செய்திகள்

மகிந்தவிற்கு ஆதரவாக கோத்தா கருத்து

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக முன்வைக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கல்கமுவவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் ஊழல்கள் மூலம் ஜனாதிபதி எதனையாவது பெற விரும்பியிருந்தால் அவர் யுத்தத்தை தொடர்ந்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நடைபெற்ற காலமே ஊழலுக்கான சிறந்த காலமாக காணப்பட்டது,பல ஆயுத கொள்வனவுகளில் ஊழல் காணப்பட்டது, எனினும் ஜனாதிபதி விடுதலைப்புலிகளை தோற்கடித்து ,நாட்டை அபிவிருத்தி செய்தார்.
மக்கள் தற்போது அபிவிருத்தியின் பலாபலன்களை அனுபவிக்கின்றனர், ஜனாதிபதி ஊழல்களில் ஈடுபட்டிருந்தால் அந்த பலாபலன்கள் மக்களை சென்றடைந்திராது.
அவர்கள், வீதிகள் பெருந்தெருக்கள் குறித்து குறிப்பிடுகின்றனர்,கட்டுநாயக்கா நெடுஞ்சாலைகள் திட்டம் பல வருடங்களாக முன்னெடுக்கப்படாமலிருந்தது,ஆனால் நாங்களே ஒப்பந்தக்காரர்களுக்கு பணத்தை வழங்கி திட்டததை முன்னெடுத்தோம், இந்த திட்டங்களில் ஊழல் இருந்திருந்தால் அவை நிறைவேறியிராது,
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தின் போதும், அதற்கு முன்னைய அரசாங்கங்களின் கீழும் விடுதலைப்புலிகள் பலமடைந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.