செய்திகள்

மக்கள் ஆணையைப் பெறாத சந்திரிகா எவ்வாறு முடிவுகளை எடுக்க முடியும்? கம்பன்பில

மக்கள் ஆணை எதையும் பெற்றுக் கொள்ளாத சந்திரிகா குமாரதுங்கவுக்கு நாட்டைப் பற்றிய தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது என ‘பிலிதுறு’ ஹெல உறுமய கட்சியின் செயலாளர் உதய கம்மம்பில கேள்வி யெழுப்பினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கருத்துத் தெரிவித்த அவர்: மஹிந்த ராஜபக்ஷவை பேராசைக்காரர் என்று விமர்சிக்கும் எந்த அருகதையும் சந்திரிகாவுக்குக் கிடையாது என்றும் தெரிவித்தார்.

இக்காலங்களில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக களத்தில் இறங்கியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ பதவி ஆசை பிடித்தவர் என்றும் பகிரங்கமாக விமர்சித்து வருகிறார். மஹிந்தவைப் பொறுத்தவரை அவர் மக்கள் வேண்டுகோளுக்கு இணங்கவே மீண்டும் அரசியலுக்கு வருகிறார்.

எந்த மக்கள் ஆணையும் இல்லாமலேயே சந்திரிகா நாட்டைப் பற்றிய தீர்மானங்களை மேற்கொள்கின்றார். நிறைவேற்று சபையில் அவருக்கும் அங்கத்துவம் வழங்கப்படுள்ளது. இந்த ரீதியில் செயற்படுவதற்கு அவர்களுக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளார்களா என்பதை நாம் கேட்க விரும்புகின்றோம்.

சந்திரிகா குமாரதுங்க மஹிந்த ராஜபக்ஷவைப் பற்றி பகிரங்கமாக விமர்சிக்கிறார். நான் அவரிடம் சவால் விடுக்கின்றேன். கம்பஹாவில் தேர்த லில் நின்று பிரசன்ன ரணதுங்கவை விட அதிக வாக்குகளை சந்திரிகா எடுத்துக்காட்டட்டும் என்றும் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மம்பில மேலும் தெரிவித்தார்.