செய்திகள்

மடு சென்ற அனந்தி சசிதரனின் சாரதியிடம் புலனாய்வாளர்கள் விசாரணை

மடு திருத்தலத்தில் காணாமல் போனேரின் உறவுகளுடன் இணைந்து பாப்பாரசரை சந்திப்பதற்காக சென்றிருந்த சமயம் அனந்தி சசிதரனின் சாரதியிடம் புலனாய்வாளர்கள் விசாரித்துள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் தெரிவிக்கையில்:
காணாமல் போனோரின் உறவினர்கள் பாப்பரசரை சந்திப்பதற்கும் பாப்பரசரின் ஆராதனைகளில் கலந்துகொள்வதற்காகவும் மடு திருத்தலத்திற்கு சென்றிருந்தனர். இவர்களுடன் காணாமல் போனோரின் உறவினர் என்ற வகையில் நானும் எனது இரு குழந்தைகளும் மடு திருத்தலத்திற்கு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை சென்றிருந்தோம்.

அன்றைய தினம் தட்சனாமருதமடுவில் தங்கியிருந்து மறுநாளான புதன்கிழமை காணாமல் பேனோரின்உறவினாகளின் குழுவுடன் இணைந்து பாப்பாரசரை சந்திப்பதற்கு எண்ணியிருந்தேன்.
எனினும் நான் சென்ற வாகனம் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்திற்கு நான் இல்லாத சந்தர்ப்பத்தில் வருகை தந்த பொலிஸார் யாருடைய வாகனம் என எனது சாரதியிடம் கேட்டிருந்தனர். அவரும் எனது வாகனம் என சுட்டிக்காட்டியதையடுத்து சம்பவ இடத்திற்கு புலனாய்வாளர்கள் வருகை தந்து எனது வாகனத்தை புகைப்படம் எடுத்ததுடன் சாரதியிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் நான் அச்சுறுத்தல் காரணமாக தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த இடத்தில் இருந்து வேறு இடத்தில் சென்று மரத்தின் கீழ் இரவு பூராகவும் தங்கியிருந்து மறுநாள் எமது குழுவுடன் இணைய வேண்டிய நிலை ஏற்பட்டது.

புதிய ஆட்சியின் கீழ் தொடரும் இத்தகைய அச்சுறுத்தல்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.