப்படலாம்: கஜேந்திரகுமார் அச்சம்

தற்போதைய ஆட்சியின் செல்வாக்கை சிங்கள மக்கள் மத்தியில் அதிகரிக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உள்ளதாகவும் இதனால் ஐ.நா.மனித உரிமை பேரவையின் விசாரணை அறிக்கையை வெளிப்படுத்துவதுடன் முடக்கி பொறுப்புக் கூறுதல் என்ற விடயம் உள்நாட்டிலேயே நடத்தி முடிப்பதற்கு முயற்சிக்கப்படவுள்ளதாகவும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அத்துடன், தற்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு செல்லும் பாதையில் ஏமாற்றம் அடையும் மக்கள் மாற்று தலைமையை தேடும்போது, அந்தத் தலைமை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கைக்குள் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக கூட்டமைப்புக்கு மாற்றீடாக ஒரு மூன்றாம் தமிழ் சக்தியை வல்லரசுகள் உருவாக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“ஜெனீவாவில் கடந்த காலத்தில் அமெரிக்கா தலைமையில் கொண்டு வரப்பட்ட பிரேரணைகள் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்டவை. உண்மையில் தமிழ் மக்கள் முகம் கொடுத்த மனித உரிமை மீறல், போர் குற்றம் மற்றும் இன அழிப்பு ஆகியவை தொடர்பில் பொறுப்புக்கூறும் நோக்கில் கொண்டுவரப்பட்டவையல்ல.

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி சீன சார்புடையதாக இருந்தமையால் இந்தியா மற்றும் மேற்கு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. அதாவது இலங்கையில் சீன இருப்பு அந்நாடுகளுக்கு தேசிய நலன் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் தேவைப்பாடு ஒன்று இருந்தது. மேலும், சீனாவின் இலங்கை வருகை மகிந்த ராஜபக்ஷவின் வெளிவிவகார கொள்கையில் தங்கியிருந்த படியால் அவரது ஆட்சியை வீழ்த்தி தங்களுக்கு சார்பான ஆட்சியை ஏற்படுத்தி நெருக்கடியிலிருந்து விடுபடலாமென்ற நம்பிக்கையில் செயற்பட்டன. அந்த வகையில் ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட பிரேரணைகள் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை அவமானப்படுத்தி அவருக்கு சிங்களப் பௌத்த மக்கள் மட்டத்தில் செல்வாக்கு இழக்க வைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதை காணமுடியும்.

மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருக்கும் வரைக்கும் இலங்கைக்கு குறிப்பாக சிங்களப் பௌத்த பெரும்பான்மையினருக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும் என்ற செய்தியை விடுவிப்பதாகவும், இந்தப் பிரேரணைகள் இருந்தன. இதற்காகவே இந்தியாவும் மேற்கு நாடுகளும் ஜெனீவா அரங்கை பயன்படுத்தியதேயொழிய தமிழ் மக்கள் மீது கரிசனை கொண்டல்ல.

gajandrakumar-02தற்போது நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய ஆட்சி இந்தியா, மேற்கு நாடுகள் சார்ந்துள்ள ஆட்சியாக இருக்கின்ற நிலையில் அதனை பலப்படுத்தி ஸ்திரப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. 75 வீதமான சிங்களப் பௌத்த சனத்தொகையை கொண்ட நாட்டில் ஒரு ஸ்திரத்தன்மை அடையக்கூடிய வழி 75 வீத மக்களை திருப்திப்படுத்தும் வகையில் செயற்படுவதில் மட்டும் கவனம் செலுத்தப்படும்.

அதாவது, கடந்த தேர்தலில் வெறுமனே சிங்களப் பௌத்த மக்களின் வாக்குகளை எடுத்துப் பார்த்தால் பெரிய பெரும்பான்மையான மக்கள் மகிந்தவுக்கு வாக்களித்தனர். 9 வருட ஊழல், மோசடி, மோசமான குடும்ப ஆட்சி, சர்வாதிகார போக்குள்ள அரசாங்கமாக இருந்தபோதும் ஒரு பெரிய பெரும்பான்மையான சிங்கள மக்கள் தொடர்ந்தும் அவருக்கு ஆதரவு வழங்கி வந்தனர்.

