செய்திகள்

மலையக மற்றும் முஸ்லிம் தலைவர்கள் பொது நிலைப்பாட்டுக்கு வரும் பட்சத்தில் இணைந்து பயணிப்பதில் எவ்வித தயக்கமும் இல்லை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஈழ தமிழ் மக்கள் இலக்கு வைத்து அழிக்கப்பட்டதை போன்று தற்போது முஸ்லிம் மக்களும் மலையக மக்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.நுவரெலியா – மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 600 குடும்பங்களுக்கு இன்று நிவாரண உதவிகளை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர், மலையக மற்றும் முஸ்லிம் தலைவர்கள் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வரும் பட்சத்தில் அவர்களுடன் இணைந்து பயணிப்பதில் எவ்வித தயக்கமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அனைத்தும், ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.கடந்த 73 ஆண்டுகளாக வடக்கு- கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.அத்தகைய அடக்குமுறைகள் தற்போது மலையக மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே மலையக தலைமைகள் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகள், இத்தகைய நிலைமைகளை உணர்ந்து தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் விதத்தில் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டால் இணைந்து செயற்படுவதில் எந்த பிரச்சினையும் கிடையாது என மேலும் தெரிவித்துள்ளார்.(15)