செய்திகள்

மகிந்த தோல்வியடைந்து பதவி விலக மறுத்தால் சந்திரிகாவிடமுள்ள திட்டம் என்ன?

ஜனாதிபதித் தேர்தலில் தோல்விடைந்து பதவியை விட்டு விலக மகிந்த ராஜபக்ஷ முன்வராது போனால், அவரை வெளியேற்றுவதற்கு எதிரணியிடம் ஒரு இரகசியத் திட்டம் இருப்பதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் அந்தத் திட்டத்தின் விபரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

பிபிசி சிங்கள சேவையான சந்தேசயவுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி கண்ட பின்னரும் பதவியை விட்டு விலகாமல், மகிந்த ராஜபக்ச அடம்பிடிப்பாரேயானால், அவரை வெளியேற்றுவதற்கு எதிரணியிடம் ஒரு இரகசியத் திட்டம் உள்ளதாகவும் சந்திரிகா குறிப்பிட்டார்.

எனினும், அத்தகைய சூழலில், தாம் முன்னெடுக்கவிருக்கும் நடவடிக்கைத் திட்டம் குறித்து விபரங்களை வழங்க அவர் மறுத்து விட்டார். தேர்தலில் வன்முறைகளையும், மோசடிகளையும் நிகழ்த்த அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகத் தக்க்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், பொதுமக்களின் கருத்தை இதன் மூலம் தோற்கடிக்க முடியாது என்றும் சந்திரிகா தெரிவித்துள்ளார்.

2004ம் ஆண்டு மகிந்த ராஜபக்சவை பிரதாமராக நியமிக்க எடுத்த முடிவுக்காக தான் இப்போது வருத்தம் கொள்வதாகவும், அதுவே நாட்டின் அதிபராக மகிந்த ராஜபக்ச வருவதற்கு வழிவகுத்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புலம் பெயர் தமிழர்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் சந்திரிகா இந்தச் செவ்வியில் கூறியுள்ளார்.