செய்திகள்

மாகாணமட்ட தமிழறிவுப் போட்டியில் சாதித்த முத்துத் தம்பி மகா வித்தியாலய மாணவிகள்

யாழ்.திருநெல்வேலி முத்துத் தம்பி மகா வித்தியாலய முத்தமிழ் விழா அண்மையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் இ.பசுபதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த விழாவில் யாழ்.பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தம்பதியர் முதன்மை விருந்தினர்களாகவும்,கோப்பாய்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.சற்குணராசா சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டார்.

தமிழறிவு வினாவிடைப் போட்டியில் மாகாண மட்டத்தில் ஐந்தாம் பிரிவில் மூன்றாமிடத்தைப் பெற்றுப் பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவிகள் பதக்கம் அணிவித்தும்,சான்றிதழ் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் வடமொழிக் கூத்து நாடகப் போட்டியில் வலயமட்டத்தில் முதலாமிடம் பெற்ற மாணவ,மாணவிகள் விருந்தினர்களால் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை மட்டத் தமிழ்த் தின நிகழ்வில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவ மாணவிகளும் கௌரவிக்கப்பட்டனர். விசேட நிகழ்வாக பிரதம விருந்தினரால் பாடசாலைக்கான உத்தியோகபூர்வ இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. யாழ்.நகர் நிருபர்-