செய்திகள்

போதைப் பொருட்களை அறிமுகம் செய்வதன் பின்னணியில் பல்வேறு அரசியல் காரணங்கள்: விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

தமிழ் இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருட்களை அறிமுகம் செய்வதன் பின்னணியில் பாரிய ஒரு அரசியல்க் காரணம் இருந்து வந்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் இதற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற “உதயனின் உலகக் கிண்ண கிரிக்கெட் கொண்டாட்டம்” நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“அரசியல் ரீதியாக ஏன் இந்தப் போதைப் பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது என்று நினைக்கின்றீர்கள்? அதன் பின்னணியில் ஒரு முக்கியமான காரணம் உண்டு என்பது எனது கருத்து. எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி ஒரு காலத்தில் அரசாங்கங்களையே ஆட்டிப் படைத்து வந்துள்ளனர். வெளிநாட்டு உதவியுடன் பெருத்த செலவுடன்தான் அவர்களை அழிக்க முடிந்தது அப்போதிருந்த அரசாங்கத்தால். இனியுந் தமிழ் இளைஞர்கள் ஒன்று சேரக்கூடாது; ஒருமித்துச் செயலாற்றக் கூடாது; கல்வியில் சிறந்து விளங்கக் கூடாது; சுதந்திர எண்ணங்கள் அவர்கள் மனதில் எழக்கூடாது, விடுதலை வெறி அவர்களுள் கொழுந்து விட்டு எழக் கூடாது, அவர்களை நடைப் பிணங்கள் ஆக்க வேண்டும் என்ற எண்ணம் சில அதிகார பீட அலுவலர்களிடமும் அரசியல் வாத அமைச்சர்களிடமும் எழுந்தது. வடகிழக்கு மாகாண இளைஞர்கள் பலரை அழித்தொழித்து விட்டோம். ஆனால் மீண்டும் அவர்கள் எழமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் முகமாகவே போதைப் பொருட்களைத் திட்டமிட்டு அறிமுகஞ் செய்ய முன்வந்தார்கள் என்பது எனது கருத்து. தமிழ் இளைஞர்கள் அதற்கு அடிமையாகித் தமது சுயநினைவையும், சுய மரியாதையையும், சுய சிந்தனைகளையும் மறந்து விட வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்” என்று அவர் கூறினார்.

அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது:

இளைஞர் யுவதிகளான உங்களுக்கு ஒன்று கூற விரும்புகின்றேன். அதாவது எமது இளைஞர் யுவதிகள் விளையாட்டுக்களுடன் ஈடுபாட்டுடன் பெரியளவில் சம்பந்தப்பட்டால்த் தான் பலவித சமூகச் சீரழிவுச் செயல்களில் இருந்துந் தம்மைத் தப்ப வைத்துக் கொள்ளலாம் என்ற செய்தியே அது. விளையாட்டுக்கள் எங்கள் உடல்கள் பற்றி எமது திறன்கள் பற்றி சிந்திக்க வைக்குந் தன்மை வாய்ந்தன. எம்மைக் குறிக்கோள் நோக்கி இயக்குந் தன்மையன. சேர்ந்து கூட்டுறவாகக் கூடி விளையாட வழி வகுப்பன.

ஆனாலும் எத்தனை பிரபல்யமான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உலகளாவிய ரீதியில் ஊக்குவிக்கும் இரசாயனப் பொருட் பாவிப்பால் தமது விளையாட்டுப் பதவிகளை இழந்துள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.

அதாவது எமது உடல்கள் செயற்கை முறையாக ஊக்குவிக்கும் பொருட்கள் உதவியுடன் விளையாட்டுக்களில் எமது திறமையை வெளிப்படுத்துவதைச் சட்டம் தடைசெய்கின்றது. இயற்கையான வாழ்க்கை வாழ்ந்து வீர வீராங்கனைகள் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று சட்டம் எதிர்பார்க்கின்றது. ஆனால் சிலர் குறுக்கு வழிகளில் வெற்றியடைய Steroids எனப்படும் ஊக்குவிக்கும் இரசாயனங்களைப் பாவித்து முன்னேற எத்தனிக்கின்றார்கள். அது பிழை என்கின்றது சட்டம்.

