செய்திகள்

”மலையக மக்களை தரக்குறைவாக கூறி அரசியல் செய்யாதீர்”: ஜீவன் சபையில் ஆவேசம்

மலையக மக்களை தரக்குறைவாக பார்ப்பதை அந்த மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் எனவும், அந்த மக்கள் சகலவற்றிலும் முன்னேறியவர்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் சபையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற தேசிய ஆகக்குறைந்த சம்பள சட்டத் திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் பல்வேறு அரசியல்வாதிகளும் கருத்துகளையும் தமது நிலைப்பாட்டையும் வெளியிட்டுள்ளனர். மலையகத்தில் இருந்து மாத்திரமே இவ்வாறு சிறுமிகள் பணிக்கு வருவதாகவும் கூறியுள்ளனர். ஒரு இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இவ்வாறு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மலையகத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல. வறுமை காரணமாகவே பணிக்குச் சென்றுள்ளனர்.

மலையக மக்கள் தரம்குறைவாக எந்தவொரு பணியையும் செய்யவில்லை. தமது சொந்தக்காலில் நின்று குழந்தைகளுக்கு கல்வியை பெற்றுக்கொடுக்கின்றனர். ஆனால், இந்தச் சிறுமியின் மரணத்தைவைத்து பல அரசியல்வாதிகள் தமது அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

மலையக மக்கள் பட்டியினில் வாழ்கின்றனர். வறுமையில் வாழ்கின்றனர் என்ற பரிதாபம் அவசியமல்ல. இரத்தம் சிந்தி இந்நாட்டுக்கதாக உழைத்தமைக்காக கொடுக்க வேண்டிய மரியாதையையும் கௌரவத்தையும் அங்கீகாரத்தையுமே கோருகிறோம்.

இந்த சம்பவத்துக்கு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். சட்ட நடவடிக்கைகள் எடுக்கவில்லையென எவரும் கூற முடியாது.

‘எனது மரணத்துக்கு காரணம்’ – சுவரில் எழுத்தப்பட்டுள்ளதாக செய்திகளை அறிந்தேன். இறந்தப் பெண் எவ்வாறு அப்படி எழுதியிருக்க முடியும். அப்படியென்றால் காரணத்தையும் எழுதியிருக்க வேண்டும். ஆகவே, இந்தச் சம்பவத்தின் பின்புலத்தில் குற்றவாளிகளாக எவர் இருந்தாலும் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.
-(3)