செய்திகள்

மணிரத்தினம் சுகமாக இருக்கிறார்! மனைவி சுஹாசினி பேட்டி

டைரக்டர் மணிரத்னம் நலமாக இருக்கிறார் என்று அவரது மனைவியும், நடிகையுமான சுஹாசினி கூறினார்.

தமிழ் திரையுலகில் முன்னணி டைரக்டராக இருப்பவர் மணிரத்னம். மவுனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, பம்பாய், அலைபாயுதே உள்பட ஏராளமான ஹிட் படங்கள் எடுத்துள்ளார்.

சமீபத்தில் ‘ஓ காதல் கண்மணி’ படத்தை இயக்கி வெளியிட்டார். அப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் டெல்லி சென்று இருந்த அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் அவசர பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளித்தனர். மணிரத்னத்துக்கு ஏற்கனவே இரண்டு முறை நெஞ்சுவலி ஏற்பட்டது.

அப்போது சிகிச்சை பெற்று குணமானார். தற்போது மூன்றாவதாக நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. மணிரத்னம் உடல் நிலை மோசமாக இருப்பதாக இணைய தளங்களில் செய்தியும் பரவியது.

இதனை சுஹாசினி மறுத்தார். அவர் கூறும் போது, ‘‘மணிரத்னம் நலமாக இருக்கிறார். கவலைப்படும்படி எதுவும் இல்லை. வழக்கமாக அவர் உடல் பரிசோதனை செய்து கொள்வது உண்டு. அப்படித்தான் தற்போதும் உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உடல் நிலையில் லேசான அசவுகரியமும் இருந்தது. ஆனாலும் பயப்படும்படி எதுவும் இல்லை. இன்று நாங்கள் சென்னை திரும்புகிறோம்’’ என்றார்.