செய்திகள்

மக்கள் வீதியில் இறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

பொதுமக்களின் சீற்றம் நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றது என தெரிவித்துள்ள நாரஹன்பிட்டிய அபயராம விகாரையின் தலைமை மதகுரு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிடுவதற்கு நீண்ட நாள் ஆகாது எனவும் அவ்வேளை அந்த இடத்திலேயே ராஜபக்ச அரசாங்கத்தின் குடும்ப ஆட்சி முடிவிற்கு வரலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்களின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அப்படி நடந்தால், ராஜபக்ச குடும்பத்துடன் அத்துடன் முடிந்து விடும் என்பதே எனது நம்பிக்கை. அப்படியான இடத்திற்கு வழியை ஏற்படுத்தாது நாட்டையும் காப்பாற்றி நாட்டை முன்னெடுத்துச்செல்லுங்கள் என்பதே எமது கோரிக்கை.எமது மாதுளுவாவே சோபித தேரர் உயிருடன் இருக்கும் போது, ஒருவரிடம் நாட்டின் அதிகாரத்தை வழங்காதீர்கள் என்ற வார்த்தையை கூறினார். இதன் மூலம் நாடு அழிவை நோக்கி செல்ல முடியும். அது தற்போது நடந்துள்ளது.

ஒருவரிடம் அதிகாரங்களை கொடுத்து விட்டு, வேறு வேலைகளை தற்போது செய்கின்றனர். அமைச்சர் உதய கம்மன்பில் எரிபொருள் விலைகளை அதிகரித்த போது, இதனை செய்ய வேண்டாம், மக்களின் அதிருப்தி அதிகரிக்கும் என்று கூறி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் அதனை தடுத்து நிறுத்தி இருக்க முடியும். அதுதான்நிறைவேற்று அதிகாரம் என்பது. அப்படியில்லை என்றால், நிறைவேற்று அதிகாரத்தில் எந்த பயனுமில்லை என நாராஹென்பிட்டிய அபயராம விகாரையில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.(15)