போதைப் பொருள் பாவனையும் இப்பேர்ப்பட்டது தான். குறுக்கு வழியில் மனமருட்சியைப் (Hallucination) பெற எத்தனிக்கும் ஒரு செயற்பாடு இது. ஆனால் மிகவும் கொடிய பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியவை போதைப் பொருட்கள். யார் யாரோ வேண்டும் என்றே திட்டமிட்டு போதைப்பொருள் பாவனையைக் கல்லூரிகளிலும் பாடசாலைகளிலும் விநியோகித்து வருகின்றார்கள். சிறு சிறு கடைகளில் எல்லாம் சிறிய பொதிகளில் பல்வேறு பெயர்களில் அவற்றை விநியோகிப்பதாக எனக்கு செய்தி கிடைத்துள்ளது. காலத்திற்குக் காலம், அவற்றை அறிமுகஞ் செய்யும் மார்க்கங்கள் மாற்றப்பட்டு, வெவ்வேறு விதங்களில் எமது மாணவர்களுக்கு அவற்றைக் கிடைக்க வைக்க பிரயத்தனங்களில் இவர்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிய வருகின்றது. இவற்றை விநியோகிப்பவர்களை நாங்கள் அடையாளம் காணும் வரை எமது மாணவச் செல்வங்கள்தான் உஷாராக இருந்து தம்மைத் தாமே அவர்கள் காப்பாற்றிக் கொள்ள முன்வரவேண்டும். நாங்கள் சிறுவர்களாக இருந்த போது சிகரட் பிடிக்கும் பழக்கந் தான் தடை செய்யப்பட்டு வந்தது. அப்பொழுதெல்லாம் போதைப் பொருட்கள் பற்றி மாணவ சமுதாயம் அறியாதிருந்தது. ஆனால் பல காரணங்கள் இன்று சிகரட் பிடிப்பதைக் கட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளன. புற்றுநோய் கொண்டுவரக் கூடும் என்ற பயம்; சிகரெட்டுக்களின் விலையேற்றம்; சிகரெட் பாவனைக்கு மக்களிடம் எழுந்துள்ள ஒரு வெறுப்பலை; இவ்வாறு வேறு பல காரணங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் போதைப் பொருட்பாவனை சாராயம், சிகரெட் போன்றவற்றின் பாவனையிலும் பார்க்க மிக அபாயகரமான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. அண்மைய வன்புணர்விலும் கொலையிலும் புங்குடுதீவில் ஈடுபட்டவர்கள் போதைப் பொருட் பாவிப்புக்கு அடிமைப்பட்டிருந்ததாலேயே மிருகத்தனமாக நடந்து கொண்டதாகப் பேசப்பட்டு வருகின்றது.

இந்தத் தருணத்தைப் போதைப் பொருள் பாவனைக்கு எதிரான ஒரு பிரசாரக் கூட்டமாக மாற்றுவது எனது எண்ணமல்ல. உலகக் கிண்ண கிரிக்கெட் விநாடி வினாப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களை வெளியிடும் இதே நேரம் எமது மகிழ்வான சூழலிலும் எம்மைக் கவிழ்க்க வைக்குங் கரவுச் செயல்கள் எம்மைச் சுற்றி நடந்து கொண்டிருப்பதையே உங்களுக்கு உணர்த்த விழைகின்றேன். வெள்ளம் முழங்கால் மட்டிலும் வந்த பின் நடவடிக்கைகள் எடுக்காதிருப்பது மடமை. ஆகவேதான் கூறுகின்றேன் – போதைப் பொருட் பாவனை உடனே ஒழிக்கப்பட வேண்டும் என்று. இதற்கு வழி என்ன?

முதலில் போதைப் பொருள் பாவனையை ஒழிக்க வேண்டும் என்று மாணவ சமுதாயம் திடசங்கற்பம் எடுத்தால்த்தான் அதனை ஒழிக்க முடியும்.
மனமிருந்தால்த்தான் மார்க்கம் உண்டு. திருடராய்ப் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல் போதைப் பொருளை ஒரு பொருட்டாகக் கருதமாட்டோம் அதைத் துச்சமெனத் தூக்கியெறிவோம் என்று மாணவர்கள் நினைக்க முன்வந்தால்த் தான் அதன் பாவனையை நிறுத்த முடியும்.

பலவித அரசியல், பொருளாதார, புலணுணர்வு சார்ந்த காரணங்களுக்காக எம்மிடையே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்தப் போதைப் பொருள் விநியோகம், அதன் தாற்பரியம் பற்றி இங்கு கூறுவது பொருத்தம் என்று நம்புகின்றேன். எமது மாணவச் செல்வங்கள் கூட்டமாகக் கூடும் இப்பேர்ப்பட்ட இடங்களில்த்தான் அவர்களுக்கு எச்சரிக்கும் வண்ணம், எது உண்மை என்று எடுத்தியம்பும் வண்ணம், எங்கள் எண்ணங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் சில வார்த்தைகள் பேசுவது நன்மை பயக்கும் என்று நம்புகின்றேன். மனமகிழ்வுடன் கூடியிருக்கும் உங்கள் மத்தியில் மயக்குப் பொருட்கள் பற்றி முறையிடுகின்றேன் என்று எண்ணாதீர்கள். உங்களைச் சுற்றி அபாயம் காத்திருக்கின்றதை எடுத்தியம்புகின்றேன்.

