செய்திகள்

மக்கள் உரிமைகளை பாதுகாக்கவே அதிகாரங்களை பயன்படுத்துவேன் : ஜனாதிபதி

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக எந்தவொரு சர்வதேச நாடும் கதைப்பதற்கு இனி இடமளிக்க மாட்டேன் என தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , தான் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காகவே தனது முழு அதிகாரங்களையும் பயன்படுத்துவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நேற்று  நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்ததன் பின்னர் உழைக்கும் மக்களின் உரிமைகள் மற்றும் சிறப்புரிமைகளை பாதுகாப்பதற்கே நான் என்னிடமுள்ள அதிகாரங்களை பாவித்துள்ளேன். இதன்படி மக்களின் அடிப்படை உரிமைகள், ஜனநாயக உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை பாதுகாத்து நாட்டை சுபீட்சமாக நடத்தி செல்வதற்காகவே நான் எனது அதிகாரத்தை பயன்படுத்துவேன்.
இதேவேளை இந்த நாட்டின் உள்விவகாரங்களில் எந்தவொரு நாடும் சரி நிறுவனமும் எம்மை நோக்கி விரல் நீட்ட இடமளிக்காத எதிர்காலமொன்றுக்காக நாம் ஒன்றுபட்டு வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். நாட்டின் மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பில் உலகில் எங்கும் பேசுவதற்கு இந்த வருடத்தின் பின்னர் இடமளிக்க மாட்டேன். இது தொடர்பான நடவடிக்கைகளை முழுமையாக பூர்த்தி செய்து சர்வதேச தலையிடாத நிலையொன்றுக்கு நாட்டை இட்டுச் செல்வேன்.
சில ஊடகங்கள் மற்றும் எதிர்தரப்பு அணியைச் சேர்ந்த சிலர் பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றன. எந்த நபருக்கும் என்னை வழிநடத்திச் செல்ல முடியாது. மக்களால் மட்டுமே என்னை வழிநடத்திச் செல்ல முடியும்.
இதேநேரம் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளது எஞ்சியிருக்கும் அதிகாரங்களை கூட நான் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையானோரின் அபிப்பிராயத்தையும் மக்களின் கருத்தையும் உழைக்கும் மக்களின் கருத்தையும் செவிமடுத்து அதன் அடிப்படையில் தான் அதிகாரங்களை பயன்படுத்துவேன். என தெரிவித்துள்ளார்.