செய்திகள்

மக்கள் பணத்தை சூறையாடி மகிந்த குடும்பத்துக்கு என்ன தண்டனை? அநுர குமார கேள்வி

மக்களின் பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக சட்டத்தை சரியான முறையில் செயற்படுத்தி தண்டனை வழங்க ஜனாதிபதியோ, பிரதமரோ நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குருநாகல் நகர மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, கோத்தாபய ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, யோஷித ராஜபக்ஷ, ஷிராந்தி ராஜபக்ஷ, உதயங்க வீரதுங்க, நிஷாந்த விக்ரமசிங்க உட்பட ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற போதிலும் அது நடப்பதாக தெரியவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுத்தால், கட்சி தன் கையை விட்டு சென்று விடும் என்ற பயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்றியுள்ள மைத்திரிபால சிறிசேன இரண்டு திரிகள் எரியும் விளக்காக மாறியுள்ளதால், விசாரணைகளுக்கு தடையேற்படுத்தி வருவதுடன் அவற்றை தாமதப்படுத்தியும் வருகிறார்.

ஊழல் எதிர்ப்பு செயலகத்திற்கு 142 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் 92 முறைப்பாடுகள் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடமும் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிதி மோசடி விசாரணைப் பிரிவிடமும் கையளிக்கப்பட்டுள்ளன.

வழங்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் தகவல்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.