அரசியல் ரீதியாக ஏன் இந்தப் போதைப் பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது என்று நினைக்கின்றீர்கள்? அதன் பின்னணியில் ஒரு முக்கியமான காரணம் உண்டு என்பது எனது கருத்து. எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி ஒரு காலத்தில் அரசாங்கங்களையே ஆட்டிப் படைத்து வந்துள்ளனர். வெளிநாட்டு உதவியுடன் பெருத்த செலவுடன்தான் அவர்களை அழிக்க முடிந்தது அப்போதிருந்த அரசாங்கத்தால். இனியுந் தமிழ் இளைஞர்கள் ஒன்று சேரக்கூடாது; ஒருமித்துச் செயலாற்றக் கூடாது; கல்வியில் சிறந்து விளங்கக் கூடாது; சுதந்திர எண்ணங்கள் அவர்கள் மனதில் எழக்கூடாது, விடுதலை வெறி அவர்களுள் கொழுந்து விட்டு எழக் கூடாது, அவர்களை நடைப் பிணங்கள் ஆக்க வேண்டும் என்ற எண்ணம் சில அதிகார பீட அலுவலர்களிடமும் அரசியல் வாத அமைச்சர்களிடமும் எழுந்தது. வடகிழக்கு மாகாண இளைஞர்கள் பலரை அழித்தொழித்து விட்டோம். ஆனால் மீண்டும் அவர்கள் எழமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் முகமாகவே போதைப் பொருட்களைத் திட்டமிட்டு அறிமுகஞ் செய்ய முன்வந்தார்கள் என்பது எனது கருத்து. தமிழ் இளைஞர்கள் அதற்கு அடிமையாகித் தமது சுயநினைவையும், சுய மரியாதையையும், சுய சிந்தனைகளையும் மறந்து விட வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். ஆகவே எமது இளைஞர்கள் இடையே போதைப் பொருட்களை அறிமுகஞ் செய்யப் பாரிய ஒரு அரசியல்க் காரணம் பின்னணியில் இருந்து வந்துள்ளது என்பதை எங்கள் மாணவ உலகம் அறிந்து கொள்ள வேண்டும். விநியோகம் செய்பவர்களை எமக்குக் காட்டிக் கொடுக்க மாணவ சமுதாயம் முன்வர வேண்டும். இந்தச் சதியில் இருந்து தப்ப முயற்சிக்க வேண்டும்.

அடுத்து பொருளாதாரக் காரணங்கள் என்ன என்று பார்ப்போம். சில அமைச்சர்கள், உயர் பதவிகளில் இருந்தவர்கள், சில காலத்திற்கு முன் அதிகாரத்தில் இருந்த பலர் கூட அண்மைக் காலம் வரையில் போதைப் பொருள் விநியோகத் தொழிலில் மறைமுகமாக ஈடுபட்டிருந்தார்கள் என்று இன்றைய அரசாங்கத்தின் ஆராய்வின் போது தெரியவந்துள்ளது. ஆகவே செல்வாக்கு மிகுந்தவர்களின் உந்துதலின் பேரில் இந்தப் போதைப் பொருள் விநியோக வியாபாரம் வடமாகாணத்தில் நடந்து வந்துள்ளது என்ற முடிவுக்கு வரலாம். பணம் புரட்டுவதே அவர்கள் குறிக்கோள்.
இப்பேர்ப்பட்டவர்களுக்கு பணத்திற்கு மேலாக எதுவுமே முக்கியமில்லை. எனவே பொருளாதார காரணங்களுக்காகவும் போதைப் பொருள் விநியோகம் நடைபெற்று வருகின்றது. அதனால் சீரழிவது எமது மாணவ இளஞ் சந்ததியினர். நன்மை அடைவது பெரும் பணம் படைத்தவர்களும், இடைத்தரகர்களும், மாணவ முகவர்களும்.

