செய்திகள்

மீனவர் பிரச்சினை: இலங்கை – இந்திய பேச்சுவார்த்தை இன்று

இந்திய – இலங்கை மீனவர் தொடர்பான இரு நாடுகளுக்கும் இடையிலான உயர் மட்டப் பேச்சுக்கள் இன்று நடைபெறவுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா ஆகியோருக்கு இடையில் இன்றைய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹாவின் வேண்டு கோளுக்கு அமைய இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இவ்விரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மீனவப் பிரச்சினை குறித்து விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

கடந்த காலங்களில் பல்வேறுப்பட்ட கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்ட போதிலும், இந்திய – இலங்கை மீனவப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு இதுவரை எட்டப்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவப் பிரச்சினையை நற்புறவுடன் தீர்த்துக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா கூறினார்.