செய்திகள்

போர்க்குற்ற விசாரணை அறிக்கை ஜெனீவாவில் விவாதிக்கப்படும்

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸில் நடத்திய விசாரணை அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஸெயித் அல் ஹ+சைன் இந்த அறிக்கையை சமர்ப்பிப்பார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் குறிப்பிட்ட காலப்பகுதியில் இருதரப்பாலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைசெய்ய கடந்த வருடம் மனித உரிமை கவுன்ஸிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மனித உரிமை கவுன்ஸிலும், பாதுகாப்புச்சபையும் வழங்கிய ஆணையின் படி இலங்கை உட்பட ஐந்து நாடுகள் குறித்து விசாரணைகள் நடைபெற்றன. இதன்படி சர்வதேச விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு, இலங்கையில் இடம்பெற்றதாகக் கருதப்படும் யுத்தகுற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டன.

இந்த அறிக்கை மார்ச் மாதம் நடைபெறவுள்ள கவுன்ஸிலின் அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்பட்டு இலங்கை விசாரணைகள் குறித்த அறிக்கையும் வெளியாகவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.