மூன்றாவதாகப் புலணுர்வை ஒரு காரணமாக வைத்தேன். இந்தப் புலணுர்வு ஒரு தந்திரப் பொறிமுறை. இளைஞர்களிடம் இந்தப் புலணுர்வைத் தூண்டி விட்டால் என்ன நடக்கின்றது என்று தெரியுமா? அவர்கள் பாவனையாளர்களாக முதலில் தொடங்கி போதைப்பொருள் அடிமைகளாக மாறி பின்னர் காலாகாலத்தில் விநியோகத்தர்களாகவும் மாறிவிடுகின்றார்கள. ஏன் என்றால் போதைப் பொருள் பாவனைக்குக் காசு பணம் வேண்டும். அதற்கு அடிமையானதும் அதன் கோரப் பிடிக்குள் இருந்து தப்ப முடியாது. ஆகவே பாவிப்பதற்குப் பணம் வேண்டும். இதன் காரணத்தினால் அவர்கள் விநியோகத்தர்களாக மாறுகின்றார்கள். போதைப் பொருட்களை மற்றவர்களுக்கு விற்றுத் தாமும் போதையில் மயங்கி நிற்கத் துணிகின்றார்கள்.

இதனால்த்தான் முதலில் அறிமுகம் செய்தவர்களையும், விநியோகத்தர்களையும் நாம் அடையாளம் காண முடியாது போகின்றது. புலணுர்வின் நிமித்தம் இதற்குள் மாட்டிக் கொண்டவர்கள் தான் ஈற்றில் சட்டத்தின் பிடிக்குள்ளும் கைது செய்யப்பட்டு கையேற்கப் படுகின்றார்கள். வழக்குகளின் போது எனக்குத் தெரியவந்த விடயங்கள் இவை. விரைவில் மத்திய அரசாங்கத்துடனுஞ் சேர்ந்து போதைப் பொருள் பாவிப்பை அழிக்க போதிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் குணமாக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட உள்ளோம். மாணவ மாணவியரின் பூரண ஒத்துழைப்பை நாம் எதிர்பார்க்கின்றோம்.

இதில் ஊடகத்தின் பங்கு மிக முக்கியமானது. போரின் பின்னர் வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியையும் மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய என்ன கருமம் ஆற்ற வேண்டும் என்பதில் பத்திரிகைகள் தமது முழு நாட்டத்தையுஞ் செலவிட வேண்டும். அதே நேரத்தில் மக்களின் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் ஏதுக்களைக் கண்டறிந்து வெளிக் கொண்டுவர வேண்டும். பல்கலைக்கழகங்கள் போன்ற அறிவுசார் நிறுவனங்களுடன் சேர்ந்து தொழிற் திறனுடன் செயலாற்ற முன்வர வேண்டும். எமது குற்றங் குறைகள் எதுவாக இருந்தாலும் எமது மக்கள் அறிவுக் கூர்மையும் திறமையுங் கொண்டவர்கள். புதியனவற்றைத் தேடும் இயல்பினர். அவர்களை சரியான பாதையில் திசை திருப்பினோம் என்றால் மற்றைய மாகாணங்கள் எல்லாவற்றிலும் பார்க்க சகல துறைகளிலும் முன்னணியில் நிற்க கூடியவர்கள். அதற்காக ஊடகங்கள் தமது பங்கைச் செய்ய முன்வர வேண்டும்.

உதாரணத்திற்கு 34 கிராம சேவகப் பிரிவுகள் வடமாகாணத்தில் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பரிசீலித்து, ஆராய்ந்து பார்த்து அவற்றுள் இருக்கும் வளங்கள், குறைபாடுகள், செய்யக் கூடிய செயற்பாடுகள் பற்றி எல்லாம் பத்திரிகைகள் கட்டுரைகளைக் கொண்டுவந்து குறித்த குறைகளைத் தீர்க்க மாகாண சபை முன்வரவேண்டும் என்று எம்மை நிர்ப்பந்திக்கலாம். இதனால் எமது மக்களின் நாளாந்த தேவைகள் உலகறியச் செய்யப்படுகின்றன. இவற்றைக் காணும் வெளிநாடுகளில் உள்ள ஏதேனும் உள்ளூராட்சி மன்றங்கள் தம்முடன் எமது கிராமசேவகப் பிரிவை இரட்டையாக உள்ளேற்று வசதியுள்ள அவர்கள் வசதியற்ற எமது உள்ளூராட்சி மன்றத்தை அபிவிருத்தியடையச் செய்யலாம். மொத்தத்தில் எமது ஊடகங்கள் மக்களுக்கு நன்மை தரும் விதத்தில் செயலாற்ற முன்வர வேண்டும். அதே நேரம் போதைப் பொருள் விற்பனையாளர்கள் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் பற்றியும் எமக்கு எடுத்துரைக்க முன்வர வேண்டும். இது ஊடகத்தில் உள்ளவர்களின் உரிமையுடனான உத்தம பங்கு. அதை ஆற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.