செய்திகள்

மட்டக்களப்பில் சகல சைக்கிள்களுக்கும் எதிரொலி ஸ்ரிக்கர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 11 பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும் அனைத்து துவிச்சக்கர வண்டிகளுக்கும் எதிரொளி ஸ்டிக்கர்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சர் உபால் ஜயசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இந்த மாதம் மட்டும் துவிச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் இரவு வேளைகளில் துவிச்சக்கர வண்டியில் செல்வோரை இனங்காணமுடியாத நிலையிலேயே இந்த விபத்துகள் நடைபெறுவதாகவும் அதன் காரணமாகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் முச்சக்கர வண்டிகளுக்கு எதிரொளி விளக்கு பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்துக்கு முன்பாகவுள்ள பகுதியில் நடைபெற்றது.

இதன் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சர் உபால் ஜயசிங்க மற்றும் மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சர் ஹக்மன உட்பட பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு நகரில் பயணம் செய்த துவிச்சக்கர வண்டிகளுக்கு மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் எதிரொளி விளக்கு பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டினர்.

வீதி விபத்துக்களினால் வருடமொன்றுக்கு இலங்கையில் 2,500க்கு அதிகமான நபர்கள் மரணித்து வருகின்றனர். 10 வருடங்களில் 36,031 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 2,912 துவிச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் மரணத்தை தழுவிக் கொண்டுள்ளனர்.

2014ஆம் ஆண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 222 துவிச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் மரணித்துள்ளனர் என்று வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மற்றும் இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளனர்.

IMG_0006 IMG_0012 IMG_0018 (1) IMG_0035 IMG_0046 IMG_0079 IMG_0087