செய்திகள்

மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பாரா?

எதிர்வரும் 22-ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 07.00 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிவிப்பில்,

அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் 22-ம் திகதி, சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறும். இதில் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தனது அறிவிப்பில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வராவதற்கான தடை ஜெயலலிதாவுக்கு நீங்கியுள்ளது. இதையடுத்து, அவர் முதல்வர் பதவியேற்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. 22-ம் திகதி நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சட்டப் பேரவை ஆளுங்கட்சித் தலைவராக (முதல்வராக) ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்படுவார். அதன் பிறகு, இதற்கான முறைப்படியான கடிதம் ஆளுநர் கே.ரோசய்யாவிடம் அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து, முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் பதவியை இராஜினாமா செய்வார்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் வரும் 22-ம் திகதியன்றே நிகழ்ந்து, அன்றையே தினமே முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்பார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.