செய்திகள்

மீண்டும் இனந்தெரியாத ஆயுததாரிகளா? மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் முயற்சியா? டக்ளஸ் கேள்வி

மீண்டும் இனந்தெரியாத ஆயுததாரிகள் தலைதூக்குகின்றனரா? கடந்த காலங்களில் இனந்தெரியாத நபர்களின் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளினால் எமது சமூகம் பட்டிருந்த வேதனைகள் ஏராளம். அந்த நிலை தற்போது மாறியுள்ள சூழலில் மீண்டும் இனந்தெரியாத ஆயுததாரிகள் தலைதூக்கியுள்ளமை எமது சமூகத்தை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தும் செயலாகவே உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, மண்டூர் பகுதியில் சமூக சேவையாளரான சத்தியனந்தன் மதிதயன் என்பவர் கடந்த 26ம் திகதி தனது வீட்டில் இருந்த நிலையில் இனந்தெரியாத ஆயுததாரிகளால சுட்டுக்; கொல்லப்பட்டுள்ளார் எனத் தெரியவருகிறது. இச் செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மீண்டும் எமது தாயகப் பகுதிகளில் இவ்வாறான செயல்கள் தொடராதிருக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன், மேற்படி கொலையுடன் தொடர்புடைய நபர்கள் இனங்காணப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட உரிய தரப்பினர் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இனந் தெரியாத நபர்கள் என்ற பீதி கடந்த காலங்களில் எமது மக்களை நிம்மதி இழக்கச் செய்திருந்தது. அதனை மீண்டும் தோற்றுவிக்க ஏதேனும் தீய சக்திகள் முயற்சித்தால் எமது சமுதாயம் அதனைத் தாங்கிக் கொள்ளக் கூடிய சூழ்நிலையில் இல்லை என்பதால் இதற்கொரு முற்றுப்புள்ளியை வைக்க அரசு முன்வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.