செய்திகள்

மாகாண சபை தொடர்பில் அங்கஜனுடன் ஜனாதிபதி மைத்திரி ஆலோசனை

வடமாகாண சபை விவகாரங்கள் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், வடமாகாண சபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாவட்டத் தலைவர்களின் கூட்டம் நேற்று திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. நாட்டின் அனைத்துப் பகுதி மாவட்டத் தலைவர்களும் இதில் கலந்துகொண்டிருந்தார்கள்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, பாராளுமன்றம் ஜூலை இரண்டாவது வாரத்தில் கலைக்கப்பட்டு ஆகஸ்ட் இறுதிப்பகுதியில் தேர்தல் நடைபெறும் எனத் தெரிவித்தார். இதற்காகக் கட்சியைத் தயார்படுத்த வேண்டிய பொறுப்பு மாவட்டத் தலைவர்களுக்கே உள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கூட்ட முடிவில் அங்கஜனைத் தனியாக அழைத்து உரையாடிய ஜனாதிபதி, வடமாகாண சபை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் உட்பட பல விடயங்கள் குறித்தும் உரையாடினார். இதன்போது இன்றைய தினம் தான் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவிருப்பது தொடர்பிலும் குறிப்பிட்ட ஜனாதிபதி, வடமாகாண சபை விடயங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டதாக அங்கஜன் தெரிவித்தார்.

இதேவேளையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டை ஜூன் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நடத்துவது தொடர்பாகவும் இந்தச் சந்திப்பின்போது அங்கஜனுடன் ஜனாதிபதி ஆலோசனை நடத்தியுள்ளார். யாழ் நகரில் தேசிய அளவில் நடைபெறும் இந்த மாநாட்டில் கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.