செய்திகள்

மீண்டும் ஜீவாவுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா

‘ஈ’ படத்துக்குப் பிறகு ஜீவா, நயன்தாரா இருவரும் மீண்டும் ஒரு படத்தில் ஜோடி சேருகிறார்கள்.

யான் படத்திற்குப் பிறகு ஜீவா ‘கவலை வேண்டாம்’ படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தை ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டிகே இயக்குகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹாவும் நடிக்கவிருக்கிறார். இப்படத்தையடுத்து ராம்நாத் இயக்கும் புதிய படத்தில் ஜீவா நடிக்க இருக்கிறார்.

ராம்நாத் ஏற்கெனவே கருணாசை வைத்து ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ எனும் படத்தை இயக்கியவர். இப்படம் காமெடி கலந்த ரொமன்டிக் படமாக உருவாக உள்ளது. படத்தை ஜீவாவின் தந்தையான ஆர்.பி,.செளத்ரியே தயாரிக்கிறாராம். இதில் ஜீவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறாராம்.

இதற்குமுன் ஜீவாவுடன், நயன்தாரா ‘ஈ’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2006-ல் ரிலீஸ் ஆனது. தற்போது 9 வருடங்களுக்குப் பிறகு ஜீவாவும், நயன்தாராவும் இணைந்து நடிக்க உள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.