செய்திகள்

‘மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு’

மருத்துவர். சி. யமுனாநந்தா

தமிழர் பாரம்பரியத்தில் உடலை யோகநிலையில் பேண உணவுப் பழக்கங்களும், சுவாசப் பயிற்சிகளும் உதவின. இவை உடல், உள, ஆன்மீக, சமூக ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக அமைந்தன. பொதுவாக உணவே மருந்தாக அமைந்துள்ளமையை திருக்குறளில் தெளிவாகத் திருவள்ளுவர் எடுத்துக் காட்டுகின்றார்.

ஒருவர் அனுபவரீதியாக அறிந்த உணவுகளை உண்ணல் வேண்டும். தெரியாத உணவுகளை உண்ணுதல் ஆகாது. தூய்மையான உணவுகளை உண்பதனால் நோய்கள் ஏற்படாது எனத் திருவள்ளுவர் கூறுகின்றார்.

‘மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.’ (942)

ஒருவர் உண்ட உணவு செரித்து விட்டது என்பதை அறிந்த பின் உண்டால் அவருக்கு மருந்து ஏதும் தேவையில்லை.

மேலும் நாம் உண்ணும் உணவில் போசணைப் பெறுமானங்களின் அளவு குறைந்தாலும் நோய் வரும். இதனை இன்று மந்த போசணை என்கின்றோம். அதேபோல் அதிகளவு மாப்பொருள், கொழுப்பு என்பவற்றை எடுக்கும் போதும், உடற்பருமன் அதிகரிப்பு, சலரோகம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றது. ஆரோக்கியமான உணவுப்பழக்கவழக்கங்களை கடைப்பிடித்தல் இன்றியமையாததாகும். இனிப்பான உணவுகளை குறைத்தல் வேண்டும். அதேபோல் மாச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும் குறைவாக எடுத்தல் நல்லது. இயன்றவரை தாவர உணவுகளை எடுத்தல் நலமானது. தவறான உணவுப்பழக்கம் உணவுக்கால்வாய் தொடர்பான புற்றுநோய்களை ஏற்படுத்தும். சலரோக நோயினை ஏற்படுத்தும். இவற்றை அல்லூட்டம் என்கின்றோம். இதனைத் திருவள்ளுவர் அன்று கூறியமை நோக்கத்தக்கது. உணவே மருந்தாகும். அவ்வாறு மருத்துவக்குறைமிக்க உணவுகளை, மூலிகைகளை நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தவேண்டும்.

‘மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.’ (941)

வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய மூன்றும் உடலில் அதிகரித்தாலும் நோயுண்டாகும். குறைந்தாலும் நோயுண்டாகும். அதாவது உடல்சீர்திட நிலையில் இருத்தல் வேண்டும்.

‘அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து’ (944)

முன்னர் உணவு நன்கு செரிந்தபின் தன் உட்ம்பிற்கு ஏற்ற உணவினை நன்கு அறிந்து, பசியெடுத்த பின்னரே உண்ண வேண்டும்.

மிகப் பசித்து உணவு உண்ணும்போது உடலில் நோய் ஏற்படாது. இது உடற்பருமனைக் கட்டுப்படுத்தும். அனுசேப நோய்கள் ஏற்படாது. சலரோக நோய் உருவாதலைத் தவிர்க்கும். மேலும் முதலில் அதிகமாக உணவை உண்டால் பின்னர் உணவைக் குறைக்குமாறு திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார். இதனையே உடற்பருமனுள்ளவர்களுக்குத் தற்போது நாம் கூறும் உணவுக் கட்டுப்பாடு எனும் மருத்துவ ஆலோசனை ஆகும்.

ஏற்கனவே உணவு நன்கு செரித்த பின் அடுத்து உண்பதனையும் அளவோடு உண்ண வேண்டும். இது ஆயுளை அதிகரிக்கும்.

‘அற்றால் அளவற்ந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு’ (943)

இன்று விதம் விதமான உணவுகளை மக்கள் உண்கின்றனர். கொக்காகோலோ, கேஎவ்சி, பீஸா, ஹிரில் எனும் எரித்த இறைச்சி இவ்வாறும் மற்றும் பலவிதமான இனிப்புப் பண்டங்களும், நாகரீக மோகத்துடன் உண்ணப்படுகின்றன. தமிழர்களின் தொன்மையான உணவுப் பாரம்பரியங்கள் பழக்கத்தில் இருந்து விலகுகின்றன. இதனால் பல நோய்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் உணவுப்பண்டங்களின் தயாரிப்பு நிறையுணவாகக் காணப்படும்.

