செய்திகள்

மட்டக்களப்பில் கடந்த 6 மாதங்களில் வீதி விபத்தில் 53 பேர் பலி

கடந்த ஆறு மாத காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி விபத்து காரணமாக 53 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்று பொறியியலாளர் நா.சசிநந்தன் தெரிவித்தார். வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வீதி பாதுகாப்பு வாரம் நாடெங்கிலும் நேற்று செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்று பொறியியலாளர் காரியாலயத்தின் ஏற்பாட்டில் பிரதான நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களை அறிவுறுத்தும் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்று பொறியியலாளர் நா.சசிநந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் வை.தர்மரெட்னம், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் பி.பத்மராஜா, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், புனித மைக்கேல் கல்லூரியின் அதிபர் இ.வாஸ், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது பிரதான வீதிகளை பாதுகாப்பான முறையில் கடப்பது மற்றும் வீதி போக்குவரத்தின்போது, கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. இங்கு மாணவர்கள் மத்தியில் கருத்துரை வழங்கிய மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்று பொறியியலாளர் நா.சசிநந்தன், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் 53 பேருக்கு மேல் வீதி விபத்துக்காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்கவேண்டுமென்றால் மாணவர்களாகிய நாங்கள் வீதி ஒழுங்கு விதிகளை பின்பற்றுவதுடன் ஏனையவர்களுக்கும் அது தொடர்பில் அறிவுறுத்தவேண்டும்.

நாங்கள் யுத்த சூழ்நிலையில் இருந்து மீண்டதன், காரணமாக எமது சிந்தனை இன்னும் பூரணத்துவம் அடையாத நிலையிலேயே உள்ளது. வீதியை எங்கு எங்கு குறுக்கறுத்து செல்வது என்பது தொடர்பில் சிந்திக்காத நிலையே உள்ளது. அதுபோன்று வீதியில செல்லும்போது வீதி போக்குவரத்து தொடர்பிலான நடைமுறையினையும் பின்பற்றுவது குறைவாகவுள்ளது. பாடசாலையை விட்டு வெளியில் வரும்போது நாங்கள் வீட்டுக்கு செல்லும் சிந்தனையிலேயே செல்கின்றோம். பாடசாலை கடவை எங்கு உள்ளது. அதன் ஊடாக நாங்கள் செல்லவேண்டும் என்ற சிந்தனை வருவது குறைவாகும். மேலைத்தேய நாடுகளை சேர்ந்தவர்கள் வீதி போக்குவரத்தின்போது சட்டதிட்டத்துக்கு முரணாண வகையில் செயற்படமாட்டார்கள். அந்த அடிப்படையில் எமது மனப்பக்குவத்தையும் மாற்றி வீதி சட்டதிட்டங்களுக்கு ஏற்ப எமது மனப்பக்குவத்தையும் மாற்றுவதன் காரணமாக வீதி விபத்துக்களை குறைக்கலாம் என்றார்.DSC_9661 DSC_9662 DSC_9665