செய்திகள்

மிகவும் முக்கியமான இந்த தருணத்தில் பயணத்தடை கட்டுப்பாடுகளை தொடருமாறு ஜனாதிபதிக்கு இலங்கை மருத்துவ சங்கம் கடிதம்

நாடு முழுவதும் அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மீண்டும் பயணத்தடை அமுலாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் பயணத்தடை தளர்த்தப்படும் போதும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடானது தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.மேலும், மக்கள் ஒன்று கூடல்கள், பொது நிகழ்வுகள் உள்ளிட்டவற்றிற்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை 21ஆம் திகதி நீக்க வேண்டாம் எனக் கோரும் கடிதமொன்றை இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளது.மிகவும் முக்கியமான இந்தத் தருணத்தில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளைத் தொடருமாறு நாங்கள் ஆழ்ந்த கரிசனையுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம் என மருத்துவ சங்கம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.சில நாட்களிற்கு போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை நீக்குவது கூட ஏப்ரல் மாதத்தில் காணப்பட்ட நிலைமையை நோக்கி நாட்டை இட்டுச்செல்லும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.கடந்த மூன்று வாரங்களாக காணப்பட்ட போக்குவரத்துக் கட்டுப்பாடுகளால் கிடைத்த பலாபலன்களை இழக்க வேண்டிய நிலையேற்படும் எனவும் இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.(15)