‘மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு’ (945)

உடலுக்கு ஏற்ற உணவை அறிந்து, அதையும் அளவோடு உண்டால் உயிருக்குத் துன்பம் தரும் நோய்கள் ஏற்படாது. அதாவது அளவோடு உணவை உண்டால் நோய் வராது. உணவைப் பக்குவப்படுத்துவதில் அளவுப் பிரமாணம் அவசியமானது. இன்று பணமிகுதி உடையோர் அதிக அளவில் உணவை உண்கின்றனர். விருந்துகள் வைத்து தமக்கு வேண்டிய ஏனையவர்களையும் அதிக உணவை உண்ணும் பாரம்பரியத்தை ஏற்படுத்தி நோய்நிலைக்கு ஆளாக்குகின்றனர். திருமண மண்டபங்களில் தாராளமாக வழங்கப்படும் குளிர்களி, குளிர்பானங்கள், பாயாசம் என்பன இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அவ்வாறே அலுவலகங்கள், நண்பர் கூழாம்களின் விருந்துகளும். இதனால் நோய் ஏற்படும் என்பதனைத் திருக்குறளில் காணலாம். இதனை இன்றைய மருத்துவமும் ஆதாரமாகக் கூறுகின்றது.

‘இழிவறிந்துண்பான் கண் இன்பம் போல் நிற்கும்
கழிபேர் இரையான் கண் நோய்.’ (946)

ஏற்ற உணவை மிதமாக உண்பவனிடத்தில் இன்பம் நிலைத்து இருப்பதைப்போல அதிக அளவு உண்பவனிடத்தில் நோயானது நிலைத்திருக்கும்.

எனவே உணவை அளவோடு உண்ணல் இன்பமானதாகவும், நோய் ஏற்படாத தன்மையதாகவும் இருக்கும். ஒருவன் தனது தேவை தெரியாது அதிக அளவு உணவை உண்ணும்போது நோய்நிலைக்கு ஆளாகின்றான். இதனால் இன்று வைத்தியசாலைகளில் போசணை ஆலோசனைச் சிகிச்சை நிலையங்கள் அமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சலரோக நோயாளிகள் சிறந்த உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் நோய் நிலையில் இருந்து சுகதேகியாக முடியும். இதனைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார் திருவள்ளுவர்.

‘தீயளவன்றித் தெரியான் பெரி துண்ணின்
நோயள வின்றிப்படும்’ (947)

பசித்தீயினால் அளவைக் கருத்தில் கொள்ளாமல் அதிக அளவு உணவை உண்டால் அளவில்லாத நோய்கள் வந்து சேரும்.

நோயினைத் தவிர்க்கும் வாய் நாடி என்பது நாம் உண்ணும் உணவில் இருந்தே தொடங்குகின்றது. உணவுப்பழக்கம், மருத்துவக் குணமுடைய மூலிகைகளின் பாவனை என்பன தமிழ் பாரம்பரிய மருத்துவத்தில் முதன்மையானது.

நோய் மூலத்தை கண்டறிந்து நோயினை தணிக்கும் மருத்துவத்தை செய்தல் வேண்டும் என்கின்றார் திருவள்ளுவர். இதனை இன்றைய மருத்துவத்திலும் அடிப்படையாக அமைகின்றது.

‘நோய் நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்’. (948)

தமிழ் மருத்துவத்தின் விஞ்ஞான அணுகுமுறையைத் திருக்குறள் இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்பே கூறியுள்ளது. இது தமிழரின் நாகரிகத்திற்கு ஓர் ஆழமான எடுத்துக்காட்டாகும். நோயினை ஆராய்ந்து நோய்க்கான காரணத்தை ஆராய்ந்து நோய் தீர்க்கும் வழிவகைகளை ஆராய்ந்து, நோயாளியின் உடலுக்கு ஏற்றபடி சிகிச்சை செய்வதே சிறந்த மருத்துவம்.

தற்போது கொரோனாத் தொற்றால் உலகம் பயந்துள்ள நிலையில் மருத்துவச் சேவை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை திருவள்ளுவர் சிறப்பாகக் கூறியுள்ளார்.

‘உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்’ (949)

நோய் உற்றவரின் வயது, நோயின் தன்மை மற்றும் நோய் பாதித்த காலம் என்பன கருதி மருத்துவ சிகிச்சை நிர்ணயம் செய்யப்படும். மேலும் நோயுற்றவன், மருத்துவன், நோய்க்கான மருந்து, மருந்தினை நோயாளிக்கு நேரம் தவறாது வழங்குபவர் என நான்கும் நோய் குணப்படுத்தலில் இன்றியiயாதவை. காசநோய்க்கான நேரடிக்கண்காணிப்பு சிகிச்சையில் இன்று இவை உலக சுகாதார நிறுவனத்தால் முன்வைக்கப்பட்டுள்ளன.

‘உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து’ (950)

தமிழர் பாரம்பரியத்தில் உணவுப் பழக்கவழக்கங்கள் நோயினை வராது காத்தது. உணவே தான் மருந்தாக இருந்தது. அவ்வகையில் இல்லாளின் சமையல் சிறப்பே நோயுற்ற வாழ்வுக்கான சிறந்த வழியாக அமையும் என்பதனையும் திருவள்ளுவர் மேற்கூறியவாறு மிகைபடக் கூறியுள்ளார். ‘மருந்தென வேண்டாம் யாக்கைக்கு’.