செய்திகள்

மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் கிரீடம் திருட்டு! திருடியவர் சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியும் நடவடிக்கை இல்லை

யாழ்.மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் ஆலயத்தில் கடந்த வாரம் புதன்கிழமை பட்டப்பகல் வேளையில் எழுந்தருளியில் நிறுவப்பட்டிருந்த பஞ்சமுக விநாயகர் திருவுருவச் சிலையிலிருந்த சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான வெள்ளியிலான கிரீடம் மர்மநபரால் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த திருட்டுச் சம்பவம் பகல் 11.30 மணிக்கும் 12 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது. ஆலயக் குருக்கள் மற்றும் அவரது உதவியாளர்கள் உள்ளிட்டோர் ஆலயத்தில் நின்ற சமயம் குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஆலயத்தினரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி திருட்டுச் சம்பவம் அங்கு பாதுகாப்புக்காகப் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ள நிலையில் பொலிஸார் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாமை சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்குத் தெரிவிக்க வேண்டாமென பொலிஸாரால் ஆலயத்தினருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.