செய்திகள்

மஹிந்தவை கொலை செய்ய சதி தீட்டப்பட்டுள்ளதாம் : சிறைகளிலுள்ள விடுதலைப்புலிகளால் நடக்கலாம் என பொலிஸில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்ராஜபக்‌ஷவை  கொல்வதற்கான சதி முயற்சிகள் இடம்பெறுவதாகவும் சிறைகளில் உள்ள விடுதலைப் புலிகள் விடுதலை செய்யப்படுவதினூடாக அது நடக்கலாமெனவும் தெரிவித்து மஹிந்த தரப்பினரால் நேற்று பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 மக்கள் ஊடக மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளரான நிமல் வீரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷவின் சட்டத்தரணிகளால் இந்த முறைப்பாடு  மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தற்போது முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாம் இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து பார்த்தபோது நாட்டுக்குள்ளும் வெளியேயும் பல்வேறு தரப்பினர் பல்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை தெரிய வந்துள்ளது. மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் செயற்பாடுகளை அழிக்கும் அதவேளை அவரின் உயிரை அழிக்கும் முயற்சிகளிலேயே அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பண்டாரநாயக்க , விஜேகுமாரதுங்க ,லலித் அதுலத் முதலி மற்றும் ரணசிங்க பிரேமதாஷ ஆகியோரின் கொலைகளை போன்று மஹிந்த ராஜபக்‌ஷவை கொலை செய்யும் பின்னணிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுவிட்டன.  குறிப்பாக 2009ம் ஆண்டுக்கு பின்னர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய 300 பேர் கைது செய்யப்பட்டு சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.
உலகில் பயங்கரமான இயக்கமாக செயற்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்துள்ள அவர்கள் தற்கொலைக்கும் பழக்கப்பட்டவர்கள். இவர்களை அரசாங்கமும் மற்றும் வேறு தரப்பினரும் விடுதலை செய்ய முயற்சிக்கின்றனர். இதனூடாக மஹிந்த ராஜபக்‌ஷவின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தப்படலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.