செய்திகள்

மட்டக்களப்பில் 10 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருமலை வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் நேற்று சனிக்கிழமை தொடக்கம் இன்று காலை வரையில் பொதுச்சுகாதார பரிசோகர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது சுகாதாரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மற்றும் நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவான முறையில் சூழலை வைத்திருந்த 10 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கவுள்ளதாக வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் சோமசுந்தரம் அமுதமாலன் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை காலை தொடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வரை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் சுற்றாடல் பிரிவு பொலிஸாரும் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் இணைந்து இந்த நடவடிக்கையினை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எட்டு பொதுச்சுகாதார பரிசோதகர்களும் பத்து பொலிஸாரும் இணைந்து ஐந்து குழுவாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் 64 வர்த்தக நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும் வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் சோமசுந்தரம் அமுதமாலன் தெரிவித்தார்.

சுகாதார சீர்கேடுகளை தடுத்து மக்கள் நலநன முன்னிலைப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது சுகாதார சீர்கேடாக சூழலை வைத்திருந்தவர்கள்,நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவாக சூழலை வைத்திருந்தவர்கள் பத்து பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் அமுதமாலன் தெரிவித்தார்.

IMG_0060