செய்திகள்

மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமல்லாது உயர்நிலை அடையவும் அயராது படிக்க வேண்டும்! கோபிநாத் பேச்சு

இந்தியாவின் தமிழ்நாட்டின் பல்லடம், அவிநாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியான வெற்றிக்கு வழி கருத்தரங்கம் நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கருப்பண்ணசாமி, பொருளாளர் கோவிந்தசாமி, நிர்வாகி முத்துஅருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மகுடீஸ்வரன் வரவேற்றார்.

விஜய் தொலைக்காட்சியின் நீயா? நானா? நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் பேசும்போது,

மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமல்லாது உயர்நிலை அடையவும் அயராது படிக்க வேண்டும். சமுதாய மறுமலர்ச்சி அடையவும், நலிவடைந்த குடும்பம் சமுதாயத்தில் உயரவும், அடுத்தவருக்கு உதவி செய்யவும் கல்வி ஓர் ஆயுதம் ஆகும்.

புத்தகத்தை விரும்பம் இன்றி படித்தால் படிக்க முடியாது. விருப்பத்தோடு படித்தால் படிப்பு சுமையாக இருக்காது. சுவையாக இருக்கும். ஜெயிக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால் அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

மாணவர்களுக்கு பலர் பல துறை படிப்புகளை கூறினாலும் அவரவர் படிக்க வேண்டிய பாடப்பிரிவுகளை, எந்த துறை படிப்புகளை படிக்க வேண்டும். என்று மாணவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மாணவர்கள் தங்கள் குடும்ப சூழ்நிலைகளையும் உணர்ந்து மனக்கட்டுப்பாட்டுடன் இருப்பது மிக முக்கியம்.

இக்காலத்தில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. மாணவர்கள் அதற்கேற்ப திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். வெற்றியும், தோல்வியும் உங்கள் கையில் தான் உள்ளது. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது தான் நடக்கும்.

தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்று பயந்து கொண்டு படிக்காதீர்கள் அது உங்களை தோற்கடித்து விடும். அதே சமயம் துணிந்து வெற்றி நிச்சயம் என்று படியுங்கள் வெற்றி உங்களை தேடி வரும். பெற்றோர்கள், தங்களது பிள்ளைகள் நல்ல மதிப்பெண் பெறுவது மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

தற்போது மார்க் பெற வேண்டும் என்பதற்காக அதிகாரிகளாக ஆசிரியர்கள் மாறி வரும் சூழ்நிலை உள்ளது. தனிப்பட்ட பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்வதற்காக மார்க் பெறும் எந்திரங்களாக மாணவர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில், குடும்பம், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றின் பெயர் மாறி இன்று மனித மூளைகளை அடகு வைக்கும் நாடாக மாறி வருகிறது. சட்டங்கள் நம்மை வழி நடத்தவில்லை. கம்பராமாயணம், சீவக சிந்தாமணி, குண்டலகேசி போன்ற நூல்களின் மூலம் கருத்துக்களை நாம் பின்பற்றி வருகிறோம். கல்வி என்பது தன்னம்பிக்கையுடன் சுய மரியாதையை பெறுவதுதான். உறவு முறைகளை பற்றி பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லிக்கொடுங்கள். அறிவியலுக்கு விரோதமாக ஒன்றும் செய்ய முடியாது. பிள்ளைகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.

இன்றைய இளைஞர்கள், நாட்டை ஆளக்கூடிய நல்லவர்களாக உருவாக்க வேண்டும். பிள்ளைகள் வெற்றி பெறும் போது அவர்களை பாராட்டுவதை விட, அவர்கள் தோல்வியடையும் போது தட்டிக்கொடுக்க வேண்டும். சாதாரண மனிதர்கள் தான் சாதனை படைத்தவர்களாக பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். சுயமாக முடிவெடுத்தால் வெற்றி நிச்சயம். எது சுலபம் என்று பார்க்காமல் கடின உழைப்பை நம்ப வேண்டும். எந்த ஒரு செயலும் முடியுமா? முடியாதா? என்று ஆராய்யாமல் முயற்சிக்க வேண்டும். தாய், தந்தையரின் நிலையை அறிந்து தெரிந்து முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்றார்.