இதற்கு காரணம் தமிழருக்கு எதிராக கடைப்பிடித்த நிலைப்பாடு மற்றும் அவரை சர்வதேச நீதிமன்றத்துக்கு முன்நிறுத்தக்கூடாது என்பதற்காகவே. யதார்த்தம் இதுவாக இருக்க மைத்திரி பால சிறிசேனவின் புதிய ஆட்சியை ஸ்திரப்படுத்த மகிந்தவுக்கு வாக்களித்த பெரும்பான்மை மக்களின் வாக்குகளை தம் பக்கம் திருப்ப வேண்டிய தேவையுள்ளது. இதற்கு மகிந்த தமிழர் தொடர்பில் கடைப்பிடித்த நிலைப்பாட்டை அதேயளவு தொடரவேண்டும் அல்லது அதைவிட தீவிரப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

எனவே, அரசியல் தீர்வு தொடர்பாக ஒற்றையாட்சியை தாண்டி எந்தவொரு நடவடிக்கையும், மேற்கொள்ளப்பட போவதில்லை. அத்துடன் சமஷ்டி அடியோடு நிராகரிக்கப்படுவதுடன் சர்வதேச விசாரணை மற்றும் பொறுப்பு கூறுதல் ஆகியவையை பொறுத்தவரையில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் நிறுத்துவதற்கு தனது செல்வாக்கை அமெரிக்கா, இந்தியாவுடன் இணைந்து பயன்படுத்தும்.

இவ்வாறான நிலையில் அமெரிக்காவும் இந்தியாவும் இன்றைய ஆட்சியின் செல்வாக்கை சிங்கள மக்கள் மத்தியில் அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது. அந்த வகையில் ஜெனீவாவில் தொடங்கியிருக்கின்ற விசாரணை விளைவாக வெளியிடவுள்ள அறிக்கையோடு முடங்கி பொறுப்புக்கூறுதல் என்ற விடயம் உள்நாட்டிலே நடத்தி முடிப்பதற்கு முயற்சிக்கப்படவுள்ளது.

இந்த நிலைமையினால் இனப்பிரச்சினை தீர்வு ஒன்று ஒற்றையாட்சி முறைக்குள் 13ஆவது திருத்தம், மாகாண சபை என்ற மாயைக்குள் முடக்கப்படும். மறுபக்கம் பொறுப்புக்கூறுதல் என்ற விடயம் யுத்தம் நடைபெற்ற இறுதி இரு வாரங்களாக தான் தான் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்ததாக பெருமையடையும் மைத்திரிபால சிறிசேன தலைமையில் உருவாகும் ஒரு உள்ளக விசாரணையில் முடக்கப்படும். இது குற்றவாளியே குற்றம் தொடர்பில் விசாரிப்பதாக முடியும்.

இந்த அபாயமான நிலையில் தமிழ் மக்கள் அநாதைகளாவதை தவிர்ப்பதற்கு இலங்கையில் நடைபெறும் பூகோள அரசியலும் அதன் ஊடாக வரும் வாய்ப்புகளையும் ஆபத்துக்களையும் புரிந்துகொள்ளாது நாம் எம்மை மீட்க முடியாது. இன்றைக்கு இந்த ஆட்சிக்கு பின்னால் வல்லரசுகள் இருக்கலாம். உள்ளக சக்திகள் இருக்கலாம். ஏன் இந்த ஆட்சியை ஆதரித்த தமிழ்த் தலைவர்கள் என்று கூறுகின்றவர்கள் இருக்கலாம். இவை அனைவருக்கும் இந்த ஆட்சியை ஸ்திரப்படுத்துகின்ற தேவையொன்று தான் உள்ளது.

ஆனால், தமிழரை பொறுத்தவரையில் இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் ஒரு தீர்வு எட்டாமல், தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புக்கு பொறுப்பு கூறல் இல்லாமல் இருக்கும் வரைக்கும் மற்றவர்கள் விரும்பும் ஸ்திரத்தன்மையை அடையவிடாமல் ஜனநாயக ரீதியிலும் அகிம்சை வழியிலும் எமது உரிமை போராட்டத்தை முன்னெடுப்பதே எமக்கு இருக்கும் ஒரே வழி.

எவ்வளவுக்கு ஒரு மக்கள் மயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்துக்குள் எம்முடைய போராட்டங்களையும் அரசியல் நடவடிக்கைகளையும் முன்கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம் இந்த ஆட்சிக்கு பின்னால் இருக்கும் சக்திகளுக்கு கடும் நெருக்கடிகளை உருவாக்க முடியும். மீண்டும் ஸ்திரத்தன்மையை இலங்கையில் உருவாக்க வேண்டுமென்பதற்கான ஒரேயொரு காரணத்துக்காக இந்த சக்திகள் தமிழ் மக்களோடு ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டிய கட்டாய தேவைக்கு தள்ளப்படுவர்.

அவ்வகையானதொரு தமிழ் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு வெளிசக்திகளுடைய எடுபிடிகளாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பால் முடியாது. இனியாவது தமிழ் மக்கள் சரியான முடிவுகளை எடுக்க முன்வரவேண்டும்.